காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தியுள்ளதை ஐநாவும் ஏழு அராபிய நாடுகளும் கடுமையாக கண்டித்துள்ளன.
காசாவிற்குள் மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு இஸ்ரேல்தடைவிதித்துள்ளது.
ஹமாஸ் உணவுப்பொருட்கள் உட்பட மனிதாபிமான உதவிகளை திருடி அவற்றை விற்பனை செய்து தன்னை நிதிரீதியாக பலப்படுத்துகின்றது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் அமைப்பு யுத்தநிறுத்தத்தை நீடிப்பதற்கான அமெரிக்காவின் யோசனையை நிராகரித்துள்ளது என இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும் இஸ்ரேலிய பிரதமரின் இந்த கருத்தினை மலினமான பயமுறுத்தும் நடவடிக்கை என தெரிவித்துள்ள ஹமாஸ் பேச்சாளர் யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு எதிரான சதி என தெரிவித்துள்ளார்.
இதேவேளை மனிதாபிமான பொருட்கள் காசாவிற்குள் செல்வதற்கு இஸ்ரேல் தடைவிதித்துள்ளதை கடுமையாக கண்டித்துள்ள கத்தார் இது தெளிவான யுத்த நிறுத்த உடன்படிக்கை மீறல்,சர்வதேச மனிதாபிமான சட்ட மீறல் என தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பட்டினியை பாலஸ்தீன மக்களிற்கு எதிராக ஆயுதமாக பயன்படுத்துகின்றது என எகிப்து குற்றம்சாட்டியுள்ளது.
காசாவில் யுத்த நிறுத்தம் சாத்தியமாவதற்கான மத்தியஸ்த முயற்சிகளை எகிப்தும் கத்தாரும் மேற்கொண்டிருந்தன.
இஸ்ரேலின் நடவடிக்கையை சவுதி அரேபியாவும் கடுமையாக கண்டித்துள்ளது.
சர்வதேச மனிதாபிமான சட்டம் தெளிவானது முக்கியமான உயிர்காக்கும் பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்வதற்கு நாங்கள் அனுமதிக்கவேண்டும் என ஐக்கியநாடுகளின் மனிதாபிமான விவகாரங்களிற்கான பிரதி செயலாளர் நாயகம் டொம் பிளெச்சர் தெரிவித்துள்ளார்.