இறைத்தூதர் இப்ராஹிம் தன் மகனின் உயிரைத் தியாகம் செய்ய முன்வந்ததை நினைவுக்கூரும் ஈத் அல்-அதா என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இப்ராஹிம் கிறிஸ்துவ மற்றும் யூத மதங்களில் ஆபிரஹாம் என அறியப்படுகிறார்.

இறைத்தூதர் இப்ராஹிம் ஒரு கனவு கண்டதாகவும், அதை அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தியாகக் கருதி, கீழ்ப்படிதலுக்காக தன் மகன் இஸ்மாயிலை பலியிடுமாறு சொன்னதாகவும் நம்பப்படுகிறது.

இதனை அவர் தன் மகனிடம் கூறிய போது அதை இஸ்மாயில் ஏற்றுக்கொண்டார். இப்ராஹிம் தன் மகனை கொல்லச் சென்றபோது அல்லாஹ் அவரை தடுத்து நிறுத்தி, மகனுக்கு பதிலாக பலியிடுவதற்கு செம்மறியாட்டை வழங்கியதாக நம்பப்படுகிறது.

இந்த பண்டிகையின் போது, உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் வெவ்வேறு விதமான கால்நடைகளை பலியிடுவதை சடங்காக கடைபிடித்துவருகின்றனர். வழக்கமாக, தனக்குத் தேவையானதை விட அதிக சொத்துகளை வைத்திருக்கும் ஒருவர், இந்த செயலை செய்வது கட்டாயம்.

கால்நடைகளை பலியிடுவது குறித்து மற்ற மதங்களில் உள்ள நடைமுறைகள் என்ன? விலங்குகளை பலியிடுவது குறித்து இந்து, யூத, கிறித்துவ மதங்கள் என்ன சொல்கின்றன?


யூத மதம்

இஸ்லாம் மதத்தின் வரலாற்றில், யூத மற்றும் கிறித்துவ மதங்களுடன் ஒத்துப்போகும் பல விஷயங்கள் உள்ளன.

யூத திருமறைகளில் பல்வேறு காலங்கள் மற்றும் இடங்களில் பலவிதமான பலியிடல்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளதாக, பிரிட்டனின் லியோ பேக் கல்லூரியின் கல்வித்துறை தலைவர் ரப்பி கேரி சோமெர்ஸ் கூறுகிறார்.

“இத்தகைய சடங்குகளை மேற்கொள்வதற்கான ஆலயங்கள் இப்போது இல்லை என்பதால், இப்போது பலியிடும் வழக்கத்தைக் கடைப்பிடிப்பதில்லை. அதற்கு பதிலாக, இத்தகைய தியாகங்களை நாங்கள் பிரார்த்தனையின் வாயிலாக நினைவுகூர்கிறோம்,” என்கிறார் அவர்.

டாக்டர் ரப்பி பிராட்லி ஷாவிட் ஆர்ட்சன், அமெரிக்க யூத பல்கலைக் கழகத்தின் துணைத்தலைவர் மற்றும் குருசார் யூத ஆய்வுகள் (Rabbinic ) குறித்த செக்லர் பள்ளியின், அப்னர் மற்றும் ரோஸ்லின் கோல்ட்ஸ்டைன் டீனின் தலைவராக உள்ளார்.

 


படக்குறிப்பு, சில குழுக்கள் யூதர்களின் புனித யாத்திரை திருவிழாக்களின் போது விலங்குகளை பலியிடும் சடங்கை இன்னும் கடைபிடிக்கின்றன.

“ரோமானியர்களால் இரண்டாம் கோவில் அழிக்கப்பட்டதிலிருந்து, யூத மதத்தில் பலியிடுதல் அனுமதிக்கப்படுவதில்லை. இது நிரந்தரமாக தடை செய்யப்பட்டதாக பெரும்பாலானோர் நம்பினாலும், சிலர் மெசியாவின் வருகைக்குப் பிறகு மீண்டும் பலியிடுதல் நடைமுறைக்கு வரும் என நம்புகின்றனர்,” என அவர் விளக்குகிறார்.

இரண்டாம் கோவில் என்பது, தற்போது ஜெருசலேமின் பழைய நகரில் அல்-அக்ஸா மசூதி அமைந்துள்ள கோவில் மலையை குறிப்பிடுகிறது.

இந்த கோவில் மீண்டும் கட்டப்பட்டால் தங்களால் விலங்குகளை பலியிட முடியும் என்ற நம்பிக்கையில், அக்கோவில் மீண்டும் கட்டப்பட வேண்டும் என யூதர்கள் பிரார்த்திக்கின்றனர்.


படக்குறிப்பு, ஏப்ரல் 22 அன்று ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் காணப்படுவது போல், சமாரியர்கள் இன்னும் பஸ்காவின் போது விலங்குகளை பலியிடுகின்றனர்.

