சத்தியாக்கிரகப்போராட்டம் 1961

1960 ஆம் ஆண்டு (20.7.1960) தேர்தலில் 22 தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்ட இலங்கை தமிழரசுக் கட்சி 16 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தந்தை செல்வாவின் சமஷ்டித் தீர்வுக்கு வடக்கு கிழக்கு மக்கள் மூன்றாவது தடவையும் தமது ஆணையை வழங்கியுள்ளனர் என கருதப்பட்டது. அதேவேளை உலகத்தின் முதலாவது பெண் பிரதமராக சிறிமாவோ பண்டாரநாயக்கா பதவியேற்றார்.

தனது கணவர் பண்டா காலத்தில் செய்யப்பட்ட பண்டா – செல்வா ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது ஒருபுறமிருக்க, 1958 ஆம் ஆண்டு இனக்கலவரத்தால் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட நிலமையையும் புரிந்து கொண்ட பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க, தமிழரசுக்கட்சியின் வெற்றியை ஏற்றுக் கொண்டதனாலோ என்னவோ தமிழரசுக்கட்சியை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.

1960 நவம்பரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தந்தை செல்வா தலைமையில் திருமலை என்.ஆர். இராஜவரோதயம், டாக்டர் நாகநாதன், வி.ஏ.கந்தையா, பட்டிருப்பு இராசமாணிக்கம், தளபதி அமிர்தலிங்கம் ஊர்காவத்துறை நவரத்தினம் ஆகியோரும் மறுபக்கம் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா, பி.சி. பெர்னான்டோ, பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா, ரி.பி இலங்கரட்னா, பதியுதீன் முஹமத், டாக்டர் எஸ் ரத்வத்த ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் ஸ்ரீமாவுடனான சந்திப்பின்போது சமஷ்டி கோரிக்கையை முன்னுரிமைப்படுத்தும் இரு பகுதிகளைக் கொண்ட ஒரு மகஜரை சமர்ப்பித்தனர். ஆனால், பிரதமர் தமிழரசுக்கட்சியின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்தது மாத்திரமன்றி ஏலவே தனது கணவரால் நிறைவேற்றப்பட்ட சிங்களம் மட்டும் சட்டத்தை நாடு முழுவதும் 1961 ஜனவரி முதலாம் திகதி முதல் தீவிரமாக நடை முறைப்படுத்த ஆணை பிறப்பித்தார். பிரதமர் ஸ்ரீமாவின் இந்த தீவிர முடிவை ஆராய்வதற்காக தமிழரசுக்கட்சியின் செயற்குழு 1960 டிசம்பர் 18 ஆம் திகதி அவசரமாக கூடியது. தனிச்சிங்கள சட்டத்தின் அமுலாக்கத்தை எதிர்ப்பது என கட்சி ஏகமனதாக முடிவெடுத்தது. இதன் பிரகாரம் 1961 ஜனவரி 2 ஆம் திகதி ஹர்த்தால் அனுஷ்டிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

தனிநாட்டுக் கோரிக்கையின் ஆரம்பம்

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட வவுனியாவைச் சேர்ந்த ஏ. சிற்றம்பலம் என்பவர் தனியரசு பிரேரணையை முன்வைத்தார். சமஷ்டிக் கோரிக்கையை கைவிட்டு தனிநாடு பெற தமிழ் மக்கள் போராட வேண்டும் என்று அவர் வாதாடினார். சமஷ்டியை அடைவதற்கு சிங்கள மக்களின் ஒத்துழைப்பு அவசியம். ஆனால், சிங்கள தலைமைப்பீடம் அதற்கு தயாரில்லை. எனவே தனிநாடு கோரி போராடுவதே புத்திசாலித்தனமான என சிற்றம்பலமும், அவரது சகபாடிகளும் வாதாடினார்கள். ஆனால்;, தந்தை செல்வா தனிநாட்டுக்கோரிக்கையை முற்றாக எதிர்த்தார். ஈழம் போன்ற ஒரு தீவுக்கு அது பொருத்தமற்றது என மறுதலித்து வாதாடினார்.

தனிநாட்டுக் கோரிக்கை ஆயுதப்போருக்கு இட்டுச் செல்லும்,. அதன் மூலம் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட மாட்டாது. ஆயுதப்போர் எந்தவித பிரச்சினைக்கும் தீர்வைக் கொண்டுவராது. அது மேலும் புதிய பிரச்சனைகளை உருவாக்கும் என தந்தை தனது நண்பர்களிடம் கூறிக் கொண்டார்.

