முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை, எனக்கும் வீடு வேண்டாம் என்று இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்திருப்பதாக வீரகேசரி இணையதள செய்தி கூறுகிறது.
களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (19) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையில், “எந்த அமைச்சருக்கும் அரச உத்தியோகபூர்வ இல்லங்களையும் வழங்கவில்லை. அனைத்து அரச இல்லங்களும் பொதுநிர்வாக அமைச்சுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது.
வரலாற்று சிறப்புமிக்க ஜனாதிபதி மாளிகை, அலரி மாளிகை மற்றும் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தவிர்த்து ஏனைய அரச இல்லங்கள் அனைத்தையும் என்னசெய்வது என்பது தொடர்பில் யோசனை முன்வைக்கும் பொறுப்பை விசேட குழுவுக்கு வழங்கியுள்ளேன்.
இந்த மாற்றம் நாட்டுக்கு அவசியம். முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அரச இல்லங்களை வழங்க போவதில்லை என்று குறிப்பிட்டோம். எனக்கு வீடு வேண்டாம் என்பதற்கான கடிதத்தை பதவியில் இருக்கும் போதே வழங்குவேன்.” என்றார்.