ஆகஸ்ட் 8ஆம் தேதியன்று வெண்கல பதக்கத்திற்காக நடைபெற்ற ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் வெண்கலப் பதக்கத்தை வென்றது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.

ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் அணியை வீழ்த்தி பதக்கத்தை உறுதி செய்தது இந்திய அணி. ஆரம்பம் முதலே இரண்டு அணிகளும் பதக்கம் வெல்வதில் உறுதியாக இருந்தன. ஆட்டத்தின் முதல் பகுதி வரை இரு அணிகளும் எந்த கோல்களையும் எடுக்கவில்லை.

இரண்டாம் பகுதியில் முதல் கோலை பதிவு செய்தது ஸ்பெயின் அணி. 1-0 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வியின் விளிம்பில் இருந்த சில நிமிடங்களிலேயே சமன் செய்யும் வகையில் இந்தியா ஒரு கோல் அடித்தது.

இலக்கை நோக்கி மூன்றாவது ஆட்டம் துவங்கியது. ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்தியா இரண்டாவது கோலை பதிவு செய்தது. அதன் பின்னர் ஸ்பெயின் அணியினருக்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தும், இந்திய அணியின் சாதுர்யமான ஆட்டத்தால், ஸ்பெயின் அணி கோல் அடிப்பது தடுக்கப்பட்டு பதக்கம் உறுதி செய்யப்பட்டது.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் இந்தியாவுக்கான முதல் கோலை பதிவு செய்தார். இரண்டாவது கோலையும் அவர்தான் அடித்தார். இந்த பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இதுவரை அவர் 11 கோல்களை அடித்து அசத்தியுள்ளார்.

இதற்கு முன்பு அரையிறுதிப் போட்டியில் ஜெர்மனியுடன் மோதிய இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியைத் தழுவியது. அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொண்டு தோல்வியைத் தழுவியது ஸ்பெயின் அணி.

இந்திய அணியின் ஶ்ரீஜீஸுக்கு இது கடைசி சர்வதேச இறுதி போட்டி. பிரியாவிடை தரும் வகையில், அணியின் தலைவர் ஹர்மன்ப்ரீத் சிங் அவரை தோளில் தூக்கி வைத்து நடக்க, அவருக்கு அனைவரும் மரியாதை செலுத்தி போட்டி முடிவை மிகவும் நெகிழ்ச்சியாக மாற்றிவிட்டனர்.

இந்திய பிரதமர் வாழ்த்து

இந்திய அணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இந்திய தலைவர்கள் தங்களில் வாழ்த்துகளை சமூக ஊடகங்களில் பதிவு செய்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோதி எக்ஸ் பக்கத்தில், “எதிர்கால சந்ததியினர் அனைவரும் கொண்டாட இருக்கும் வெற்றி,” என்று குறிப்பிட்டார்.

“ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி பிரகாசமாக ஜொலிக்கிறது. தாய்நாட்டுக்கு வெண்கலப் பதக்கத்துடன் திரும்பி வருகிறது. ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இந்திய அணி பதக்கம் வென்றிருப்பது கூடுதல் சிறப்பு” என்றும் மேற்கோள் காட்டினார்.

வீரர்களுக்கு வாழ்த்துகளைப் பதிவு செய்த அவர், இந்திய ஹாக்கி அணியினருடன் ஒவ்வோர் இந்தியரும் உணர்வுப்பூர்வமாக இணைந்திருப்பதாகவும், இந்த வெற்றி இந்திய இளைஞர்கள் மத்தியில் இந்த விளையாட்டை மேலும் பிரபலமடைய வைக்கும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

படக்குறிப்பு, இந்திய அணியை வாழ்த்திய பிரதமர் நரேந்திர மோதி

பதக்கங்களை வென்று குவித்த ஹாக்கி அணி

இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஒலிம்பிக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை வென்று சாதனை புரிந்துள்ளது.

இதுவரை இந்திய ஆண்கள் ஹாக்கி அணி 12 பதக்கங்களை நாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது. 1936ஆம் ஆண்டு பெர்லினில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி தங்கம் வென்றது.

இன்றும் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வாக இது பார்க்கப்படுகிறது. நாஜி ஜெர்மனியில் நடைபெற்ற இந்தப் போட்டியைக் காண ஹிட்லர் நேரடியாக மைதானத்துக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவரை ஒலிம்பிக்கில் இந்தியா 8 தங்கப் பதக்கங்களைப் பெற்றுள்ளது. 1960இல் வெள்ளிப் பதக்கத்தையும், நான்கு முறை வெண்கலப் பதக்கங்களையும் இந்திய அணி வென்றுள்ளது.

இந்தியா இறுதியாக 1980இல் மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி வெண்கலம் வென்றது.

Share.
Leave A Reply