இத்தகைய கோவில்கள் இல்லாததால் விலங்குகள் பலியிடுவதை பெரும்பாலான யூதர்கள் கடைபிடிக்கவில்லை என்றாலும், ஜெருசலேமில் உள்ள சமாரியர்கள் உள்ளிட்ட சில யூத குழுக்கள், பஸ்கா எனப்படும் யூத விழாவின்போது விலங்குகளை பலியிடுகின்றனர். மற்றவர்கள் விலங்கு பலியிடுவதற்கு நிகரான தொகையை தானமாக வழங்குகின்றனர்.

செம்மறியாடு, பசு, எருமை அல்லது ஆடு என எதுவாக இருந்தாலும் பலியிடப்படும் விலங்குகள், ‘கொசேர்’ (kosher) எனப்படும் யூதர்களின் உணவுக் கட்டுப்பாட்டுக் கொள்கையை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இதை விவரிக்கும் ஆர்ட்சன், “கொசேர் விலங்குகள் மட்டுமே பலியிடுவதற்கு அனுமதிக்கப்படும். அதில் சில தீயில் எரிக்கப்படும், சில பாதிரியார்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும், சில சமயங்களில் இந்த வரலாற்றை விவரிக்கும் பொருட்டு, யார் பலியிடுகின்றாரோ அவர்களின் குடும்பத்தாரால் உட்கொள்ளப்படும்” என்றார்.

நேரடியாக விலங்குகளை பலியிடுவது பரவலாக காணப்படும் நடைமுறை இல்லை என்றாலும், இறைச்சியை உண்பது பெரும்பாலான விழாக்களில் உள்ளடங்கிய ஒன்றாக உள்ளது. பலியிடுதலின் நோக்கத்தைப் பொறுத்து யூத சடங்குகளில் விலங்குகளை பலியிடுவது பல விதங்களில் நடைபெறுகிறது.

பெசா (விடுதலைப் பயணம்), ஷாவாட் (வாரங்களின் பண்டிகை), சக்கோட் (கூடாரத் திருவிழா) உள்ளிட்ட மூன்று யூத பண்டிகைகளிலும் விலங்குகளை பலியிடுவது முக்கியத்துவம் பெறுகிறது.

ரப்பி கேரி சோமெர்ஸ் கூறுகையில், ரோஷ் ஹஷன்னா (யூத புத்தாண்டு) மற்றும் யோம் கிப்பூர் ( கழுவாய் வழிபாட்டு நாள்) ஆகிய விழாக்களும் விலங்கு பலியிடல்களை உள்ளடக்கியுள்ளன.

இறைத்தூதர் ஆபிரஹாமின் பலியிடுதல் குறித்து யூத திருமறைகளிலும் வருகின்றன. எனினும், விலங்குகளை பலியிடுவதற்கான கட்டளை பின்னரே வருகின்றது. இது யூதர்களுக்கு வித்தியாசமான ஒன்றாக உள்ளது.


படக்குறிப்பு, பைபிளில் இப்ராஹிம் தனது மகனைப் பலியிடத் தயாராக இருந்ததை காணலாம். கிறிஸ்தவ மதத்தில் இப்ராஹிம் ஆபிரஹாம் என்று அழைக்கப்படுகிறார்.

யூத திருமறைகள், விவிலியத்தின் பழைய ஏற்பாட்டில் பல விஷயங்களில் ஒன்றாக உள்ளன.

“பழைய ஏற்பாட்டில் குறிப்பாக லேவியஸ் 17, இணைச்சட்டம் (Deuteronomy) ஆகியவை, எப்படி விலங்கு பலியிடப்பட வேண்டும் என்பதை விவரிக்கின்றன. அதாவது காலை மற்றும் மாலை வேலைகளிலும் பல்வேறு விழாக்களின் போதும் எப்படி நடத்தப்பட வேண்டும் என குறிப்பிடுகிறது,” என்கிறார், தாக்காவில் உள்ள கஃருல் கத்தோலிக்க தேவாலயத்தின் போதகர் டாக்டர் புரொஷாண்டோ டி ராபெய்ரோ.

அந்த காலத்தில், பலியிடல்கள் ஒரு குற்றத்திற்காக மனம் வருந்தும் விதமாகவும் எதிர்மறை மனப்போக்குகளுக்கு மன்னிப்பு கேட்கும் விதமாகவும் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால், இயேசு கிறிஸ்துவின் மரணம் உச்சபட்ச தியாகமாக கருதப்பட்டதால் இந்த நடைமுறை இப்போது கடைபிடிக்கப்படுவதில்லை. இயேசு ‘தேவ ஆட்டுக்குட்டியாக’ கிறிஸ்தவ மதத்தில் பார்க்கப்படுகிறார்.

படக்குறிப்பு, கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை ‘கடவுளின் ஆட்டுக்குட்டி’ என்று குறிப்பிடுகிறார்கள்.

