பலூசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். தாதுப் பொருட்கள் மிகுந்த இந்த மாகாணத்தை, பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.

2004 ஆம் ஆண்டில் பலுசிஸ்தான் தனி நாடு கோரும் புரட்சிப் படையினரால், சீனாவின் உதவியுடன் கட்டப்பட்டுக் கொண்டிருந்த குவாதார் துறைமுகத்தில் பணியாற்றிய மூன்று சீனர்கள் கொல்லப்பட்டதுடன்;, நான்கு பேர் காயமடைந்தனர்.

2005 ஆம் ஆண்டில் பலுசிஸ்தான் அரசியல் தலைவர்களான நவாப் அக்பர் கான் புக்தி மற்றும் மீர் பாலச் மர்ரி ஆகியோர் பாகிஸ்தான் அரசுக்கு 15 அம்ச கோரிக்கையை அனுப்பினர்.

இந்த கோரிக்கைகளில் முக்கியமானதாக, பலுசிஸ்தானில் கிடைக்கும் கனிம வள வருவாயில் கனிசமான பங்கு பலுசிஸ்தான் மாகாண அரசுக்கு வழங்குதல் மற்றும் பலுசிஸ்தானில் உள்ள இராணுவ கட்டமைப்புகளுக்காக, பலுசிஸ்தான் மாகாணத்திற்கு பெருந்தொகை ஈட்டுத்தொகை வழங்குதல் போன்ற விடயங்கள் வலியுறுத்தப்பட்டிருந்தன.

ஆனால் இதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் அரசு, 2005 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 15 ஆம் திகதி பலுசிஸ்தானுக்கு ஹெலிகாப்டரில் இhhணுவத்தை அனுப்பியது.

இதன் போது இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பாகிஸ்தான் எல்லைப்பாதுகாப்புப் படையின் தளபதி மற்றும் துணைத் தளபதி ஆகியோர் காயமடைந்நதனர்.

மறுபுறம் 2006 ஆம் ஆண்டில், பலுசிஸ்தான் புரட்சிப்படைத் தலைவர் நவாப் அக்பர் கானை பிடிக்க வந்த, பாக்கிஸ்தான் இராணவ வீரர்களில் 60 பேர் மற்றும் 7 இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

இதற்கு பதிலளிப்பாக அப்போதைய பாக்கிஸ்தான் பிரதமரான பெர்வேஸ் முஷாரப்பின் கட்டளையால் பலுசிஸ்தான் பகுதிகளில் குண்டு மழை பொழியப்பட்டது. இந்த குண்டு வீச்சில் பலுசிஸ்தான் விடுதலைப் படைத் தலைவர் நவாப் அக்பர் கான் கொல்லப்பட்டார்.

இவ்வாறு பல்வேறு போராட்டங்களை எதிர்க்கொண்ட நிலையில், 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பலுசிஸ்தானின் முன்னாள் கலாத் சமஸ்தானத்தின் மன்னர் மீர் சுலைமான் தாவூது கான் தன்னை பலுசிஸ்தான் நாட்டின் மன்னராக அறிவித்துக் கொண்டதுடன், ஒரு அமைச்சரவையையும் நியமித்துக் கொண்டார்.

இதன் பின்னர் பலுசிஸ்தானில் நடைபெற்ற பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் 37 வீதமான மக்கள் தனி பலுசிஸ்தான் நாடு கோரிக்கைக்கு வாக்களித்தனர்.

இதனை தொடர்ந்து பல்வேறு கட்டங்களாக பலுசிஸ்தான் மீது அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதுடன், பல்வேறு பயங்கரவாத குழுக்களின் செயல்பாடுகளும் அங்கு அதிகரித்தன.

இந்த பின்னணியில் தனது மாகாணம் தனிப்பாதையில் செல்வதை அனுமதிக்காது இருக்கவும், மூலோபாய நலன்களின் மீதுள்ள எதிர்பார்ப்புகளின் அடிப்படையிலும் பலுசிஸ்தானை தனது கட்டுக்குள் வைக்க பாக்கிஸ்தான் தீவிரமான நடவடிக்கைளை எடுத்து வந்தது.

இதனடிப்படையில், நாட்டில் அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களின் பின்னணியில் பலுசிஸ்தானில் விரிவான இராணுவ நடவடிக்கை தொடர்பான பாக்கிஸ்தான் அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்புகள் பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க கவனத்தை ஈர்த்துள்ளன.

அனைத்து இராணுவ பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் உயர்மட்ட சிவில் தலைமைகளை உள்ளடக்கிய தேசிய செயல்திட்ட செயலணி, பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கைகளுக்கான அனுமதியை அங்கிகரித்துள்ளது.

