பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமிழ்த் தேசிய அரசியலில் பலத்த அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. யாழ்.தேர்தல் மாவட்டத்திலும், வன்னி தேர்தல் மாவட்டத்திலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியடைந்ததே இதற்கு காரணம்.

யாழ்ப்பாணத்தில் மூன்று ஆசனங்களையும் வன்னியில் இரண்டு ஆசனங்களையும் பெற்று இரு மாவட்டங்களிலும் முதன்மைக்கட்சியாக வந்துள்ளது. இது தேசிய மக்கள் சக்தியே எதிர்பாக்காத வெற்றியாகும்.

வாக்குகளை கணித ரீதியாக கணிப்பிட்டுப் பார்த்தால் தேசிய மக்கள் சக்தி தமிழ்த் தேசிய வாக்குகளை பெரிதாக உள்ளீர்க்கவில்லை. தமிழ்த் தேசிய வாக்குகளுக்கு வெளியே இருந்த டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் வாக்குகளையே உள்ளீர்த்திருக்கின்றது. தமிழ்த் தேசிய வாக்குகளில் 15,000 வரையிலான வாக்குகளையே உள்ளீர்த்திருக்கின்றது

தமிழ்த் தேசியக் கட்சிகள் பிரிந்து போட்டியிட்டதனாலேயே அதிக ஆசனங்களை பெறக்கூடியதாக இருந்தது. வீட்டிற்கு விழுந்த வாக்குகளையும், சங்கிற்கு விழுந்த வாக்குகளையும், தவராசா தலைமையிலான சுயேச்சைக் குழுவின் வாக்குகளையும் சேர்த்து கூட்டினால் தேசிய மக்கள் சக்திக்கு விழுந்த வாக்குகள் குறைவானவை.

இந்த மூன்று தரப்பும் பழைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் தேசிய மக்கள் சக்திக்கு ஒரு ஆசனம் மட்டுமே கிடைத்திருக்கும். போனஸ் ஆசனம் உட்பட மூன்று ஆசனங்கள் கூட்டமைப்புக்கு கிடைத்திருக்கும்.

தேர்தலில் தமிழரசுக் கட்சி 63,327 வாக்குகளையும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 22513 வாக்குகளையும் தவராசா தலைமையிலான சுயேட்சைக் குழு 7,496 வாக்குகளையும் பெற்றிருந்தது. மூன்று தரப்பின் வாக்குகளையும் கூட்டினால் 93,336 கிடைத்திருக்கும். தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளையே பெற்றிருந்தது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும், தமிழ் மக்கள் கூட்டணி பசுமாடு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு என்பவற்றின் வாக்குகளையும் கூட்டினால் ஐந்து ஆசனங்கள் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கும் ஒரு ஆசனம் மட்டும் தேசிய மக்கள் சக்திக்கும் கிடைக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டிருக்கும்.

தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 27,986 வாக்குகளையும, தமிழ் மக்கள் கூட்டணி 13,295 வாக்குகளையும், மருத்துவர் நந்தகுமார் முயற்சியினால் பசுமாடு சின்னத்தில் போட்டியிட்ட சுயேச்சைக் குழு 1,262 வாக்குகளையும் பெற்றிருந்தது.

வன்னி தேர்தல் மாவட்டத்திலும் இதேநிலைதான். அங்கு தமிழரசுக் கட்சிக்கு 29,711வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. அதேவேளை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 21,102 வாக்குகள் அளிக்கப்பட்டன.

இரண்டையும் கூட்டினால் 50,813வாக்குகள் கிடைத்திருக்கும். இது தேசிய மக்கள் சக்தி பெற்ற வாக்குகளை விட அதிகமானது.

தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளைப் பெற்றிருந்தது. எனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக போட்டியிட்டிருந்தால் போனஸ் ஆசனம் கூட்டமைப்புக்கே கிடைத்திருக்கும். முதன்மை நிலையைப் பெற்றிருக்கலாம். கூட்டாக பிரசாரம் செய்தால் 3 ஆசனங்களைப் பெற்றிருக்க முடியும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து ஒரு சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் தேசிய மக்கள் சக்தி அளிக்கப்பட்ட வாக்குகளும் வெகுவாகக் குறைந்திருக்கும்.

எனவே தேசிய மக்கள் சக்திக்கு ஆசனங்கள் அதிகம் சென்றமைக்கு காரணம் தமிழ்த் தேசியக் கட்சிகளே தவிர தமிழ் மக்கள் அல்ல. கட்சிகளினதும், தனிப்பட்டவர்களதும் நலன்களை முதன்மைப்படுத்தி ஒருங்கிணைந்த அரசியலை மேற்கொள்ளத் தவறியதால் ஏற்பட்ட விளைவு தான் இதுவாகும்.

