வெளிநாட்டு ஆண்களை திருமணம் முடித்த இலங்கை பெண்கள் கைவிடப்பட்டு வருவது அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மிக முக்கியமாக தேன்நிலவுக்குப்பின்னர் வெளிநாட்டு கணவர்மாரால் இலங்கை பெண்கள் கைவிடப்பட்டு வருவது குறித்த வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இது இலங்கையில் அண்மைக்காலமாக ஏற்பட்டு வரும் ஒரு சமூகப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக வழக்கறிஞர்களும், பெண் அமைப்புகளும் தெரிவித்துள்ளனர்.

வெளிநாட்டு வாழ்க்கை குறித்து இலங்கை பெண்கள் எந்தளவுக்கு ஈர்க்கப்படுகின்றார்கள் என்றும் அதை நம்பி திருமணம் முடித்து தேன் நிலவு முற்று பெற்றவுடன் அவர்கள் எந்தளவுக்கு புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது குறித்து அண்மையில் வழக்கறிஞர் ஒருவர் பொது வெளியில் தெரிவித்த விடயங்களின் பின்னரே இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதாவது திருமணம் முடித்த பின்னர் இவ்வாறு கைவிடப்படும் பெண்கள் விரக்தி நிலையை அடைவதோடு கை விட்டுச்சென்ற தமது கணவர்மார் வாழ்ந்து வரும் நாட்டின் சட்ட திட்டங்கள் புரியாமல் வழக்கறிஞர்களை நாடுவதும் உரிய நிவாரணங்களை பெறாது காலத்தை கடத்துவதும் மிக மோசமான நிலைமையென வர்ணிக்கப்படுகின்றது.

பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஒருவர் இது குறித்து கூறும் போது தேனிலவுக்குப் பிறகு வெளிநாட்டு வாழ்க்கைத் துணைவர்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றனர்.

இந்தப் பெண்கள் விரக்தியில் விடப்படுகிறார்கள், மேலும் இந்தப்பெண்கள் விவாகரத்து மற்றும் இழப்பீடு பெற சட்டப்பூர்வ தீர்வுகளைத் தேட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை விவரித்தார்.

அண்மையில் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்துக்கு இது தொடர்பான ஒரு வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது மேலதிக மாவட்ட நீதிபதி சந்திமா எதிரிமன்னே முன் எடுத்துக்கொள்ளப்பட்ட குறிப்பிட்ட வழக்கில், தனது கட்சிக்காரர் வெளிநாட்டில் சிறந்த வாழ்க்கைக்கான வாக்குறுதிகளால் எவ்வாறு ஈர்க்கப்பட்டார் என்பதை வழக்கறிஞர் விவரித்தார்.

குறித்த வெளிநாட்டவர் இலங்கையில் தங்கியிருந்தபோது இந்த பெண் அவரை மணந்தார். திருமணத்திற்குப் பிறகு நாட்டை விட்டு வெளியேறிய அவர் தனது கட்சிக் காரரை கைவிட்டதாக அவர் கூறினார். “எனது கட்சிக்காரர் விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் வாழ்கிறார்,” என்று வழக்கறிஞர் கூறினார், அத்தகைய கைவிடுதல் இந்த பெண்களுக்கு ஏற்படுத்தும் உளவியல் மற்றும் பொருளாதார பாதிப்பை வலியுறுத்தினார்.

பாதிக்கப்பட்ட பெண் தற்போது விவாகரத்துடன் ஐந்து இலட்சம் ரூபா ஜீவனாம்சம் கோருகிறார். இருப்பினும், அவரை மணந்த வெளிநாட்டவர் அந்தத் தொகையை செலுத்த மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது,

இதனால் இளம் பெண் வெளிநாட்டு துணைக்கு எதிரான சட்ட நடவடிக்கையின் சவாலான பாதையில் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். ஆனால் பிரதிவாதியின் சார்பிலும் ஒரு வழக்கறிஞர் ஆஜராகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சம்பவங்கள் பெண்களை ஆபத்தான சூழ்நிலைகளில் விட்டுவிடுவது மட்டுமல்லாமல், நாட்டில் தற்போதைய சமூக-பொருளாதார நெருக்கடியின் ஆழமான அம்சத்தையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பாதிக்கப்பட்ட பெண்களிடையே சட்ட விழிப்புணர்வு இல்லாதது இந்த நெருக்கடியின் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இதே வேளை சில வெளிநாட்டவர்கள் தமது விடுமுறையை கழிக்க இலங்கை வந்த பின்னர் இங்குள்ள பெண்களிடம் பழகி பின்னர் வீட்டார் சம்மதத்துடன் திருமணம் முடிக்கின்றனர்.

பின்னர் தமது நாடு திரும்பியவுடன் எந்த தொடர்புகளும் அற்று போகின்றனர் என்ற குற்றச்சாட்டுகளும் அதிகரித்துள்ளன. இவர்கள் ஏற்கனவே திருமணமானவர்களாக இருக்கின்றார்கள். அல்லது இவர்கள் விடுமுறையை கழிக்க செல்லும் பல நாடுகளில் இவ்வாறு தான் நடந்து கொள்கின்றார்கள் என்ற விடயங்களும் அம்பலமாகியுள்ளன.

சில வசதியான குடும்பங்களைச் சேர்ந்த படித்த பெண்களும் இவ்வாறு ஏமாற்றப்படுகின்றனர் என்பது முக்கிய விடயம். நாட்டின் தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் தொழில்சார் தகைமையுள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு வேலை வாய்ப்புகளுக்குச் செல்வது போன்று சில வசதியுள்ள பெண்கள் வெளிநாட்டு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருமணம் முடித்துச் செல்வதை இலக்காகக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் சரியான தெரிவுகள் இன்றி ஏமாற்றப்படுகின்றனர். இது பாதிக்கப்பட்ட பெண்ணில் முழு குடும்பத்தையுமே பாதிக்கின்றது.

 

Share.
Leave A Reply