அனுரகுமார திசாநாயக்க இந்தியா சென்று வந்ததைத் தொடர்ந்து சிறு இடைவெளியின் பின் மாகாண சபை அதிகாரங்களை (13-வது திருத்தச் சட்டத்தை) முழுமையாக நடைமுறைப்படுத்தல் என்கிற நிலைப்பாடு மீண்டும் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் பேசு பொருளாகி இருக்கிறது.
இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அரசியல் யாப்பு ஏற்பாடு 13-வது திருத்தச் சட்டமாகும். 1988 ஆம் ஆண்டு 13வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவின் முன்னெடுப்பில் ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாகாண சபைகளுக்கான தேர்தலில் வடக்கு, கிழக்கில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் ஈழ தேசிய ஜனநாயக முன்னணி (புளொட் அமைப்பிலிருந்து பிரிந்த கட்சி) ஆகியன மட்டுமே போட்டியிட முன் வந்தன. ஈ.பி.ஆர்.எல்.எப். பெரும் வெற்றி பெற்று திருகோணமலையை தலைநகரமாகக் கொண்டு இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண அரசை ஸ்தாபித்தது.
ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் வெற்றியை தொடர்ந்து மாகாண சபையை ஒன்றில் மட்டக்களப்பில் அல்லது யாழ்ப்பாணத்தில் நிறுவுமாறு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன தெரிவித்தார். ஆனால் திருகோணமலையை வடக்கு – கிழக்கு மாகாண தலைநகர் என்பதில் ஈ.பி.ஆர்.எல்.எப் உறுதியாக இருந்ததுடன், அதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் மாகாண சபை செயற்படுத்தலை பகிஷ்கரிக்க வேண்டி ஏற்படும் என அழுத்தம் கொடுத்தது.
இதற்கு ஆதரவாக இந்திய அரசும் அழுத்தம் கொடுத்ததன் விளைவாகவே திருகோணமலை தலைநகராக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஈ.பி.ஆர்.எல்.எப் மாகாண சபையை ஏற்றுக்கொண்டு (ஈ.பி.ஆர்.எல்.எப்.ஏன் ஏற்றுக்கொண்டது. அதன் அரசியல் ராஜதந்திர நோக்கு எதுவாக இருந்தது என்பதை இன்னொரு கட்டுரையில் ஆராயலாம்) நடைமுறைப்படுத்தியதன் விளைவாகவே இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண நிர்வாகம் 18 வருட காலம் ஒரே மாகாண நிர்வாக அலகாக செயல்பட்டது என்பதை எவரும் மறக்க முடியாது.
அனுரகுமார சார்ந்த ஜே.வி.பி கட்சியே மகிந்தவுடன் இணைந்து நீதிமன்ற தீர்ப்பு என்ற பெயரால் வடக்கு- கிழக்கை பிரித்தது. ஈ.பி.ஆர்.எல்.எப். மாகாண சபை தேர்தலில் வென்றபோது வென்றவர்கள் அமர்ந்து பேச ஓர் அறை கூட இருக்கவில்லை. ஒரு எழுதுவினையர் கூட இருக்கவில்லை. எதுவுமே இன்றி பூஜ்ஜியத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டிய நிலையில் இருந்தது. ஒவ்வோர் சிறு விடயங்களுக்கும் கொழும்பு ஆட்சியாளருடன் மோத வேண்டி இருந்தது. இந்திய ஒத்துழைப்புகளை நாட வேண்டியிருந்தது.
இவற்றை எதிர்கொண்டே மிகக்குறுகிய ஒன்றை வருட காலத்திற்குள்ளாக மாகாணத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை நடைமுறையில் நிலைநிறுத்தும் பொருட்டு பின்வரும் முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்றியது.
1. திருகோணமலையை வடக்கு- கிழக்கின் தலைநகராக்கியது இன்றும் கிழக்கின் மாகாண சபையும் அமைச்சு செயலகங்களும் அங்கேயே இயங்குகின்றன
2. 18 வருட காலம் இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண நிர்வாகம் ஒரே நிர்வாக அலகின் கீழ் செயல்பட வழி வகுத்தது.
3. இணைந்த மாகாண அரசுக்கான அனைத்து அமைச்சு செயலகங்களும் தேவையான தகுதி மிக்க ஆளணிகளுடன் ஸ்தாபிக்கப்பட்டது.
4. மாகாண சபை முறை ஸ்தாபிக்கப்பட்டு ஒரு வருடத்திற்கு மேலாக முறையாக செயல்படுத்தப்பட்டது.
5. சபை அமர்வு அறிக்கைகள் கிரமமாக வெளியிடப்பட்டது
6. இன்று நிர்வாகம் மற்றும் திட்டமிடல் பிரிவுகளில் செயல்படும் பெருமளவு உயர் அதிகாரிகள் மற்றும் அண்மையில் ஓய்வு பெற்ற சிலர் உட்பட 100க்கும் மேற்பட்ட தமிழ் பட்டதாரிகள் உள்ளீர்க்கப்பட்டு உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு பதவிகளில் அமர்த்தப்பட்டனர்.
7. மாகாண காவல் துறையை (பொலிஸ்) கட்டி எழுப்பும் பொருட்டு மாகாண முதல்வருக்கும் மத்திய அரசுக்கும் (பாதுகாப்பு அமைச்சர் ரஞ்சன் விஜயரத்னவுக்கும்) இடையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
இதன் பிரகாரம் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு 3000 போலீசாரை உள்ளீர்ப்பதற்கான ஒத்திசைவு காணப்பட்டது. இதற்கு முதற்கட்டமாக 500 பேர் வரை இந்திய காவல்துறையினால் பயிற்றுவிக்கப்பட்டு சித்தி பெற்று வெளியேறும் அணிவகுப்பு நடத்தப்பட்டு பிரதி பொலிஸ்மா அதிபர் ஆனந்தராஜாவின் தலைமையின் கீழ் பணி அமர்த்தப்பட்டனர்.
போலீசாருக்கு தேவைப்படும் பல்வேறு தகுதிகளை பூர்த்தி செய்யும் வகையிலானவர் உள்ளீர்ப்பதற்கான கால அவகாசம் காரணமாக அவற்றை பூர்த்தி செய்யும் வரையில் அவர்கள் குடிமக்கள் தொண்டர் படை என்ற பெயரில் செயல்பட்டு வந்தனர். குறிப்பிட்ட கால வரையறைக்குள் முப்படைகளிலும் இன விகிதாசாரத்திற்கு குறையாமல் சகல இனத்தினரையும் உள்வாங்குவது என்ற சரத்தையும் கொண்டிருந்தது.
10. மாகாண அரசு அச்சகத்தினை ஸ்தாபிக்கும் பொருட்டு பாரிய அச்சு இயந்திர சாதனங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மாகாண சபை சடுதியாக செயலிழக்க செய்யப்பட்டமையால் இந்த இயந்திர சாதனங்களை மத்திய அரசு எடுத்துச் சென்றது.
11. திருகோணமலையில் சுதந்திர வர்த்தக வலயம், வவுனியாவில் புது நகரம் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்குமான பொருளாதார கலாச்சார அபிவிருத்திக்கான திட்டங்கள் வரையப்பட்டு செயல்படுத்த தயாராக இருந்தன.
12. காங்கேசன் துறை முதல் பொத்துவில் வரையான கரையோர பாதைக்கான திட்டம் வரையப்பட்டிருந்தது.
13. வவுனியாவில் விவசாய கல்லூரி ஸ்தாபிக்கப்பட்டது. இவ்வாறு மேலும் பல விடயங்கள் பல்வேறு எதிர்ப்புகள் மத்தியில் முன்னேற்றமடைந்து வந்தது. இவற்றை நிறைவேற்ற ஈபிஆர்எப் 400க்கு மேற்பட்ட தனது போராளிகளை தியாகம் செய்தது. மாகாண சபையின் மேற்கண்ட செயற்பாடுகள் தொடர்ந்து இருந்தால்
1. வடக்கு -கிழக்கு பிரிக்கப்படுவதற்கான களம் அற்றுப் போயிருக்கும்.
2. வடக்கு கிழக்கு தனி மாகாணமாக ஏற்படுத்தப்பட்டிருக்கும். சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு இடமிருந்து இருக்காது.
3. பெருமளவு நிலங்களை விட்டு மக்கள் வெளியேறி இருக்க மாட்டார்கள். அதனால் இராணுவம், வன திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி என தமிழ் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டிருக்காது.
4. மக்கள் இழப்பும் நாட்டை விட்டு மக்கள் ஓடுவதும் பெருமளவு குறைந்திருக்கும்
5. சனத்தொகை பெருக்கமும் தற்போது உள்ளது போல் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்காது.
6. இந்திய மற்றும் சர்வதேச ஆதரவுடன் வடக்கு -கிழக்கு கணிசமான அரசியல், பொருளாதார, அபிவிருத்தியையும் உயர்ந்த வாழ்க்கை தரத்தையும் கொண்டதாக வளர்ந்திருக்கும். இவற்றை தூர நோக்குடன் சிந்திக்க தவறியதன் விளைவு 35 ஆண்டுகள் கழித்து தீர்வு தொடர்பில் இருந்ததையும் முழுமையாக இழக்கும் அபாயத்தில் இருக்கிறோம்.
எனவே பதின்மூன்றாம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு உடனடியாக அனுர அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆண்டு இறுதியில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்னதாக பொலிஸ் அதிகாரமுள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் மாகாணத்திற்கு முழுமையாக மீளளிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டினை அனைத்து தமிழ் கட்சிகளும் எடுத்தாக வேண்டும்.