இந்நிலைமைக்கு இருதரப்புகள் பொறுப்புக்கூற வேண்டும். ஒன்று சுமந்திரன். இரண்டாவது கஜேந்திரகுமார். இதில் பிரதான குற்றவாளி சுமந்திரன் தான். இங்கு அவர் தனது தனிப்பட்ட அரசியல் நலங்களுக்காக முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சிதறடித்தார். பின்னர் தமிழரசுக் கட்சியை சிதறடித்தார். இதன் மூலம் மொத்த தமிழ்த் தேசிய அரசியலுக்கும் பலவீனத்தை ஏற்படுத்தினார்.

கட்சியின் மத்திய குழுப் பெரும்பான்மையை தனக்கு சாதகமாகக் கொண்டு முழுக்கட்சியையும் பலவீனப்படுத்தும் செயற்பாட்டை முன்னெடுத்தார. தனக்கு சாதகமானவர்களைக் கொண்டே வேட்பாளர் பட்டியலை நிரப்பினார். யாழ்ப்பாணத்திற்கான வேட்பாளர் பட்டியலில் சிறிதரன், இளங்கோவன், ஆர்னோல்ட்டைத் தவிர ஏனைய 6 பேரும் சுமந்திரன் சார்பானவர்களாகவே இருந்தனர். அந்த ஆறு பேரும் தங்களுக்கு வாக்குக்கேட்காமல் சுமந்திரனுக்கே வாக்குக் கேட்டனர்.

இந்த இடத்தில் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட குழு சற்று புத்திசாலித்தனமாக நடந்து கொண்டது. அங்கும் சாணக்கியனுக்கு சார்பானவர்கள் சாணக்கியனுக்கு எதிரானவர்கள் என்று இரண்டு குழுக்கள் இருந்தன.

அவர்கள் தங்களுடைய முரண்பாட்டை ஒருபுறம் தள்ளிவிட்டு ஐக்கியமாக தேர்தலில் போட்டியிட்டதனால் மாவட்டத்தில் முதன்மை நிலையை அடைந்தனர். இந்தத் தடவை வடக்கு தமிழ்த் தேசிய ஒருமைப்பாட்டை காட்டவில்லை. கிழக்கு ஒருமைப்பாட்டை காட்டியது. இதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியலின் மானத்தை கிழக்கு குறைந்தளவிலாவது பாதுகாத்தது.

ஜனாதிபதி தேர்தலில் வடக்கு தாயக ஒருமைப்பாட்டை நிரூபித்தது. கிழக்கு மகன் ஒருவருக்கு வடக்கு 1,50,000 வரையிலான வாக்குகளை வழங்கியிருந்தது. அதன் பிரதிபலிப்பை பாராளுமன்றத் தேர்தலில் கிழக்கு காட்டியது. இதற்காக அனைத்து தமிழ்த் தேசிய சக்திகளும் கிழக்கிற்கு நன்றி கூற கடமைப்பட்டவர்களாக உள்ளனர்.

இரண்டாவது கஜேந்திரகுமார். தமிழ்த்; தேசியக் கூட்டமைப்பு மீதும் பின்னர் தமிழரசுக் கட்சி மீதும் அதிருப்தி தமிழ் மக்களிடம் நீண்ட காலமாகவே நிலவி வந்தது. இந்த அதிருப்தி காரணமாக ஒரு மாற்றுச்சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே தமிழ் சிவில் சமூக மையம் தமிழ் மக்கள் பேரவை போன்ற அமைப்புக்கள் உருவாகியிருந்தன.

இவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனேயே அதிக நெருக்கத்தை கொண்டிருந்தன. இந்த ஆதரவுகளை கட்டியெழுப்பி தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டும் பணியை முன்னணி செய்திருக்க வேண்டும்.

இதற்கு மாறாக தமிழ் மக்கள் பேரவை சிதைந்து போவதற்கு முன்னணியும் ஒரு காரணமாகியது. தமிழ் மக்கள் பேரவை உயிர்ப்போடு செயற்பட்டிருந்தால் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது இலகுவாக இருந்திருக்கும்.

பொதுவாகவே இச்செயற்ப்பாடுகளினால் ஒருங்கிணைந்த அரசியலுக்கு பொருத்தமற்றகட்சி என்ற பெயரை முன்னணி ஈட்டிக்கொண்டது. ஒருங்கிணைந்த அரசியலென வரும்போது நூறுசதவீதம் ஒரு கட்சியின் கருத்துகளே மேல் நிலையில் நிற்கும் எனக்கூற முடியாது. அங்கு விட்டுக் கொடுப்புகள் அவசியம். முன்னணியிடம் அது மருந்திற்குகூட இல்லை.