பலியிடுவதற்கு எந்த மத ஏற்பாடும் இல்லை என்றாலும், பல சந்தர்ப்பங்களில் “ஒருவர் சபதம் செய்தாலோ அல்லது கடவுளுக்கு ஒரு வாக்குறுதி கொடுக்கப்பட்டாலோ, மிருக பலி வேறு வழியில் பின்பற்றப்படுகிறது”.

யூத தொடர்பைத் தவிர, படைப்பாளரின் பெயரில் விலங்குகளை பலியிடும் பாரம்பரியம் கிறிஸ்தவத்தில் இல்லை என்று டாக்டர் ரிபெய்ரோ குறிப்பிடுகிறார்.

எனினும், இறைச்சியை உண்பதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை. பஸ்கா எனும் யூத விழாவின் போது ஆட்டுக்குட்டியை உண்பது வழக்கமாக உள்ளது. இத்தாலியில் தான் இருந்தபோது, ஈஸ்டரின் போது ஆட்டுக்குட்டி இறைச்சியை உண்பது கிட்டத்தட்ட கட்டாயமாக இருந்தது என்று ரிபெய்ரோ கூறுகிறார்.

எனினும், கிறித்தவத்தில், மத காரணங்களுக்காக விலங்குகளை பலியிடும் யூத வழக்கமான கொர்பான் எனும் சடங்கு இல்லை.

 

இந்து மதம்

படக்குறிப்பு, இந்திய மாநிலமான அசாமில் உள்ள காக்யா கோவிலில் தியோதானி திருவிழாவின் போது ஒருவர் பலியிடப்பட்ட ஆட்டைப் பிடித்து நடனமாடுகிறார்.

இந்து மதத்தில் விலங்குகளை பலியிடுவது குறித்த விவாதங்கள் நடைபெறுகின்றன என்றாலும், பலதரப்பு இந்துக்களால் இந்த வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு இந்தியா அல்லது வங்கதேசத்தில் துர்க்கை பூஜை மற்றும் காளி பூஜை உள்ளிட்ட மத சடங்குகளின் போது விலங்குகள் பலியிடப்படுகின்றன.

“பண்டைய இந்து புராணங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதத்திலும், வேதங்களிலும் விலங்கு பலியிடுவது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது,” என, வங்கதேசத்தில் உள்ள சிட்டகாங் பல்கலைக்கழகத்தின் சமஸ்கிருத துறையின் உதவி பேராசிரியர் டாக்டர் குஷல் பரான் சக்ரபர்த்தி கூறுகிறார்.

“ரிக் வேதத்தில் பண்டைய இந்து மதம் குறித்த பகுதிகளில், பலியிடப்படும் விலங்குகள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது” என்கிறார் அவர்.

விலங்குகளை பலியிடுதல் வேத காலத்தில், கி.மு. 1500 மற்றும் கி.மு. 500க்கு இடைப்பட்ட காலத்தில் மிகவும் வழக்கமான ஒன்றாக இருந்ததாக நம்பப்படுகிறது. அந்த இறைச்சி கடவுளுக்கு படைக்கப்பட்டு, பின்னர் விருந்தளிக்கப்படுகிறது. எனினும், நவீன இந்தியாவில் விலங்குகளை பலியிடுவது குறித்து பல்வேறு விதமான கருத்துகள் நிலவுகின்றன.

பண்டைய கோவில்கள் சிலவற்றில் இன்னும் விலங்குகள் பலியிடப்படுவதாக, டாக்டர் சக்ரபர்த்தி கூறுகிறார். வங்கதேசத்தில் உள்ள தாகேஷ்வரி கோவில் மற்றும் இந்தியாவில் உள்ள திரிபுர சுந்தரி, காமக்யா உள்ளிட்ட கோவில்களில் விலங்குகள் பலியிடுவதை அவர் சுட்டிக்காட்டுகிறார்.

எனினும், இந்து மதம் குறித்த மற்றொரு நிபுணரான டாக்டர் ரோகினி தர்மபால், நவீன இந்தியாவில் பரவலாக விலங்குகள் பலியிடப்படுவதாக தான் அறியவில்லை என்கிறார்.

இந்து மதத்தில் நவீன நடைமுறைகளில் விலங்குகளை பலியிடுவது, ஆன்மிக முக்கியத்துவத்தைவிட, சுய-திருப்தி, போட்டி மனப்பான்மை அல்லது மகிழ்ச்சியை குறிப்பதாக சக்ரபர்த்தி கூறுகிறார். இது அதன் புனிதத்தன்மையை குறைப்பதாக அவர் உணர்கிறார்.

இந்தியாவில் உள்ள சில குழுக்கள் தாமாகவே விலங்குகளை பல்வேறு கோவில்களில் பலியிடுவதை நிறுத்தியுள்ளன. மத நடைமுறைகளுக்காக விலங்குகளை பலியிடுவதை நிறுத்த வேண்டும் என அவை வாதாடுகின்றன.

இலங்கையில் இந்துக்களால் விலங்குகள் பலியிடப்படப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply