மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் இன்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.
மான்னாரில் இருந்து பாலத்தை கடக்கும் பகுதிகளில் வரும் வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.
அத்துடன் மன்னாரில் கடும் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்றைய தினம் காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில், சந்தேகநபரை கைது செய்யும் நோக்கில் இச் சோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
வழக்கொன்றுக்காக நீதிமன்றத்திற்கு வருகை தந்தவர்களை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் பெண் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில், அவர்களில் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் உயிரிழந்தனர்.
மன்னார் உயிலங்குளம் பகுதியில் நடந்த இரண்டு கொலைகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கு விசாரணைக்காக இன்றைய தினம் வந்தவர்கள் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இன்று காலை 9.20 மணியளவில் நீதிமன்ற முன்றலில் அவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் 63 வயதான சப்ரயன் அருள் மற்றும் 42 வயதான செல்வகுமார் ஜூட் என்பவர்களே உயிரிழந்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் முகத்தை முழுவதுமாக மறைக்கும் வகையிலான தலைக்கவசத்தை அணிந்திருந்ததாகவும், துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதும் தெரியவந்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் மன்னார், உயிலங்குளம் பகுதியில் இடம்பெற்ற மாட்டு வண்டி சவாரியின் போது ஏற்பட்ட தர்க்கத்தை தொடர்ந்து ஜூன் மாதம் 10ஆம் திகதி சகோதரர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.