இத்தகைய தனிநாட்டுக்கோரிக்கையை 1960 ஆம் ஆண்டு முற்பகுதியில் சிறிமாவோவின் ஆட்சிக் காலத்தில் வவுனியா சி. சுந்தரலிங்கமும் முன்வைத்திருந்தார்;. 1960 மார்ச் மற்றும் ஜூலைத் கதர்தலிலும் அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம் என அரசியல்வாதிகள் மத்தியில் பேர் பெற்றிருந்த இவர், ஈழத்தமிழர் ஒற்றுமை முன்னணி என்ற கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டபோதும் சுந்தரலிங்கத்தின் தனி நாட்டுக்கோரிக்கையை வன்னி மக்கள் நிராகரித்தார்கள்.

தமிழ்ஈழம் என்ற கோரிக்கைக்காக சுந்தரலிங்கம் 1958 ஆம் ஆண்டிலிருந்து பிரச்சாரம் செய்து வந்தார். தமிழ் மக்களுக்கு தனிநாடான ஈழம் கோரி பாராளுமன்றத்தில் தீர்மானமொன்றையும் கொண்டு வந்தார். இதன் பிரகாரம் 1960 மார்ச், 1960 ஜூலை, 1965 தேர்தல்களில் நடந்த தேர்தல்களில் ஈழக்கோரிக்கையின் அடிப்படையில் போட்டியிட்டு, தோல்வி கண்டவர் 1970 ஆம் ஆண்டு தேர்தலில் அதை தொடர்ந்தார்.

தலை சிறந்த கல்விமானான சி. சுந்தரலிங்கம் 1948 ஆம் ஆண்டு மலைய தமிழர்களுக்கு குடியுரிமையை பறிக்கும் பிரஜாவுரிமைச்சட்டம் பாராளுமன்றுக்கு வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது பாராளுமன்றத்தில் பிரசன்னமாக இருக்கவில்லை. அரசின் அமைச்சராக இருந்த சுந்தரலிங்கம் இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு எதிராக எதுவும் செய்ய முடியவில்லை.

ஆனால், சுந்தரலிங்கம் அவர்களது மனச்சாட்சி உறுத்தியிருக்க வேண்டும் இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர், இலங்கைக்கான தேசியக்கொடி தயாரிக்கும் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டவேளை 1950 களில் சுந்தரலிங்கம் தனது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை தமிழர்களுக்காக துறந்து மறுபடியும் வவுனியா தொகுதியில் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டு பாராளுமன்றம் சென்றார்.

விரும்பியோ விரும்பாமலோ சுந்தரலிங்கத்தின் ஈழக்கோரிக்கை 1977 பின் மறு பிறவி பெற்று 30 வருட யுத்தத்தை உருவாக்கியது என்பதை மறந்துவிட முடியாது.

1960 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரான டட்லி சேனாநாயக்க இன வாதப்பிரசாரத்தை கையில் எடுத்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தேர்தலில் வெற்றி பெற்றதும் தமிழரசுக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப்போகிறது நாடு தமிழர்களிடம் பறிபோகப்போகிறது என தனது பிரசாரத்தில் இனவாதத்தை கக்கி மேடைகளில் பேசினார் டட்லி. இந்த விடயத்தில் டட்லியும், ஜயவர்தனவும் இரட்டையர்கள்போல் செற்பட்டார்கள்.

ஏலவே குறிப்பிட்டது போல் பிரதமர் பண்டா கொண்டுவந்து இடையில் நின்றுபோன சிங்களம் மட்டும் சட்டத்தை 1961 ஜனவரி முதலாந்திகதி முதல் நாடு முழுவதும் தீவிரமாக அமுல் செய்ய பிரதமர் சிறிமாவோ முடிவெடுத்துகொண்ட நிலையில் தமிழரசுக்கட்சி சிங்களம் மட்டும் சட்டத்தை கடுமையாக எதிர்ப்பதென தீர்மானம் மேற்கொண்டனர். இந்த தீர்மானத்துக்கு அமைய 1961 பெப்ரவரி 20 ஆம் திகதி யாழ் கச்சேரி வாசலில் சத்தியாக்கிரக போராட்டம் தொடக்கி வைக்கப்பட்டது. திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் தேவாரம்பாடி சத்தியாக்கிரகத்தை தொடக்கிவைத்தார்.

போராட்டம் வடக்கு கிழக்கில் தீவிரப்படுத்தப்பட்டு மக்களே போரட்டத்தை முன்னின்று நடத்த முற்பட்டார்கள். பெப்ரவரி 27 இல் மட்டக்களப்பிலும், மார்ச் 4 ஆம் திகதி திருகோணமலையிலும், அதன்பின் மன்னார், வவுனியா கச்சேரிகளுக்கு முன்பும் சத்தியாக்கி ரகப்போராட்டம் விஸ்தரிக்கப்பட்டது. திருமலை கச்சேரிக்கு முன் மறியல் போராட்டம் நடத்திய சத்தியாக்கிரகிகள் பொலிஸாரின் அடாவடித்தனமான தாக்குதலுக்கு ஆளாகி பலர் படு காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த மூதூர் முதலாவது பாராளுமன்ற உறுப்பினர் ஏகாம்பரம் மார்ச் 22 ஆம் திகதி மரணமானார்.

சத்தியாக்கிரகப் போராட்டம் தமிழ்ப்பேசும் மக்களின் வெகு சனப்போராட்டமாக மாறியது. ஜி.ஜி. பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் காங்கிரஸ், சமசமாஜக்கட்சி ஆகியன இப்போராட்டத்தில் கலந்து கொண்டன. ஒரு மாத காலம் தொடர்ந்து போராட்டம் இடம்பெற்றது. தமிழ் மக்களின் வரலாற்றில் இத்தகையதொரு வெகுஜனப்போராட்டம் இடம் பெற்றதில்லை என்று சொல்லும் அளவுக்கு இடம்பெற்றது.

இதை தாங்கிக் கொள்ள முடியாத பிரதமர் சிறிமாவோ பண்டார நாயக்கா 1961 ஏப்ரல் 4 ஆம் திகதி அவசர கால சட்டத்தை பிரகடனப்படுத்தினார். இதைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சி தலைவர்களை தடுப்புக்காவலில் வைக்க வேண்டுமென கடும் போக்கை கடைப்பிடித்த அமைச்சர் பிலீக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா, வலியுறுத்தினார். இவரின் ஆலோசனையை ஏற்றுக் கொண்ட பிரதமர் தன்னை சுதாகரித்துக் கொள்ளும் வகையில் தமிழரசுக்கட்சியினரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது அதை ஏற்றுக் கொண்ட தந்தை, நான்கு அம்சகோரிக்கையை பிரதமர் ஸ்ரீமாவோவிடம் முன்வைத்தார். பிரதமர் அதை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்தார்.

சத்தியாக்கிரகத்தின் இரண்டாம் கட்டம் 1961 ஏப்ரல் 14 ஆரம்பிக்கப்பட்டது. யாழ் கச்சேரிக்கு முன் தந்தை செல்வா தமிழரசுக்கட்சி தபால் சேவையை ஆரம்பித்து வைத்தார். அதன் தொடர்ச்சியாக காணிக்கச்சேரியை நடத்தினார். இது அரசாங்கத்துக்கு விடுக்கப்பட்ட சவாலாக நினைத்த ஸ்ரீமா இதை தடுக்கும் முகமாக யாழ்ப்பாணத்துக்கு 300 இராணுவத்தினரை அனுப்பிவைத்தார். மேலதிக படையினர் மன்னார் வவுனியா மட்டக்களப்பு திருகோணமலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து ஏப்ரல் 17 ஆம் நாள் நாடு தழுவிய அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டது.

தமிழரசுக்கட்சி இந்த நெருக்கடியான சூழ்நிலையில் 1962 ஆம் ஆண்டு மன்னாரில் மகாநாட்டை நடத்தியது. அங்கு சமஷ்டி கொள்கை பற்றி வரிவாக ஆராயப்பட்டது. சமஷ்டி கோரிக்கை பற்றி உறுதியான முடிவெடுக்கப்பட்டது, மட்டுமல்ல சமஷ்டி தீர்வுக்காக தொடர்ந்து போராடுவதாக தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது. 1964 ஆம் ஆண்டு ஜனவரி முதலாந்திகதி யாழ் மட்டக்களப்பு, மன்னார், வவுனியா, திருகோணமலை கச்சேரிகளுக்கு முன்பாக கண்டன ஊர்வலங்கள் நடத்தப்பட்டன. அரசாங்கத்துக்கு மீண்டும் நெருக்கடி நிலை ஏற்பட்டது.

வடகிழக்குக்கு சிங்கள ஆசிரியர்கள்

மீண்டும் வடக்கு கிழக்கு மக்களை கொந்தளிப்புக்குள்ளாக்கும் இன்னொரு நடவடிக்கை மேற்கொள்ள அரசாங்கம் முயற்சி செய்தது. கல்வி அமைச்சர் பி.ஜி. கலுகல்ல வடக்கு கிழக்கிலுள்ள பாடசாலைகளுக்கு 2000 சிங்கள ஆசிரியர்களை அனுப்ப எத்தனித்த நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்களின் அரசியல் கொதிநிலை இன்னும் தீவிரமான பதட்ட நிலையை க்கொண்டுவந்தது.

