வரும் ஜனாதிபதி தேர்தலில், தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தில் அவசரப்பட வேண்டாம் என்ற கோரிக்கை, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனிடம் இருந்து வந்திருக்கிறது.

இரா.சம்பந்தன் இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்று அடையாளப்படுத்த முடியாத நிலையில் இருப்பவர். ஏனென்றால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது செயலளவில் இல்லை. அதனை போட்டு உடைத்ததில் , அவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

15 ஆண்டுகளுக்கு முன்னர், முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போது, விடுதலைப் புலிகளிடம் இருந்த – தமிழ் மக்களின் தலைமைத்துவம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு கைமாற்றப்பட்டது.

அவ்வாறான கூட்டமைப்பை பாதுகாத்து, தனது தலைமைத்துவ ஆற்றலை உறுதி செய்திருக்க வேண்டியவர் இரா. சம்பந்தன். ஆனால் அவர் அதனைச் செய்யவில்லை. அதனால் கூட்டமைப்பு சிதைந்து சிதைந்து, சின்னாபின்னமாக்கியது.

அவரும் இப்போது, வெறுமனே திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடையாளத்துக்குள் சுருங்கி விட்டார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலும் இரா. சம்பந்தன் பொறுப்பு வாய்ந்த பதவியில் இல்லை. அங்கு ஆளுமை செலுத்தக் கூடிய நிலையையும் அவர் இழந்து விட்டார்.

அவரது முதுமையும், அவரை செயற்பாட்டு அரசியலில் இருந்து விலகியிருக்க வைத்திருக்கிறது.

இவ்வாறான நிலையில், ஜனாதிபதி தேர்தல் விடயத்தில், அவரது அணுகுமுறையும் பொறுமையும், தமிழ் மக்கள் மத்தியில் ஏற்புடையவையாக தென்படவில்லை.

அவர் இன்னமும் சிங்கள வேட்பாளர்களுடன் பேரம் பேசுகின்ற- இணக்கத்தை ஏற்படுத்துகின்ற நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார் என்பதை, உணர்த்திருக்கிறது, அவசரப்பட வேண்டாம் என்ற அவரது வேண்டுகோள்.

சிங்களவர் ஒருவரே ஜனாதிபதியாக வரக்கூடிய இந்த நாட்டில், தேசியக் கட்சிகள் இன்னமும் தங்களின் வேட்பாளரை அறிவிக்காத நிலையில், தமிழர்கள் தங்களின் நிலைப்பாட்டை அறிவித்து, குழப்பங்களை ஏற்படுத்தக் கூடாது என இரா. சம்பந்தன் குறிப்பிட்டிருக்கிறார்.

சிங்களக் கட்சிகளின் வேட்பாளர்கள் யார் என்பது இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்பது பாதி தான் உண்மை. அதாவது ஐ.தே.க.வும், பொதுஜன பெரமுனவும் தான் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

அவ்வாறே அறிவித்தாலும், அவர்கள் எடுக்கப் போகின்ற முடிவுக்கும், தமிழ் மக்கள் எடுக்கப் போகின்ற முடிவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

ஏனென்றால் தமிழ் மக்களை, அடிப்படையாக வைத்து, அல்லது அவர்களின் நலன்களை முன்னிறுத்தி, எந்த ஒரு சிங்கள வேட்பாளரும் கட்சிகளால் தெரிவு செய்யப்படுவதோ -அறிவிக்கப்படுவதோ இல்லை.

சிங்கள மக்கள் மத்தியில் யார் செல்வாக்கு செலுத்தக் கூடியவர் என்பதுதான் அங்கு ஆராயப்படும். சிங்கள மக்களின் ஆதரவை பெறக்கூடியவருக்குத் தான், வேட்பாளராகும் வாய்ப்பு கொடுக்கப்படும்.

அதைவிட தமிழ் மக்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளுகின்ற, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கப் போவதாக அறிவிக்கின்ற- எந்த சிங்கள வேட்பாளரும், சிங்கள மக்களால், ஆதரிக்கப்படுகின்ற நிலை இருக்காது என்பதும் தெளிவானது.

