ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஒரு அழகிய ஏரிக் கரையில் 17 ஹெக்டேர் நிலப்பரப்பில் கட்டப்பட்ட பிரமாண்ட பாரம்பரிய மாளிகை ஒன்று கேட்பாரற்றுக் கிடக்கிறது. இந்த மாளிகை துரதிர்ஷ்டவசமாக வரலாற்றில் மிகவும் கொடூரமான நபராக கருதப்பட்ட ஒருவருடையது. அவர் அடால்ஃப் ஹிட்லரின் நாஜி பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ்.
2000ஆம் ஆண்டு முதல் இந்த வீடு கைவிடப்பட்ட சொத்தாகி விட்டது. அதை பராமரிக்க அரசுக்கு பெரும் தொகை செலவாகும், யாரும் அதை வாங்க விரும்பவில்லை.
இருக்கும் ஒரே வழி, அதை யாருக்காவது கொடுப்பது மட்டும் தான்!
ஜோசப் கோயபல்ஸின் கோடைகால ஓய்வு இல்லமாக இருந்த இந்த வீட்டை என்ன செய்வதென்று தெரியாமல் நீண்ட காலமாக திணறிய பெர்லின் அதிகாரிகள் தற்போது ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
“பொருத்தமான முன்மொழிவுடன் யாரேனும் முன்வந்தால், பெர்லின் நிர்வாகத்தின் பரிசாக அதனை வழங்க தயாராக இருக்கிறோம்” என்று மாகாண சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் ஸ்டீபன் எவர்ஸ் கூறினார்.
பெர்லின் பெருநகரப் பகுதிக்கு வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த பாரம்பரிய மாளிகைக்கு கோயபல்ஸ் “போகன்சீ வில்லா” எனப் பெயரிட்டார். அந்த வீட்டின் அருகே போகன்சீ என்னும் அழகான ஏரி இருந்ததால் இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த வீடு இடிந்து விழுந்து கைவிடப்பட்ட சொத்தாக மாறிவிட்டது. அதன் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக பணம் செலுத்த வேண்டும் என்பதால் இது உள்ளூர் அரசாங்கத்திற்கு நிதிச் சுமையாகிவிட்டது,
இருப்பினும், ஒரு காலத்தில் பத்துக்கும் மேற்பட்ட அறைகளைக் கொண்ட ஆடம்பரமான மாளிகையாக இருந்த இந்த வீட்டை தற்போது அந்த வழியாக செல்லும் மக்கள் வேடிக்கை பார்த்து விட்டு செல்கின்றனர்.
ஐரோப்பிய யூதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு அமைப்பு, அதை தகவல் தொடர்பு மற்றும் அரசியல் உளவியலுக்கான மையமாக மாற்றவும், வெறுப்புப் பிரசாரத்தை எதிர்த்துப் போராடவும் முன்மொழிகிறது.
“திருப்திகரமான தீர்வு காணப்படவில்லை என்றால், மாளிகையை முழுவதுமாக இடித்து அகற்றிவிடலாம், இதற்கு உள்ளூர் அரசாங்கம் ஏற்கனவே தயாராக உள்ளது” என்று ஸ்டீபன் எவர்ஸ் கூறுகிறார்.
வில்லா போகன்சீ வரலாறு
போகன்சீ ஏரிக்கு அருகே ஒரு ஆடம்பரமான மாளிகை இருந்தது
ஜோசப் கோயபல்ஸ், ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர். அவர் நாஜி பிரசார அமைச்சராக பதவி வகித்தார்.
சிறப்பான சொற்பொழிவுக்காக அறியப்பட்ட ஒரு பேச்சாளரான அவர், யூத எதிர்ப்பு மற்றும் முழுமையான போர் சித்தாந்தத்தை பரப்பினார்.