நடைமுறையில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தவிர்ந்த ஏனைய கட்சிகள் அனைத்தும் இந்நிலைப்பாட்டிற்கு மறுப்பில்லை.எனினும் ஈ.பி.ஆர்.எல்.எப். இதில் தொடர்ச்சியாகவும் உறுதியாகவும் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருவதுடன், இந்தியாவுடன் அனைத்து சந்திப்புக்களிலும் இதனை வலியுறுத்தியும் வருகிறது. சில கட்சிகள் 13 தீர்வல்ல,ஆனால் ஆரம்ப புள்ளியாக கொள்ளலாம் போன்ற நீர்த்துப்போக வைக்கும் கருத்துக்களூடாக மாகாண சபையையும் ஒழிக்க முயலும் ஜேவிபி போன்ற சக்திகளுக்கு பலம் சேர்ப்பது கண்டனத்திற்குரியது.
13 போதாது என்ற அடிப்படையில் 13 ஐ வலியுறுத்த தவறும் இவர்களின் நிலைப்பாட்டை 13 ஐயையே இல்லை, தொலைக்க நினைக்கும் அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தும் அபாயத்தை இவர்கள் புரிந்து கொள்ள தவறுகிறார்கள். அழுத பிள்ளைக்குத்தான் தாயே பாலூட்டுவாள். நாம் தெளிவாக உறுதியாக வலியுறுத்தாத வரை இந்தியாவின் அழுத்தங்களும் மாறுபடலாம்.
இந்திய இலங்கைத் தமிழர் சார்பில் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இலங்கை அரசு அதிகாரங்களை நடைமுறைப்படுத்த மறுப்பதையோ அதிகாரங்களை பறிப்பதையோ தடுத்து நிறுத்தி உடன்படிக்கையின் பிரகாரம் தமிழர் உரிமைகளை பாதுகாக்க வேண்டும். அதற்கு உரிய அரசியல் ராஜதந்திர நகர்வுகளை இந்தியா மேற்கொள்வதற்கு தொடர்ச்சியாக இந்தியாவுடன் செயல்பட வேண்டும் .இலங்கை இன மோதல் தீர்வு தொடர்பில் ஆக்கபூர்வமான புறத்தலையீடின்றி 13 ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தலே சாத்தியமில்லை. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலோ ஆட்சியாளர்களுடனும் பேசி மட்டும் இவற்றை அடைந்து விட முடியாது எனும் போது,
சமஸ்டி கோரிக்கை எவ்வாறு செயல்வடிவம் பெற முடியும், அதற்கு இந்தியாவிற்கும் அப்பால் சர்வதேச ஆதரவு அணிதிரட்டப்பட வேண்டும். இன்று அதனை சாத்தியப்படுத்த முடியும் என்பதற்கு எந்த சர்வதேச சமிக்கையும் இல்லை.
இந்நிலையில் 13 பற்றி இந்தியா பேசாதி இருந்தால் தான் பொருத்தமான இலக்கை வகுக்க முடியுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறி இருப்பது இந்தியாவை அவமதிக்கும் முட்டாள் தனம் மட்டுமல்ல, எந்த வகையிலும் அறிவுபூர்வமற்ற மூளையை மொத்தமாக அடகு வைத்த தன்மையின் வெளிப்பாடு.
2013 வடக்கு மாகாண சபை தேர்தலுக்கு மிகப்பெருமளவில் மக்கள் வாக்களித்தனர். கிழக்கில் பிள்ளையான் போட்டியிட்டபோதும் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்ட போதும் மிகப் பெருமளவு தமிழ் மக்கள் வாக்களித்தனர். இவை மாகாண சபையை பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்பதற்கான சான்றுகளே. மாறாக பதின்மூன்றை சவப்பெட்டியில் வைத்து இழுத்து சென்றதற்கு மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் காத்திரமான பதிலை வழங்கியுள்ளார்கள் என்ற யதார்த்தத்தை கஜேந்திரகுமார் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் தேசிய பரப்பில் உள்ள கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டியது மக்கள் நலன் சார்ந்து தீர்வு நோக்கிய ஒவ்வோர் படி வெற்றிகளும் மக்களை அணி திரட்டும்.வளுவளுப்பாக பேசுவதை விடுத்து தெளிவான -உறுதியான முடிவை எடுத்து தொடர்ச்சியாக இந்தியாவுடன் செயற்படுவதன் மூலமே 13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த முடியும்.நிரந்தர தீர்வு நோக்கிய அடுத்த கட்ட நகர்வுகளுக்கான கதவுகளையும் திறக்கலாம்.
கலாநிதி க.சர்வேஸ்வரன் Thinakkural