“பசியால் வாடும் பாலஸ்தீன மக்களுக்கு உணவுக்குப் பதிலாக மணல் மூட்டைகளை அனுப்பிய இஸ்ரேல் ராணுவத்தின் செயல் அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீன மக்களுக்கு இஸ்ரேல் ராணுவத்தினர் அனுப்பிய உணவுப் பொருள்களில் ஒன்றான சர்க்கரை பைகளில் வெறும் மணல் நிரப்பப்பட்டிருந்த சம்பவத்தின் காணொளி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், இச்சம்பவத்துக்கு சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் வலுத்துள்ளன.

பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் சமீபத்தில் காஸாவின் மக்கள்தொகையில் 6% மட்டுமே உணவுப் பொருள்கள் பெறுவதாக அறிவித்திருந்தது.

மேலும், இஸ்ரேலின் போர் முற்றுகையால் அத்தியாவசியப் பொருள்கள் நாட்டுக்குள் நுழைவதைக் கடுமையாகக் கட்டுப்படுத்தியுள்ளது.

காஸாவில் செப்டம்பர் மாதத்தில் மட்டும் 18 லட்சத்துக்கும் அதிகமாக மக்கள் கடுமையான பசியால் வாடிவருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

இதேபோல, நார்வேவைச் சேர்ந்த அகதிகள் கவுன்சில், காஸா மக்களுக்கு கிடைக்கும் 83 சதவீத மனிதாபிமான உதவிகளைத் தடுத்துவருவதால், காஸா மக்கள் மேலும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உணவு உரிமைக்கான ஐ.நா.வின் சிறப்பு ஆய்வாளர் மைக்கேல் ஃபக்ரி நவ.25 அன்று ஐ.நா அவையில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.

அந்த அறிக்கையில் முற்றுகையிடப்பட்ட பகுதியில் உள்ள உணவுப் பற்றாக்குறை மற்றும் மோசமான சுகாதார நிலைமைகள் இஸ்ரேலிய இராணுவத்தால், பாலஸ்தீனர்களின் உயிருக்கு எவ்வாறு கடுமையான அச்சுறுத்தல்கள் ஏற்படுத்துகின்றன என்பதைக் காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாதிரியான இஸ்ரேலின் நடவடிக்கைகளால் துப்பாக்கி குண்டுகளால் உயிரிழந்தவர்களைவிட, பசியால் அதிக பேர் பலியாகி உள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

காஸாவில் விவசாயம், துறைமுகங்கள், மீன்பிடிப்பு கப்பல்கள் அழிக்கப்பட்டதால், பாலஸ்தீனத்துக்கான உணவு விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனை பயன்படுத்தி இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனம் மற்றும் காஸாவில் உள்ள மக்களை கொன்று பழிவாங்குவதற்கு பசியை ஒரு அரசியல் மற்றும் ராணுவ ஆயுதமாக கையில் எடுத்துள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையிலான போரில் இதுவரை 44,282 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

மேலும், போரில் சிக்கி 1,40,880 பேர் காயமடைந்துள்ளனர். இன்னும் சிலர் கட்டட இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

Share.
Leave A Reply