இந்த நகர்வானது, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பலுசிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளால் அதிகரித்து வரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் பாக்கிஸ்தானின் ஒருங்கிணைந்த முயற்சியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

விரோதமான வெளி சக்திகளால் திட்டமிடப்பட்ட வன்முறைச் செயல்கள் மூலம் பாக்கிஸ்தானின் பொருளாதார முன்னேற்றத்தை சீர்குலைக்கும் நோக்கில், பொதுமக்கள் மற்றும் வெளிநாட்டினரை குறிவைக்கும் பயங்கரவாத குழுக்களை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நடவடிக்கையானது, பாதுகாப்பு சவால்களுக்கு பதிலளிப்பதாகவே உள்ளது.

குறிப்பாக பலுசிஸ்தான் விடுதலை இராணுவம், சீன நாட்டவர்கள் மற்றும் பாக்கிஸ்தானிய பாதுகாப்புப் படைகளை அதிகளவில் குறிவைத்து பயங்கரவாத குழுக்களால் தாக்கல்கள் நடத்தப்படுகின்றன.

மேலும் பாக்கிஸ்தானில், பலுசிஸ்தான் மாத்திரம் உயர்ந்த பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் மாகாணம் அல்ல என்பதை ஒப்புக்கொள்வது அவசியம்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் தெஹ்ரீக்-இ-தலிபான் பாக்கிஸ்தான் மற்றும் அதன் துணை குழுக்களின் போர்க்குணமிக்க நடவடிக்கைகளை காணமுடிகிறது. எனினும் புதிதாக அறிவிக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விவரங்கள், தரை அல்லது வான்வழித் தாக்குதல்களை இணைக்குமா அல்லது ஈரான் எல்லையில் உள்ள குறிப்பிட்ட மாவட்டங்களை குறிவைக்குமா என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், இந்த மூலோபாயம் சீனாவுடன் ஒருங்கிணைப்பை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதற்கான அறிகுறிகள் உள்ளன.

பலூச் போராளிக் குழுக்களுடன் தொடர்புடைய பல தாக்குதல்களைத் தொடர்ந்து சீனா தனது குடிமக்களுக்கான பாதுகாப்பு கவலைகளைக் கருத்தில் கொள்ளும் போது பாக்கிஸ்தானுடனான இந்த ஒத்துழைப்பானது மிகவும் பொருத்தமானதாகும்.

சுமார் ஒரு தசாப்தத்திற்கு முன்னரே இந்த போராளிகளுக்கு எதிராக கணிசமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாக்கிஸ்தானை சீனா வலியுறுத்தியதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அஸ்ம்-இ-இஸ்தேகாம் (Azm-e-Istehkam) என்ற இராணுவ நடவடிக்கை குறித்து தகவல்கள் வெளியானதும் பாக்கிஸ்தான் முழுவதும் குறிப்பிடத்தக்க விவாதங்களை ஏற்பட்டன.

அரசாங்கத்தின் நோக்கங்கள் குறித்து கேள்விகளும் எழுப்பப்பட்டது. இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில், புதிய உத்தியை அறிமுகப்படுத்துவதற்குப் பதிலாக, நடைமுறையில் உள்ள பயங்கரவாத எதிர்ப்புத் தாக்குதல்களை விரைவுபடுத்துவதே இந்த நடவடிக்கை என்று பாக்கிஸ்தான் அரச அதிகாரிகள் தெளிவுபடுத்தினர்.

மேலும் இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாக்கிஸ்தானின் எல்லைக்கு வெளியே செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கான ஆதரவு தளத்தை குறைக்கும் முயற்சியில் பிராந்திய நாடுகளின் இராணுவத்தை ஈடுபடுத்துவதே நோக்கமாக உள்ளது என கூறப்படுகிறது.

பலுசிஸ்தானை இலக்காகக் கொண்ட நடவடிக்கையானது அஸ்ம் -இ- இஸ்தேகாம் இராணுவ நடவடிக்கையின் கீழ் பின்பற்றப்படும் பரந்த மூலோபாயத்துடன் ஒத்துப் போவதாகத் தோன்றுகிறது.

இது பலுசிஸ்தான் முழுவதும் உளவுத்துறை சார்ந்த செயல்பாடுகளை வலியுறுத்துகிறது. இந்த அணுகுமுறை பலுசிஸ்தானுக்குள் உள்ள பயங்கரவாத குழுக்களை அழிக்கும் நோக்கில் கணிசமான அளவு துருப்புக்களை அனுப்பாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக, தீவிரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் பாக்கிஸ்தான் மற்றும் சீனா இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதாக தெரிகிறது.