இந்தக் காரணத்தை முன்வைத்தே, மைத்திரிபால சிறிசேனவுடன், எழுத்து மூலமான உடன்படிக்கையை செய்து கொள்ளாமல் தவிர்த்திருந்தார் இரா.சம்பந்தன். அதன் விளைவு என்னவானது என்று அவருக்கு மறந்து போயிருக்கலாம்.

இவ்வாறான நிலையில், இரா.சம்பந்தன், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது, சிங்கள வேட்பாளர்கள் விடயத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்று அவர் கவலைப்படுவது தான் ஆச்சரியத்தை கொடுக்கிறது.

சிங்களக் கட்சிகளின் வேட்பாளர் யார்? தமிழ் மக்கள் தொடர்பான அவர்களின் நிலைப்பாடு என்ன? அவர்கள் முன்வைக்க போகும் தேர்தல் அறிக்கை எப்படிப்பட்டதாக இருக்கும்? என்பதை அறிந்து கொள்வதற்கு முன்னர் – தமிழர் தரப்பு அவசரப்படக் கூடாது என்பதே இரா. சம்பந்தனின் கருத்தாக தெரிகிறது.

சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அதிகாரப்பகிர்வினைக் கோரிவரும் தமிழர்கள் தொடர்பாக, நாட்டின் தலைமைப் பொறுப்பினை ஏற்க விரும்பும் சிங்கள வேட்பாளர்கள், தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றும், அவர் கூறியிருக்கிறார்.

இதுவரையில் எந்த வேட்பாளர் அவ்வாறு தமது நிலைப்பாட்டை பகிரங்கமாக வெளிப்படுத்தியிருந்திருக்கிறார்? அவர் தனது அரசியல் அனுபவத்தில் சிங்கள வேட்பாளர்களுடன் இரகசிய ஊடாட்டங்களில் ஈடுபட்டிருக்கலாம். ஆனால் வெளிப்படையாக எந்த ஒரு சிங்கள தலைவரும் தமிழ் மக்களுக்கான தீர்வு இதுதான் என்று கூறியதில்லை.

அத்தகைய தீர்வை வழங்குவதற்கான அர்த்தபூர்வமான -அர்ப்பணிப்பான முயற்சிகளில் இறங்கியதும் இல்லை. இவ்வாறான நிலையில், வரப்போகும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வரும் சிங்கள வேட்பாளர்கள், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு, இதுதான் தீர்வு என்று கூற முன் வருவார்கள் என்று எதிர்பார்ப்பது முட்டாள் தனம்.

இப்படி எதிர்பார்த்து எதிர்பார்த்துத் தான் , தமிழர்கள், இரா.சம்பந்தனின் தலைமையில் கடந்த 15 ஆண்டுகளை வீணாக கழித்திருக்கிறார்கள்.

இதற்குப் பின்னரும் கூட அவர் தமிழர்களுக்கான தீர்வு குறித்து சிங்கள வேட்பாளர்களிடமிருந்து நிலைப்பாடுகள் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறார் என்றால், அது அவரது இயலாமையை வெளிப்படுத்துகிறது.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், வேட்பாளர்களின் தேர்தல் அறிக்கைகளை ஆராய்ந்து விட்டு தமிழ் மக்கள் தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றால், வரலாற்றில் ஒருபோதும் பொது வேட்பாளரை நிறுத்தும் தீர்மானத்தை அவர்களால் எடுக்க முடியாது. அப்படி எடுப்பதை இரா. சம்பந்தன் விரும்பவில்லை என்று தான் அர்த்தம்.

ஏனென்றால் எந்த வேட்பாளரும் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு விட்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்வதில்லை. வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தான் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவார்கள்.

அப்போது தமிழர் தரப்பு பொது வேட்பாளரை நிறுத்த விரும்பினாலும் அது முடியாது. அதற்கான காலம் கடந்து போயிருக்கும்.

