உலக வாழ் மக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய சுனாமி ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதன்போது உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் இன்று வியாழக்கிழமை (26) நாடளாவிய ரீதியில் தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அதற்கமைய காலை 9.25 முதல் 9.27 வரை உயிர் நீத்தோருக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
2004ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்திரா தீவில் காலை 6.58 மணியளவில் 9.1 மெக்னிடியூட் அளவில் பாரிய நில அதிர்வு உணரப்பட்டது. இதன் சீற்றம் உலகலாவிய ரீதியில் சுமார் 3 இலட்சம் மக்களை காவு கொண்டது. இலங்கையில் சுனாமி பேரலையால் சுமார் 35,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு, 5000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெரலிய புகையிரத விபத்து
இவ்வாறு ஆழிப்பேரலைக்கு பலியானோரை நினைவுகூரும் நிகழ்வுகள் அரச, தனியார் நிறுவனங்களிலும், மத வழிபாட்டுத்தளங்களிலும், பொது இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக அப்போது உலகின் மிக மோசமான புகையிரத விபத்தாகப் பதிவாகிய ‘பெரலிய புகையிர விபத்து’ இடம்பெற்ற இடத்தில் விசேட நினைவுகூரல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுனாமி ஏற்பட்ட அன்றைய தினம் மருதானையிலிருந்து சுமார் 1700 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்த புகையிரதம் பெரெலிய பிரதேசத்தில் விபத்துக்குள்ளானது. இதன்போது புகையிரதத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்ததாகவும், சுமார் 100 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதன் போது உயிரிழந்த பொது மக்கள் மற்றும் புகையிரத ஊழியர்களுக்கு காலி – பெரெலிய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபியில் மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
குறித்த விபத்தில் சேதமடைந்த 591 என்ற இலக்க எஞ்சினுடன் இன்று காலை 6.50க்கு பெரேலிய நோக்கி புகையிரதம் பயணமானது. விபத்தில் உயிரிழந்தோரின் உறவினர்கள், புகையிரத அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இந்த பயணத்தில் இணைந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர மலையகத்தின் பல பகுதிகளிலும், கொழும்பு, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், காலி, மாத்தறை, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட மாவட்டங்களிலும் சுனாமி நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
அன்று குறித்த புகையிரதத்தின் கட்டுப்பாட்டாளராக செயற்பட்ட ஓய்வுபெற்ற கட்டுப்பாட்டாளர் வணிகரத்ன கருணாதிலக தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்துகொள்கிறார் :
‘குறித்த புகையிரத விபத்தில் அதன் சாரதி மற்றும் அவரது உதவியாளரும் உயிரிழந்துவிட்டனர். விபத்தில் சிக்கிய ஒரு சிலரை மீட்டு அவர்களுக்கு முதலுதவி அளித்தமை நினைவிருக்கிறது. இருபது ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், அந்த பேரலையால் ஏற்பட்ட அழிவுகள் சிறிதளவும் நினைவில் இருந்து நீங்கவில்லை’ என்றார்.