பலுசிஸ்தான் நீண்டகாலமாக போர் பதற்றங்கள் தொடர்பான பிரச்சினைகளில் சிக்கியுள்ளது. மேலும் முந்தைய இராணுவ நடவடிக்கைகளின் பதற்றங்களை போக்குவதற்கு தவறிவிட்டன.

பலுசிஸ்தான் மாகாணத்தின் பரந்த பிரதேசமானது, பதுங்கியிருந்து தாக்குதல்கள் நடத்துதல் மற்றும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு எதிரான கட்டுப்பாட்டு உத்திகளுக்கான சவால்களை பாக்கிஸ்தான் இராணுவத்திற்கு முன்வைக்கிறது.

பாக்கிஸ்தானுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரானுடனான எல்லைகளுக்கு அருகாமையில் பயங்கரவாத குழுக்கள் நிலைக்கொண்டிருப்பதால் பல்வேறு வகையில் அந்த குழுக்கள் பயனடைகின்றன.

அதாவது இந்த பகுதிகளில் உள்ள மறைவிடங்களைப் பயன்படுத்தி, பாக்கிஸ்தான் படைகளின் எந்தவொரு பெரிய தரைவழித் தாக்குதலையும் எதிர்கொள்ள பயங்கரவாத குழுக்களுக்கு முடிகிறது.

பலுசிஸ்தானில் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாக்கிஸ்தான் தனது எல்லைகளுக்கு அப்பால் அமைந்துள்ள பலூச் போராளிகளின் நிலைகள் மீது அழுத்தம் கொடுப்பதில் சீனாவின் உதவியை நாடுவதில் மிகவும் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துள்ளது.

சீன அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் போது, ஆப்கானிஸ்தானில் இருந்து தோன்றிய பயங்கரவாத ஆதரவுக்கான ஆதாரங்களை பாக்கிஸ்தான் முன்வைத்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆப்கானிஸ்தானுக்கான சீனாவின் தூதுவர் பாக்கிஸ்தானுக்கு விஜயம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஆப்கானிஸ்தானுடன் தொடர்புடைய பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு பாக்கிஸ்தானுக்கு உதவுவதில் சீனாவின் ஈடுபாடு வளர்ந்துள்ளது. இந்த ஒத்துழைப்பு பலுசிஸ்தானில் ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது,

ஏனெனில், சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வார திட்டம் மற்றும் சீனாவின் பரந்த ஒரு பாதை ஒரு மண்டலம் முன்முயற்சி ஆகிய இரண்டிற்கும் பலுசிஸ்தான் முக்கியமான ஒரு பிராந்தியமாகும்.

இறுதியில், பலுசிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தற்போதுள்ள பயங்கரவாத எதிர்ப்பு உத்திகளில் இருந்து விலகுவதைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றாலும், தீவிரவாத ஆதரவு வலையமைப்புகளைத் தனிமைப்படுத்தும் நோக்கில் பிராந்திய முயற்சிகளுடன் இணைந்து இராணுவ முயற்சிகளை மேம்படுத்த பாக்கிஸ்தான் அதிகாரிகளின் புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பை இது குறிக்கிறது.

இவ்வாறானதொரு நிலையில், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைக்கு முக்கியத்துவம் அளித்து பாக்கிஸ்தானும் சீனாவும் கூட்டு இராணுவ பயிற்சியைத் தொடங்கியுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீன இராணுவங்கள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தில் இத்தகைய பயிற்சி நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.மூன்று வாரங்களுக்கு நடத்தப்படும் இப்பயிற்சியில் சீனாவைச் சேர்ந்த சுமார் 300 இராணுவ சிப்பாய்கள் கலந்து கொண்டுள்ளனர்.

தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக புதிய இராணுவ தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள நிலையிலேயே இந்த பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

இந்த முன்னேற்றங்களின் வெளிச்சத்தில், பாக்கிஸ்தானின் அரசியல் நிலப்பரப்பில் உள்ள பங்குதாரர்கள் தொடர்பிலான வெளிப்படையான உரையாடல்களின் அவசியம் உணரப்படுகிறது.

இத்தகைய விவாதங்கள் அரசாங்க உத்திகளை தெளிவுபடுத்துவது மட்டுமல்லாமல், பயங்கரவாத குழுக்களின் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்களின் நம்பிக்கையை வளர்க்கும் என்பதில் ஐயமில்லை.

(லியோ நிரோஷ தர்ஷன்)

Share.
Leave A Reply