ஆக இரா.சம்பந்தன் தமிழர் தரப்பில் பொது வேட்பாளரை நிறுத்துகின்ற- தெரிவை கவனத்தில் எடுக்கவே தயாராக இல்லை என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இத்தகைய ஒரு வாய்ப்பை தமிழர்கள் பயன்படுத்தவே கூடாது என்று தான் அவர் எதிர்பார்க்கிறார்.

இதன் ஊடாக அவர் சிங்கள வேட்பாளர்களுடன் சமரசம் செய்வதற்கே எத்தனிக்கிறார். அதன் மீதே நம்பிக்கை கொண்டிருக்கிறார்.

தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயத்தில் அவசரப்படக் கூடாது என அவரிடத்தில் இருந்து வந்திருக்கின்ற கோரிக்கை, அவரது அரசியல் முதிர்ச்சியையோ, அனுபவத்தையோ வெளிப்படுத்தவில்லை. மாறாக அவரது குழம்பிய நிலையை, பலவீனத்தையே வெளிக்காட்டி இருக்கிறது.

இரா. சம்பந்தன் இன்னமும் தன்னை பலமான தலைவராக நினைத்துக் கொண்டிருந்தால், அது அவரது மிகப் பெரிய பலவீனம். ஏனென்றால் அவரைச் சுற்றி கட்டி எழுப்பி இருந்த பிம்பம் எல்லாமே நொறுங்கிப் போய்விட்டது.

அவர் இப்போது ஆயுதம் இல்லாமல் போர்க்களத்தில் நிற்கும் படைவீரனைப் போலவே நிற்கிறார். அவரால் அறிக்கைகளைத் தாண்டி எதையும் செய்ய முடியாது என்ற உண்மை கூட அவருக்கு புரியவில்லை.

கடைசியாக அவர் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருக்கிறார்.

“தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். தென்னிலங்கையில் உள்ள தலைவர்கள் உள்ளக சுயநிர்ணய உரித்தினை ஏற்றுக்கொள்ளா விட்டால், நாம் சர்வதேசச் சட்டங்களுக்கு அமைவாக, வெளியக சுயநிர்ணயத்தினைக் கோருவதற்கு இயலுமானவர்களாக இருக்கின்றோம் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன்” என்று அவர் கூறியிருக்கிறார்.

உள்ளக சுய நிர்ணய உரிமையை வழங்கா விட்டால் வெளியக சுயநிர்ணைய உரிமையை கோரும் உரிமை இருப்பதாக இரா.சம்பந்தன் குறிப்பிட்டிருப்பது, கேட்பதற்கு இனிமையானதாகத் தான் இருக்கிறது.

ஆனால், எந்த சிங்கள தலைவர் தமிழ் மக்களின் உரிமையை ஏற்றுக் கொள்வதாக இதுவரை கூறியிருக்கிறார்?

எந்தவொரு சிங்களத் தலைவராவது தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்வதாக அவருக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறார்களா?

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக் கொள்ளாத சிங்களத் தலைவர்கள் மத்தியில் இருந்து, அதனை ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் வாய்ந்த தலைவர் ஒருவர் தோன்றுவார் என இவ்வளவு காலத்துக்குத் தான் தமிழ் மக்கள் எதிர்பார்த்து காத்திருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார்?

அவரைப் போலவே தமிழர்கள் எல்லோரும் இலவு காத்த கிளிகளாக இருக்க வேண்டும் என்று இரா. சம்பந்தன் கருதுகிறார்.

அப்படி காத்திருப்பதற்கு எந்த காலஎல்லையை அவர் இறுதிக்கோடாக வரைந்து வைத்திருக்கிறார் என்பதையாவது கூறினால் நல்லது.

தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில், இரா.சம்பந்தனின் முடிவுக்காக யாரும் காத்திருப்பதாகத் தெரியவில்லை. அதனை அவர் புரிந்து கொண்டால், இப்படி கருத்துக்களை வெளியிட்டிருக் மாட்டார். பக்குவதாக ஒதுங்கியிருப்பார்.

-கபில்

Share.
Leave A Reply