முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க, ஒருமுறை தமக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலஞ்சமாக வழங்க முன்வந்ததாகவும், தான் பிரதமராக இருந்த காலத்தில் அதனை உடனடியாக நிராகரித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கணக்காளர்களின் 45ஆவது தேசிய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, இலங்கையில் நிலவும் ஊழல்கள் குறித்துப் பேசினார்.
“அது எனக்கு நடந்திருக்கிறது. எனது பாராளுமன்ற மேசைக்கு ஐந்து மில்லியன் டொலர்கள் கொண்டு வரப்பட்டது. அப்போதும் நான் பிரதமராக இருந்தேன்.
இதை எடுத்துக்கொண்டு இப்போது வெளியேறு என்று நான் சொன்னேன். எனது அரசில் இருந்த ஒரு அமைச்சரின் கணவரால் அது கொண்டு வரப்பட்டது.
நான் உன்னைக் கைது செய்து விடுவேன்.இப்போதே இங்கிருந்து வெளியேறு” என்று சொன்னேன். அப்போது இந்த நபருடன் சிங்கப்பூர் தொழிலதிபர் ஒருவரும் இருந்தார்.” என்று பண்டாரநாயக்க நினைவு கூர்ந்தார்.
ஊழலுக்குப் பழக்கப்பட்ட மூத்தவர்களின் மனதை மாற்றுவது சாத்தியமில்லை எனத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, எனவே சிறு வயதிலிருந்தே விழுமியங்களை வடிவமைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
“உங்களால் முடிந்தவரை திருடுங்கள், ஆனால் பிடிபடாதீர்கள்” என்று கூறும் ஒரு ஜனாதிபதி இங்கிருந்தார்.
அவர் இவ்வாறு அவர் தனது அமைச்சரவையிலும் தனது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி எம்.பி.க்களிடமும் கூறி வந்தார்.
“எல்லோரும் திருடினார்கள், யாரும் கைது செய்யப்படவில்லை. இந்த அமைப்புதான் எமது நாட்டை சீரழித்துள்ளது” என பண்டாரநாயக்க மேலும் தெரிவித்தார்.
தொழிலதிபர்கள் தமது திட்டங்களைப் பாதுகாக்க லஞ்சம் கொடுக்கிறார்கள் என்றால், பரவலான ஊழல் இறுதியில் தேசிய திவால் நிலைக்கு இட்டுச் செல்லும் என்று அவர் எச்சரித்தார்.
“நீங்கள் அந்த திட்டத்தை ஒருமுறை அல்லது இரண்டு முறை பெறலாம். ஆனால் அது முழு நாட்டின் நடைமுறையாக மாறும்போது, நாடு வங்குரோத்தடைந்து விடும் என்பதை நீங்கள் உணர மாட்டீர்கள்” என்று அவர் கூறினார்.