தேசம் என்று வரும்போது அதில் நல்லவர்களும் இருப்பார்கள. கெட்டவர்களும் இருப்பார்கள். அரைத்தேசியக்காரர், கால்தேசியகாரர், முக்கால் தேசியக் காரர்களும் இருப்பார்கள். தேசமாகத் திரட்டல் என்பது அவர்களையும் இணைத்தே மேற்கொள்ள வேண்டிய பணியாகும். தனியொரு கட்சியினால் மட்டும் மக்களை தேசமாகத் திரட்ட முடியாது. ஜே.வி.பி.கூட ஒரு தனிக்கட்சியாக இருக்கும்போது சிங்கள மக்களை ஒருதேசமாகத் திரட்ட முடியவில்லை.

அது பலபடிகள் கீழே இறங்கி தேசிய மக்கள் சக்தியை உருவாக்கிய பின்னரே சிங்கள மக்களை ஒருதேசமாக திரட்ட முடிந்தது. இதனை உருவாக்குவதற்காக கொள்கை நிலைப்பாட்டிலும் பல நெகிழ்ச்சியைக் காட்டியது. பல்வேறு சிவில் தரப்புகளையும் இணைத்து பரந்துபட்ட கூட்டணியை உருவாக்கியது.

இத்தனைக்கும் ஜே.வி.பி ஆரம்பகாலம் தொட்டு ஒரு அரசியல் கட்சியாக மட்டும் அது இருக்கவில்லை. ஒரு அரசியல் இயக்கமாக இருந்தது. தேர்தல் அரசியலுக்கு அப்பால் பல்வேறு பணிகளை அது முன்னெடுத்து வந்தது. இந்த அரசியல் இயக்கத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிதான் தேசிய மக்கள் சக்தி.

இதேபோன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களையும் நூற்றுக்கு மேற்பட்ட உள்ளுராட்சிச் சபை உறுப்பினர்களையும் முதலீடாக வைத்து முன்நோக்கிச் சென்றிருக்க வேண்டும்.

இதற்கு மாறாக விருப்பு வாக்கு நெருக்கடியால் வந்த கட்சியின் உட்பிரச்சினையைக் கூட அதனைத்தீர்க்க முடியவில்லை. கட்சி இரண்டாக பிளவுபட்டது. இப்பிளவினை தடுப்பதற்காக முயற்சி செய்த சிவில் தரப்பிற்கும் முன்னணி போதியளவு ஒத்துழைப்பை வழங்கவில்லை.

முன்னணி, இத்தேர்தலில் தமக்கு 4 ஆசனங்கள் கிடைக்குமென எதிர்பார்த்தது. கஜேந்திரகுமார் அதனை பல சந்தர்ப்பங்களில் கூறியிருந்தார். வன்னியிலும்; ஒரு ஆசனம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தேர்தல் முடிவுகள் உண்மையை வெளிப்படுத்தின.

கடந்த தேர்தலில் 54,000 வரையான வாக்குகளைப் பெற்றவர்கள் இந்தத் தேர்தலில் 27,986 வாக்குகளையே பெற்றிருந்தனர். ஆதரவுத் தளம்சரி அரைவாசியாகக் குறைந்திருந்தது. முன்னணி இதிலிருந்து பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். கொள்கை நிலைப்பட்ட கட்சி என்ற வகையில் பாடங்களை கற்றுக் கொண்டால் முன்னே செல்வதற்கு வாய்ப்புகள் உண்டு.

ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நிலை மிகப்பரிதாபமானதாகும். தமிழ்ப் பொதுவேட்பாளர் விவகாரம் அவர்களின் மதிப்பை சற்று உயர்த்தியிருந்தவேளை அதனை தொடர்ச்சியாக பேணியிருக்க வேண்டும். அவர்கள் அதனைப் பேணத்தவறி விட்டனர். சங்கு சின்னத்தை பயன்படுத்துவதன் மூலம் பொது வேட்பாளருக்குரிய வாக்குகளை மடை மாற்றலாம் என்ற கனவு வெறும் கனவாகவே போய்விட்டது.

பொதுவேட்பாளர் விவகாரத்திலும் அதில் செயல்பட்ட கட்சிகள் அனைத்தும் விசுவாசமாக செயல்பட்டன என்று கூறமுடியாது. ஆரம்ப காலங்களில் செல்வம் அடைக்கலநாதனும், சித்தார்த்தனும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கும், சிங்கள வேட்பாளருக்கும் இடையே ஒழித்து விளையாடினர்.