1964 ஆகஸ்ட் 21 ஆம் திகதி திருமலையில் 9 ஆவது மகாநாடு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு மார்ச் 22 ல் நடந்த பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி 20 தொகுதிகளில் போட்டியிட:டு 14 தொகுதிகளில் வெற்றியீட்டிய நிலையில் 4 ஆவது தடவையாகவும், தமிழ் மக்கள் சமஷ்டிக் கோரிக்கைக்கான ஆணையை அளித்துள்ளனர் என கூறப்பட்டது. இதன்பிரகாரம் பொதுத்தேர்தலில் அதிக ஆசனங்களை ஐக்கிய தேசியக்கட்சி பெற்றுக் கொண்டாலும் அறுதிப் பெரும்பான்மையை பெறாத நிலையில் தமிழரசுக்கட்சி தனது பலத்தை பயன்படுத்தும் வாய்ப்பைப் பெற்றது.

ஐ.தே.க. தலைவர் டட்லி சேனநாயக்கா தமிழரசுக்கட்சியுடன் நடத்திய பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் நிமித்தம் தேசிய அரசாங்கம் அமைக்க தமிழரசுக்கட்சி இணக்கம் தெரிவித்தது. இதன் முடிவாக டட்லி – செல்வா ஒப்பந்தம் (24.3.1965) கைச்சாத்திடப்பட்டது.

ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்குமுன், தான் அமைக்கப்போகும் தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி அங்கம் வகிக்க வேண்டுமென டட்லி கைகுலுக்கி தந்தையைக் கோரியபோது தந்தை செல்வா ஒரு நிபந்தனையை விதித்திருந்தார். ‘சமஷ்டி ஆட்சியொன்று அமைக்கப்படும் பட்சத்தில்தான் அமைச்சுப் பதவிகளை ஏற்பதென எமது கட்சி முடிவு செய்துள்ளது. அந்த முடிவை என்னால் மீற முடியாது’ என அடித்துக் கூறியபோதும் டட்லி சேனநாயக்கா தந்தையை விடவில்லை. பிடிவாதமாக நின்றார்.

டட்லியின் வீருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையிலும் கட்சியின் எம்.பிக்களின் தீர்மானத்தை மீறாத வகையிலும் ஒரு தந்திரோபாயத்தை தந்தை பாவித்தார். ‘எமது கட்சியை சேர்ந்த பொது மனிதன் ஒருவரை தருகிறோம் .அவருக்கு மாவட்ட சபைகளை உருவாக்கும் அமைச்சுப் பதவியொன்றை வழங்குங்கள்’ என நிபந்தனை விதித்தபடி மு.திருச்செல்வத்தை மந்திரிப் பதவி ஏற்கவைத்தார்.

இதேவேளை சிறிமாவோ தலைமையிலான சுதந்திரக் கட்சியினர் ஐ.தே.கட்சிக்கு ஏட்டிக்குப்போட்டியாக தமிழரசுக்கட்சியை இணைத்துக்கொண்டு தாம் தேசிய ஆட்சி அமைக்க, கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டனர். தந்தை செல்வாவின் வீட்டுக்கு சிறிமாவோவின் பிரதிநிதியாக வந்த டாக்டர் என்.எம் பெரேரா, பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்ற சிறிமாவோ அம்மையார், தயாராக இருப்பதாகவும் சுதந்திரக்கட்சி ஆட்சி அமைக்க உதவவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

1960 ஆம் ஆண்டு ஆட்சிக்காலத்தில் பல வாக்குறுதிகளைத்தந்து அம்மையார் ஏமாற்றியதை தந்தை நன்கு அறிவார். எனவே சுதந்திரக்கட்சியின் கோரிக்கையை ஏற்காத நிலையில் ஐக்கிய தேசியக்கட்சி தேசிய அரசாங்கம் அமைக்க தமிழரசுக் கட்சி ஆதரவு நல்கியதன் பிரதி பலிப்பாக சொலிசிட்டர் ஜெனரலான மு.திருச்செல்வம் உள்ளூராட்சி அமைச்சராக நியமிக்கப்பட்டார். இருந்த போதிலும் தமிழரசுக்கட்சியின் மூளை என வர்ணிக்கப்பட்ட ஊர்காவற்துறை உறுப்பினர், வி. நவரத்தினம் தமிழரசுக்கட்சி ஐக்கிய தேசியக் கட்சிக்கு அளித்த ஆதரவுக்கு தனது கடும் எதிர்ப்பை தெரிவித்து கட்சியிலிருந்து விலகி, தமிழர் சுயாட்சிக்கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார்.

திருமலை நவம் Virakesari

(தொடரும்)

Share.
Leave A Reply