இந்த மாளிகைக்கு அருகில் உள்ள போகன்சீ ஏரி, இயற்கை எழில் நிறைந்த பூங்காவால் சூழப்பட்டுள்ளது. இது 1936 இல் பெர்லின் நகர நிர்வாகத்தால் கோயபல்ஸுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. அந்த சமயத்தில் அவருக்கு 39 வயது.
மாளிகை பற்றி நாஜி அமைச்சர் கருத்து
ஸ்டீபன் எவர்ஸ்
போகன்சீ அருகே ஒரு ஆடம்பரமான மாளிகை இருந்தது, அதில் சுமார் 40 அறைகள், விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களுக்கான பத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், ஏர் கண்டிஷனிங் வசதி, நீர் சுத்திகரிப்பு நிலையம், 100 சதுர மீட்டர் கொண்ட ஒரு தனியார் திரையரங்கம் மற்றும் ஒரு பதுங்கு குழி ஆகியவை அதனுள் இருந்தன.
இந்த மாளிகை அவரின் ஆறு குழந்தைகள் மற்றும் மனைவிக்கு விடுமுறை இல்லமாக மாறியது. பெர்லினில் இருந்து வெகு தொலைவில், தொலைபேசி அழைப்புகள் இன்றி , கடிதங்களைப் பெறாமல் மன அமைதியாக இருப்பதாக தன் நாட்குறிப்பில் கோயபல்ஸ் எழுதியிருக்கிறார். அமைதியாக வேலை செய்வதிலும் வாசிப்பதிலும் மகிழ்ச்சியடைவதாகவும் அவர் எழுதியுள்ளார்.
இந்த மாளிகையில் நாஜிக் கட்சி தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் சமூக நிகழ்வுகளும் நடந்தன. கோயபல்ஸ், அதிக பாலியல் ஆசை கொண்டவர் என்று பெயர் பெற்றவர். அந்த இடம் அவரின் ஆசைகளை தீர்த்து கொள்ளும் ரகசிய காதல் கூடமாகவும் (love nest) பயன்படுத்தப்பட்டது.
இரண்டாம் உலகப்போரின் முடிவில், கோயபல்ஸ் தனது ஆறு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின்னர் அந்த போகன்சீ மாளிகை கிட்டத்தட்ட ஒரு வருடம் ரஷ்ய செம்படையால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. பின்னர் தற்காலிகமாக ராணுவ மருத்துவமனையாக செயல்பட்டது.
ஜெர்மனி பிரிக்கப்பட்ட காலகட்டத்தில், கிழக்கு ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவால் இந்த நிலம் கையகப்படுத்தப்பட்டது. அந்த அமைப்பு ஒரு பயிற்சி மையம் மற்றும் பல குடியிருப்புத் தொகுதிகளுடன் கூடிய ஒரு பள்ளியை நிறுவியது.
1990-இல் ஜெர்மன் மீண்டும் ஒன்றிணைந்த பிறகு, இந்த நிலம் பெடரல் மாகாணமான பெர்லினிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் பெர்லினால் அதைப் பயன்படுத்த முடியவில்லை.
ஜோசப் கோயபல்ஸ், ஹிட்லரின் நெருங்கிய கூட்டாளிகளில் ஒருவர்.
கடந்த காலத்தின் சுவடுகளை சுமக்கும் நிலத்தை என்ன செய்வது?
2015-ஆம் ஆண்டில், கட்டடத்தைப் பாதுகாக்க ஒரு மேம்பாட்டு சங்கம் நிறுவப்பட்டது. கல்விக்கான சர்வதேச முகமையாகவும் பயன்படுத்தப்பட்டது.
ஆனால் அந்த சில காலத்தில் அந்த திட்டம் கைவிடப்பட்டது. அதன் பின்னர் மாளிகையை மறுசீரமைக்கும் முயற்சியை பெர்லின் நிர்வாகம் கைவிட்டது.
இந்த முன்னாள் ஆடம்பர மாளிகைக்கு வெளியே, கோயபல்ஸ் தனது பிரசாரப் படங்களைத் திரையிட ஒரு திரையரங்கை நிறுவினார். தற்போது, அந்த பகுதிக்குள் நுழைய முடியாத அளவுக்கு புதர் மண்டிக் கிடக்கிறது.
