உக்ரைன் ரஷியா போர் கடந்த 2022 பிப்ரவரி மாதம் முதல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்த போரில் ரஷிய ராணுவத்தில் இந்திய இளைஞர்கள் சேர்க்கப்பட்டு போரில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர்.
இதுதொடர்பாக அங்கு மாறியுள்ள இந்திய இளைஞர்கள் சிலர் தங்களை காப்பாற்றும்படி வீடியோ வெளியிட்டனர்.
இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் சமீபத்தில் இந்திய பிரதமர் மோடி ரஷியா சென்று அதிபர் புதினை சந்தித்தபோது ரஷிய ராணுவத்திலுள்ள இந்திய இளைஞர்களை பணியிலிருந்து விடுவிக்க வலியுறுத்தியிருந்தார்.
இதற்கு ரஷியா இசைவு தெரிவித்த நிலையில் இதுவரை 45 இந்தியர்கள் ரஷிய ராணுவத்தில் இருந்து விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்ப உள்ளனர்.
மேலும் 50 இந்தியர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என்று வெளியுறவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் விடுவிக்கப்பட்டவர்களில் தெலுங்கனா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 4 இந்தியர்கள் நேற்றைய தினம் [வெள்ளிக்கிழமை] இந்தியா திரும்பியுள்ளனர்.
ரஷியாவில் மாதம் ரூ.1 லட்சத்தில் வேலைவாய்ப்பு எனக்கூறி அழைத்துச்செல்லப்பட்ட இவ்விளைஞர்கள் உக்ரைன் போர் தொடங்கியதும் வலுக்கட்டாயமாக ரஷிய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுப் போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
ரஷிய ராணுவத்தில் தாங்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
காலை 6 மணி முதல் நாள் ஒன்றுக்கு 15 மணி நேரம் நாங்கள் வேலை செய்தோம், தூங்குவதற்கும் அனுமதிக்க மாட்டார்கள்.
மனிதாபிமானமற்ற சூழலில் நாங்கள் இருந்தோம். AK-12, AK-74, கிரெனைடுகள், வெடிகுண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களைக் கையாள எங்களுக்கு பயிற்சி அளித்தனர்.
குறைந்த உணவுடன் கடுமையான குளிரில் சுரங்கப்பாதைகளைத் தோண்டினோம். உடல் ரீதியான வலியுடன் மன ரீதியாகவும் எங்களுக்கு கடும் தொல்லைகள் கொடுக்கப்பட்டது.
எங்களின் செல்போன்கள் பறிக்கப்பட்டு வெளியுலக தொடர்பு துண்டிக்கப்பட்டது. போருக்கிடையில் தாங்கள் எத்தனை நாட்கள் உயிர்பிழைக்கப் போகிறோம் என்று அஞ்சினோம்.
துப்பாக்கி குண்டுகளின் சத்தம் இன்னும் எங்களின் காதுகளுக்கு இரைந்து கொண்டிருக்கிறது. வேலையின்போது நாங்கள் சோர்ந்துவிட்டால் கால்களை நோக்கி துப்பாக்கியால் சுடுவார்கள், போரில் நண்பர்கள் பலரின் மரணத்திலிருந்தும் தாங்கள் இன்னும் மீளவில்லை என்று தெரிவித்துள்ளனர். “,