கடைசி நேரத்தில் சில ஒத்துழைப்புக்களை வழங்கினர் என்பது உண்மையே! கட்சியின் அடுத்த மட்ட அணியினர் ஒத்துழைப்பினை வழங்கியிருந்தனர். ஏனைய கட்சிகளின் பங்களிப்பு வலுவாகவே இருந்தது. தமிழரசுக் கட்சியின் ஒரு பிரிவினரின் பங்கும் குறைத்து மதிப்பிடக் கூடிய ஒன்றல்ல.

தமிழ்ப் பொது வேட்பாளர் விவகாரத்தில் ஒத்துழைத்த கட்சிகளையும் இணைத்து ஒரு பொதுச் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் யாழ்பாணத்தில் ஒரு ஆசனத்தையாவது பெற்றிருக்க முடியும். தமிழரசுக் கட்சியின் அதிர்ப்திப் பிரிவினரும் ஒத்துழைப்பை வழங்கியிருப்பர். பொதுவேட்பாளர் விவகாரத்தில் விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் ஐங்கரநேசனின் தமிழ்த் தேசிய பசுமை இயக்கமும் வலுவான பங்களிப்பினை வழங்கியிருந்தன.

அவற்றை இணைக்காது களமிறங்கியதன் விளைவு யாழ்ப்பாணத்தில் ஒரு ஆசனத்தைக்கூட அதனால் பெறமுடியவில்லை.

வன்னியில் ஒரு ஆசனம் கிடைத்தது. அக்கட்சியும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் நிறையவுள்ளன. வடக்கில் தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களைப் பெற்றமை. தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒரு பின்னடைவு என்பது உண்மைதான். ஆனால் அது நிரந்தரமானது அல்ல. தற்காலிக பின்னடைவே.

மறைந்த அரசியல் செயற்பாட்டாளர் மாணிக்கசோதி (மறைந்த ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்ன சிங்கத்தின் சகோதரர்) ஒருதடவை “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலவீனமடைவது தவிர்க்க முடியாதது.

இதுபலவீனமடையும்போது தென்னிலங்கைக கட்சிகள் தற்காலிகமாக அவ்வெற்றிடத்தை நிரப்பும் அதுதற்காலிகமானது தான். அதன் பின்னர் வலுவான ஒருங்கிணைந்த அரசியல் இயக்கத்தை உருவாக்கக் கூடியதாக இருக்கும்” என்று இக்கட்டுரையாளரிடம் கூறினர் அவர் கூறிய நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் அரசியல் தீர்வு என்ற அடிப்படைப் பிரச்சினை, இன அழிப்புக்கு பொறுப்புக்கூறும் பிரச்சினை, ஆக்கிரமிப்புப் பிரச்சினை, இயல்பு நிலைக்குக் கொண்டு வருதல் பிரச்சினை, அன்றாடப் பிரச்சினை என ஐந்து வகையான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கின்றனர். இவை எவற்றிற்கும் அநுரா அரசாங்கம் தீர்வு காணப் போவதில்லை.

இவற்றிற்கு தீர்வு காணவேண்டுமாயின் இலங்கை அரசுருவாக்கத்தில் மாற்றம் ஏற்படவேண்டும். அந்த மாற்றம் என்பது இலங்கையின் பல்லினத்தன்மையை ஏற்றுக்கொண்டு அரச அதிகாரக்கட்டமைப்பில் அவற்றை இணைப்பது தான். இந்த மாற்றம் ஏற்படப் போவதில்லை. அரசின் நோக்கங்களை நிறைவேற்றுவதே அரசாங்கம் என்ற வகையில் அநுர அரசாங்கமும் சிங்கள பௌத்த நலன்களை பாதுகாப்பதாகவே இருக்கும்.

இந்தத் தொடர்நிலைமை தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரள்வதற்கு வழி சமைக்கும். அமைச்சரவை அந்தஸ்துள்ள ஒரு அமைச்சைக்கூட வடக்கிக்கோ, கிழக்கிக்கோ வழங்கவில்லை என்பது இங்கு கவனிப்புக்குரியதாகும்.

வன்னியில் சிங்கள அரசியலைப் பலப்படுத்துவதற்காக தோல்வியடைந்த சிங்கள வேட்பாளர் ஒருவரை தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் மூலம் நியமித்துள்ளது என்பதும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதாகும். எனவே தற்போதைய நிலைமை தற்காலிக பின்னடைவு தான். ஆனாலும் துவண்டு போகக் கூடிய பின்னடைவல்ல.

சி.அ.யோதிலிங்கம்- வீரகேசரி வெளியீடு

Share.
Leave A Reply