திருவண்ணாமலையில், காதல் மனைவியை 8 துண்டுகளாக வெட்டிக்கொன்ற கணவன், அந்த உடல் துண்டுகளை வீட்டில் இருந்து அப்புறப்படுத்தி கிருஷ்ணகிரி காட்டுப்பகுதியில் வீசியிருக்கிறார். கொலை நிகழ்த்தப்பட்டவிதம் பதைபதைக்க வைத்திருக்கின்றன.
திருவண்ணாமலை, பே கோபுரத் தெருவைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் கோபி (34).
இவரின் முதல் மனைவி கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து, திருவண்ணாமலை அரசுடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சரண்யா (29) என்பவரைக் காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார் கோபி.
இவர்களுக்கு ஒரு மகள், இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், 2-வது மனைவியுடனும் கோபிக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது.
கடந்த தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாள் இரவிலும், அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டிருக்கிறது.
அன்று இரவு வீட்டில் இருந்து சரண்யா திடீரென மாயமாகியிருக்கிறார். அவருக்கு நேர்ந்த கதி குறித்து அப்போது யாருக்குமே தெரிந்திருக்கவில்லை.
மறுநாள் `அம்மா எங்கே?’ என குழந்தைகள் கேட்டதற்கு, `சண்டைப் போட்டுக்கிட்டு அவள் அம்மா வீட்டுக்குப் போய்டாள்’ என்று மட்டுமே கோபி சொல்லி நாடகமாடியிருக்கிறார்.
கோபி
`அம்மா வந்துவிடுவார்’ என்கிற ஏதோவொரு நம்பிக்கையில் குழந்தைகளும் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு வழக்கம்போல் பள்ளிக்குச் சென்று வந்திருக்கின்றனர்.
இந்த நிலையில், சரண்யாவிடம் இருந்து போன் எதுவும் வராததால் அவரின் தாய் வீட்டார் நேற்று முன்தினம் சரண்யாவைத் தேடி வந்திருக்கின்றனர்.
வீட்டில் இருந்த குழந்தைகளிடம் கேட்டபோது, `உங்ககிட்ட தான் அம்மா வந்தாங்கனு அப்பா சொன்னார்’ என்று கூறியிருக்கின்றனர்.
இதனால், சந்தேகமடைந்த தாய் வீட்டார் உடனடியாக திருவண்ணாமலை நகரக் காவல் நிலையத்துக்குச் சென்று புகாரளித்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார், கோபியை விசாரிப்பதற்காக அவரின் வீட்டுக்குச் சென்றனர்.
அப்போது அவர் வீட்டில் இருந்து தப்பி ஓடிவிட்டார். வீட்டில் இருந்த கோபியின் தாய் சிவகாமியிடம் போலீஸார் கிடுக்கிப்பிடியாக விசாரித்தபோது, சரண்யா மாயமான விவகாரத்தில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.
சரண்யாவை துண்டுத் துண்டாக வெட்டி, கிருஷ்ணகிரி அருகேயுள்ள காட்டுப் பகுதியில் கொண்டு சென்று வீசியுள்ளதாக தெரியவந்தது.
சம்பவத்தின் தீவிரத்தை உணர்ந்த போலீஸார், தப்பி ஓடிய கோபியையும் தேடிப் பிடித்தனர். கோபியையும், அவரின் தாய் சிவகாமியையும் அழைத்துக்கொண்டு காட்டுப் பகுதிக்கு நேற்று விரைந்தனர்.
அங்கு 8 துண்டுகளாக வீசப்பட்டுக் கிடந்த சரண்யாவின் உடலை போலீஸார் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
சரண்யா
தொடர் விசாரணையில், சரண்யாவின் கொலையில் கோபியின் நண்பரான கார் டிரைவர் ஒருவருக்கும் தொடர்பிருப்பதாகவும் தெரியவந்தது.
அவரையும் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்பத் தகராறு காரணமாக, மனைவி சரண்யாவை தாக்கியபோது அவர் உயிரிழந்துவிட்டதாகவும், உடலை அப்புறப்படுத்துவதற்காக 8 துண்டுகளாக வெட்டியதாகவும், தனது தாயும், தனது நண்பனும் உடலை அப்புறப்படுத்தி வீசுவதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கோபியிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்பதை கண்டுபிடிக்கவும் போலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.