பங்களாதேஷில் நடந்த மாணவர்கள் போராட்டம் தற்போது வன்முறையாகி உள்ளது. வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு தப்பி வந்துள்ள நிலையில், அந்நாட்டின் வன்முறை மற்றும் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்தது உள்ளிட்டவற்றின் பின்னணியில் பாகிஸ்தானின் உளவு அமைப்பின் ஐ.எஸ்.ஐ இருப்பதாக இந்திய பாதுகாப்புத் தகவல்களை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெ ளியிட்டுள்ளன.
பங்களாதேஷ் வன்முறை மூலம் ஐ.எஸ்.ஐ அமைப்பு இந்தியாவையும் குறிவைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இந்தியாவில் தற்காலிகமாக தங்கியிருக்கும் ஷேக் ஹசீனா அதன்பிறகு பிரிட்டன் சென்று தனது சகோதரியுடன் அடைக்கலம் தேட உள்ளதாகக் கூறப்படுகிறது.
ஐ.எஸ்.ஐ என்பது பாகிஸ்தான் நாட்டின் அதிகாரபூர்வ உளவு மற்றும் புலனாய்வு அமைப்பாக உள்ளது.
இந்த அமைப்புதான் வங்கதேசத்தில் மாணவர்களை வைத்து பதற்றத்தை ஏற்படுத்தி அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை கவிழ்த்துள்ளதாக இந்திய புலனாய்வு செய்தியை மேற்கோள் காட்டி இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
‘ஐ.எஸ்.ஐ அமைப்பின் முக்கிய நோக்கம் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் அரசை கலைப்பதுதான். ஏனென்றால் ஷேக் ஹசீனாவின் கட்சி இந்தியாவை ஆதரிக்கிறது.
இதனை பாகிஸ்தான் விரும்பவில்லை. மாறாக ஷேக் ஹசீனாவுக்கு பதில் பாகிஸ்தான் நாட்டுக்கு ஆதரவு நிலைப்பாட்டில் இருக்கும் வங்களாதேஷ் தேசியவாதக் கட்சியை (பி.என்.பி) ஆட்சியை கொண்டு வருவதுதான் ஐ.எஸ்.ஐ- இன் நோக்கமாக உள்ளது.
அதாவது வங்கதேசத்தில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று ஐ.எஸ்.ஐ அமைப்பு செயற்பட்டு வருகின்றது.
ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை விட்டு விலகி நாட்டை விட்டு வெளியேற ஐ.எஸ்.ஐ அமைப்பை சேர்ந்தவர்கள் மாணவர் போர்வையில் செயற்பட்டுள்ளனர்’ என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.