அரசு என்ற ஒரு கட்டமைப்பை பெற்று கொண்டதிலிருந்து ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதை தமக்கு சர்வதேச சட்ட அங்கீகாரத்தை பெற்றுக் கொள்வதற்கான மிக பாரிய கருவியாக பயன்படுத்தி வருகின்றனர்.

சர்வதேச அரங்கில் பல தசாப்தங்களாக பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்பட்ட ஓர் அமைப்பை, ”அரசு” எந்த வகையில் சர்வதேச இராஜதந்திர கட்டமைப்பிற்குள் சேர்த்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியமானது.

அமெரிக்க படைகளை திரும்ப பெற்று கொள்வது 2020 ஆம் ஆண்டில் அப்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் கட்டாரின் தலை நகரான டோஹாவில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் மூலம் ஏற்று கொள்ளப்பட்டது.

2020 கிறிஸ்மஸ் நாளுக்கு முன்பாக இறுதி படை வீரர் திருப்ப பெற்றுக் கொள்ளப்படுவார் என தீர்மானிக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பதவிக்கு வந்த பைடன் நிர்வாகம் படைகளை திருப்ப பெற்று கொள்ளும் திகதியை பிற்போட்டது.

அத்துடன் டோஹா ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட பல விடயங்கள் நிறைவேற்றப்படாத நிலை சுமூகமான படை விலகலை சிதறடித்தது. இதனால் பல உயிர் கொலைகள், பெருந்தொகையான மக்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலை என இறுதிநேர அமெரிக்க படைகளுக்கு அவமானத்தை உருவாக்கக்கூடிய வகையில் களேபரம் வன்முறைகளும் இடம்பெற்றன.

அது மட்டுமல்லாது, அனைத்து விவகாரங்களும் தொலைக்காட்சிகளிலும் சமூகத்தளங்களிலும் நேரடியாக வெளிவந்தமையால் பைடன் நிர்வாகத்திற்கும் அதன் ஆப்கனிஸ்தான் கொள்கைக்கும் பெரும் இழுக்கு ஏற்பட்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் அதிகாரத்தை தலிபான்கள் கைப்பற்றியவுடன் முன்பு போல் அல்லாது புதிய மனத்தோற்றத்தை சர்வதேச அரங்கில் உருவாக்கும் வகையில் தலிபான் அமைப்பினர் செயற்பட ஆரம்பித்தனர்.

இவர்கள் மீதான நம்பிக்கையீனம் இருந்த காரணத்தால் அரசை வடிவமைப்பதில் இவர்கள் மீது சர்வதேச சமூகத்தின் மத்தியில் இருக்கக் கூடிய முறைமை அதிக சிரத்தை செலுத்தவில்லை எனலாம்.

ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க கொள்கையில் அரசாங்கத்தையும் மக்களையும் இருவேறு தரப்புகளாக கையாள்வது என்ற போக்கு காணப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபை உணவு அமைப்பின் ஊடாக மக்களுக்கே நிவாரணங்கள் வழங்கப்பட்டபோதும் அதன் நற்பெயர் அரசாங்கத்திற்கு போகாத வகையில் பேணப்பட்டது.

இந்நிலையில் உள்நாட்டில் மதஆட்சியையும் எதேச்சதிகாரத்தையும் மாற்றத்திற்கு உள்ளாக்காது சர்வதேச அளவில் பல்வேறு அலகுகளுடனும் பேச்சுகளில் ஈடுபட தயாராகியது தலிபான் அரசாங்கம்.

ஓர் அரசு எவ்வாறு இராஜதந்திர நகர்வுகளை கையாளுமோ அதுபோல பெண்களுக்கான உரிமை சமுதாய வளர்ச்சியில் பெண்களின் பங்கு போன்ற விவகாரங்களை கையிலெடுத்து ஏற்கெனவே மேலை நாடுகளால் குற்றம் சாட்டப்பட்ட பகுதிகளை தமது கரிசனைக்குரிய விவகாரங்களாக மாற்றியது.

தலிபான் தலைமை 2021இல் ஆப்கனிஸ்தானை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த போது தமது தேசத்தின் பெயரை ”ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய இராஜ்ஜியம்” என்ற பெயர் மாற்றம் செய்து கொண்டது. தமது பெயர் மாற்றத்தை சர்வதேச சமூகம் அங்கீகரிக்க வேண்டிய தேவை எழுந்தது

1996இல் இருந்து 2001ஆம் ஆண்டு அமெரிக்க இராணுவம் அல்கைதா தலைவர் ஒசாமா பின்லாடனை தேடி படையெடுக்கும் வரையில் தலிபான் அமைப்பு பயங்கரவாத அமைப்பாகவே கருதப்பட்டது. பாகிஸ்தான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராஜ்ஜியம் ஆகியன மட்டுமே தொடர்புகளை கொண்டிருந்தன.

ஆனால், தற்பொழுது எந்த ஒரு நாடும் அங்கீகாரம் கொடுக்காத போதும் முன்பு போல் அல்லாது தலிபான்கள் அதிகளவில் தனிமைப்பட்ட நிலையில் இல்லை.

ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய இராஜ்ஜியத்துடன் பல நாடுகளும் தொடர்ச்சியான அரசுமுறை சந்திப்புகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும் சமூக வலைதளங்கள் ஊடாகவும் தொடர்ச்சியான அறிக்கைகளையும் செய்திகளையும் காபூல் பதிய அரசாங்கம் வெளியிட்டு வருகிறது.

இந்த தொடர்புகள் பல்வேறு தரப்பட்டவைகளாக உள்ளன. மனிதாபிமான உதவிகள், ஆட்சிமுறை பயிற்சிபட்டறைகள் , பொருளாதார வசதிகள் கைத்தொழில் முதலீடுகள் மற்றும் மதரீதியான பரிமாற்றங்கள் என பல வகைப்பட்ட தொடர்புகளில் காபூலுடன் வெளிநாடுகள் தொடர்பில் உள்ளன.

சர்வதேச இராஜதந்திர முறைமைகளில் ஒரு அரசுக்கான அங்கீகாரம் பொது வாக இரண்டு தராதரங்களில் கொடுக்கப்படுகிறது.

இதில் முதலாவது நடை முறை அரசுக்கான அங்கீகாரம். இது ஒரு அரசின் இருப்பை குறிப்பது. அத்துடன் இது தற்காலிகமானதாக கொள்ளப்படுகிறது.

இரண்டாவது அரச அங்கீகாரம் முழு அங்கீகாரமாகும். ஒரு அரசின் அதிகார மாற்றத்தின் பின்பு ஏற்கெனவே உள்ள அரசு ஒன்று ஆட்சி மாற்றம் கண்ட புதிதாக உருவாகிய அரசாங்கத்தின் இருப்பையும் அதன் அரச பகுதிகளையும் அங்கீகரித்தல் ஆகும்.

மேற்கண்ட இரு வகையிலான அங்கீகாரமும் பெற்றுக் கொள்வதற்கு ஒரு தேசம் நிரந்தரமான குடி மக்களை கொண்டதாகவும், நிரந்தரமான எல்லைகளை வரையறுத்த பிராந்தியமாகவும் அதற்கான ஆட்சி அதிகாரமும் அயல் நாடுகளுடன் உறவுகளை வளர்த்து கொள்ளக் கூடிய தகுதியும் இருத்தல் அவசியமாகும்.

தலிபான்கள் இந்த வகையில் சர்வதேச வல்லரசுகள் மத்தியில் இருக்கக் கூடிய தற்போதைய வேற்றுமைப்பட்ட நிலைமையை சாதகமாக கொண்டு எந்தவித நன்மைகளையும் பெற்ற கொள்ளாது விட்டாலும் பரவாயில்லை அவர்களுடன் பேச்சுகளை நடத்துவதே தமக்கான அங்கீகாரத்திற்குரிய பாரிய முன்னகர்வு என்ற நிலைப்பாட்டில் இராஜதந்திர நகர்வுகளை செய்து வருகிறது தற்போதய காபூல் தலைமை.

இருந்த போதிலும் ஆப்கானிஸ்தானில் உள்ள அரிய கனிம வளங்கள், எண்ணைய், எரிவாயு ஆகிய இலாபந்தர கூடிய விவகாரங்களை மையமாக கொண்ட பேச்சுகளில் பல நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் போட்டி போட்டு கொண்டு தலிபான்களுடன் பேசி வருகின்றனர்.

ஜனாதிபதியாக ட்ரம்ப் மீண்டும் தெரிவான நாளான நவம்பர் 5ஆம் திகதி ஆப்கானிஸ்தான் வெளிவிவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சக பேச்சாளர் அப்துல் பல்கீ எக்ஸ் தளத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

தலிபான்களுக்கு அதிபர் ட்ரம்ப் மீது ஒரு வகை மதிப்பு இருப்பதை இது எடுத்துக் காட்டினாலும் அதிபர் ட்ரம்ப் தெரிவு செய்திருக்கும் இராஜாங்க செயலர் மார்கோ ரூபியோவும் பாதுகாப்பு செயலர் மைக் வால்ட்டும் ம் அதீத தலிபான் எதிர்ப்பாளர்களாக கருதப்படுகின்றனர்.

அமெரிக்க புது அரசாங்கத்தின் வரவை கருத்தில் கொள்ளும் அதேவேளை தலிபான்கள், சீனாவுடனும் துருக்கியுனும் ஈரானுடனும் கட்டாருடனும் பாகிஸ்தானுடனும் என பல தடவைகள் அரச முறை பயணங்களை மேற் கொண்டு தமது நலன்களுக்கு ஏற்ப பேச்சுகளை நடத்தி வருகின்றனர்.

இந்த நகர்வுகள் யாவும் முன்பு ஒரு முறை பயங்கரவாத அமைப்பாக பார்க்கப்பட்ட தமது அமைப்பை அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஆளும் தரப்பாக மாற்றும் என்பதில் தலிபான்கள் மிகவும் உறுதியாக செயற்பட்டு வருகின்றனர் என்பதையே எடுத்து காட்டுகிறது.

-லோகன் பரமசாமி-

Share.
Leave A Reply