ஜன்னல்களில் சிலந்தி வலை நிறைந்துள்ளது. மாளிகை முழுவதும் தூசி ஆக்கிரமித்துள்ளது. கட்டடங்கள் முழுவதுமாக சரிந்துவிடாமல் பராமரிக்க, உள்ளூர் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு $300,000 வரை செலவாகும்.
இந்த பாரம்பரிய மாளிகையை என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
“பெர்லின் இந்த கட்டடத்தை ஒருபோதும் ஒரு தனியாரின் கைகளில் கொடுக்காமல் இருப்பதற்கு இந்த நிலத்தின் வரலாறு முக்கிய காரணம். அது தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது” என்று அமைச்சர் ஸ்டீபன் எவர்ஸ் கூறினார்.
இந்த மாளிகையில் நாஜி தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் நடிகர்களுடன் சமூக நிகழ்வுகளும் நடந்தது.
எதிர்பாராத முன்மொழிவு
கட்டிடங்களில் ஜன்னல்களில் சிலந்தி வலைகள் நிறைந்துள்ளது. மாளிகை முழுவதும் தூசி ஆக்கிரமித்துள்ளது.
மாளிகையையும் நிலத்தையும் கொடுக்க பெர்லின் நிர்வாகம் தீர்மானித்ததால், ஒரு தோல் பராமரிப்பு மையத்தைத் திறக்க விரும்பிய ஒரு தோல் மருத்துவர், பல ரியல் எஸ்டேட் வணிகர்கள் இதுகுறித்து விசாரித்தனர்.
அவை எதுவும் பொருத்தமானதாக கருதப்படவில்லை என்று எவர்ஸ் கூறினார்.
`ரீச்ஸ்பெர்கர் இயக்கம் ’என்ற தீவிர வலதுசாரிக் குழுவும் ஆடம்பர மாளிகையை பெற முயன்றது. ஆனால், அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சித்ததற்காக அதன் சில உறுப்பினர்கள் விசாரணையை எதிர்கொண்டிருந்ததால், அவர்களின் கோரிக்கை உடனடியாக நிராகரிக்கப்பட்டது.
இவை அனைத்தையும் தாண்டி மிகவும் சுவாரஸ்யமான முன்மொழிவு ஒன்றும் முன்வைக்கப்பட்டது.
ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான யூத சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐரோப்பிய யூத சங்கம் (EJA), இந்த மாளிகையை சுதந்திரமான கருத்துகளை விவாதிக்கும் மையமாக மாற்றுவதற்கு முன்மொழிந்துள்ளது.
வெறுப்பு பிரசாரத்திற்கு எதிராக போராடுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதிலும் அது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய யூத சங்கம் (EJA) தலைவர் ரப்பி மெனசெம் மார்கோலின், பெர்லின் அமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதினார், கோயபல்ஸின் முன்னாள் மாளிகையை தகர்ப்பதற்கு தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி, அனைத்து வகையான வெறுப்புணர்வையும் எதிர்த்துப் போராடும் ஒரு ஆய்வு மையமாக அதை மாற்ற முன்மொழிந்தார்.
“முழுமையான தீமையைப் பரப்பிய அந்த இடத்தை நன்மையைப் பரப்புவதற்கான மூலாதாரமாக மாற்றுவோம். இது ஒரு முக்கியமான தார்மீக வெற்றியாக இருக்கும்” என்று ரபி மார்கோலின் கடிதம் எழுதினார்.
இந்த முன்மொழிவை கவனிக்கத்தக்கது என்று எவர்ஸ் கூறினார், ஆனால் இந்த பிரச்னை நிதி சம்பந்தப்பட்ட ஒன்று என்றும், தகுந்த தீர்வு கிடைக்காவிட்டால் அதனை இடிக்கும் முயற்சி செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.