உலக அரசியலின் போக்கு மேற்காசியாவின் போர் சூழலை தீவிரப்படுத்தி வருகிறது. ஏற்கனவே இஸ்ரேல்- ஹமாஸுக்கு இடையிலான போரானது பாரிய சிதைவுகளை இஸ்லாமியர்களுக்கு ஒரு பக்கம் ஏற்படுத்திவருகிறது.

மறுபக்கத்தில் ஈரான் – அமெரிக்க போர் எழுவதற்கான வாய்ப்பு அதிகரித்து வருவதாகவே தெரிகிறது.

ஆனாலும் இரு தரப்பும் அதிக எச்சரிக்கையுடன் போருக்கான தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றன.

1979ஆம் ஆண்டிலிருந்து ஈரான், அமெரிக்க முரண்பாடு தீவிரம் பெற்றுக் காணப்படுகிறது. இதில் அமெரிக்கா பல்வேறு காலப்பகுதிகளில் போருக்கான முனைப்புகளை மேற்கொண்ட போதும் ஈரானுடன் நேரடிப் போர் ஒன்றை மேற்கொள்ளாது தவிர்த்து வந்தது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது தடவை தெரிவு செய்யப்பட்டதன் பின் ஈரானுடன் போரை நிகழ்த்துமென்ற நிலைப்பாடு காணப்பட்டது. ஆனால் நடைமுறையில் அதற்கான வாய்ப்புகள் இருந்தும், சமாதானப் பேச்சுவார்த்தை சார்ந்து அண்மைக் காலங்களில் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

இக்கட்டுரையும் ஈரான், அமெரிக்கா போர் சாத்தியமானதா என்பது பற்றிய தேடலை முதன்மைப்படுத்துகின்றது.

முதலாவது கேள்வி, அமெரிக்கா ஏன் ஈரான் மீது ஒரு தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடுகின்றது.

அதற்கான பதில் பல்வேறு அம்சங்களை கொண்டதாக தெரிகிறது. அதில் முதன்மையானது, ஈரானின் அணுவாயுதத்துக்கான பரிசோதனையை மேற்கொள்ளும் திறன் இஸ்ரேலை மட்டுமல்ல, மேற்காசியாவையும் ஏன் உலகத்தையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கக் கூடியது.

ஈரானின் அணுவாயுதம் இஸ்ரேலை முதலில் இலக்கு வைக்கக் கூடியதாக இருக்கும் என்று அச்சம் அமெரிக்காவிடம் உண்டு.

அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் சர்வதேச அணுசக்தி பிரிவின் கண்காணிப்பாளர் ரெபெல் குரோசி அண்மையில் தெரிவிக்கும் போது ஈரான், அணு ஆயுதத்தை பரிசோதிக்கும் திறனை அண்மித்துவிட்டது என்றார்.

அதனால் ஈரான் மீதான போரை நிகழ்த்துவதென்றும், அதற்கு இஸ்ரேல் தலைமை தாங்கும் எனவும் அமெரிக்கா, அந்தப் போரை வழிநடத்தும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அடுத்து மிக முக்கியமான ஒரு அம்சம், ஈரானின் அனுசரணையுடன் இயங்கும் ஹமாஸ் அமைப்பு, ஹவுத்தி கிளர்ச்சிக் குழு மற்றும் ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளை இஸ்ரேலால் முழுமையாக அழிக்க முடியாமல் இருப்பதும், இதேபோன்று பல ஆயுதக்குழுக்களை ஈரான் இயக்குவதாகவும், அமெரிக்க புலனாய்வு தகவல் உறுதிப்படுத்துகின்றது.

அதனை கடந்து ஈரான் அண்மையில் தரைக்கு கீழ் காண்பித்த ஏவுகணை நகரங்களும், ஆயுத களஞ்சியங்களும், நவீனரக விமானங்களும், ஆளில்லாத விமானங்களும், அமெரிக்காவை அதிகம் எச்சரித்ததோடு, இஸ்ரேலின் இருப்புக்கு அதிக நெருக்கடியை கொடுக்கும் திறனை கொண்டிருக்கும் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

ஈரானிய தரைக்கீழ் இராணுவ நகரங்கள் இஸ்ரேலை மட்டுமல்ல மேற்காசிய நாடுகளையும், இதர கண்டத்து நாடுகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றது.

எனவேதான் அமெரிக்கா ஈரான் மீது ஒரு போரை நடத்துவதன் மூலம் பிராந்திய அரசியலையும், உலக அரசியலையும் கட்டமைக்கத் திட்டமிடுகிறது.

உலக அரசியலில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி சீனா-, ரஷ்யா, -வடகொரியா என்பது ஈரானுடன் கைகோர்த்திருப்பதும் அமெரிக்கா – இஸ்ரேலிய இருப்பின் உலகளாவிய அச்சுறுத்தலாகவே மாறி இருக்கின்றது.

இதன் அடிப்படைகளுக்குள்ளாலேயே அமெரிக்கா, ஈரான் மீதான போரை முன்னகர்த்த முயன்றது.

ஆனால் ஈரானுடைய நகர்வுகளும் அதன் மதத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் எச்சரிக்கைகளும், அமெரிக்க ஜனாதிபதியின் அழைப்புக்கு ஈரானிய ஆட்சியாளர்கள் வெளிப்படுத்திய பதில் எச்சரிக்கைகளும், அமெரிக்காவை அதிகம் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளதாகவே தெரிகிறது.

அது மட்டுமல்ல அண்மைய நாட்களில் அமெரிக்காவின் போர் விமானமொன்று ஈரானிய எல்லையோரத்தில் தொடர்பை இழந்திருப்பதும், ஈரானிய இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சி வலுவடைந்தது என்பதும் அமெரிக்கா போரை விட சமாதானம் நோக்கி நகர திட்டமிடுவதற்குக் காரணமாகத் தெரிகின்றது. ஈரானின் அண்மைய வெளிப்பாடுகள் அதிக குழப்பத்தை இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்படுத்தி உள்ளது.

உலகளாவிய ரீதியில் முதல் தரமான இராணுவத் திறன்களையும் ஆயுதத் தளபாடங்களையும் கொண்டிருக்கும் அமெரிக்கா, ஈரானை குறுகிய கால பகுதியில் தோற்கடித்து விடும் என்ற கணிப்பு உலக இராணுவ வல்லுனர்களிடம் உண்டு.

ஆனால் அத்தகைய பலம் ஈரானின் எதிர்ப்பினால் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டிய நிலையை எற்படுத்தும் என்ற அச்சமும், அதனால் சர்வதேச சக்திகள் எழுச்சி பெற்றுவிடும் என்ற சூழலும், அமெரிக்க இராணுவ வல்லுனர்களிடம் எழுந்திருக்கின்றது. இதனால் போரை விட சமாதானம் சிறந்த வழிமுறையாக அமையுமென அமெரிக்கா கருதுகிறதா என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.

இரண்டாவது கேள்வி, போர் சாத்தியப்படாத சூழலில், சமாதான உடன்பாடொன்று சாத்தியமாகுமா என்ற கேள்வி முக்கியமானது.

ஈரான் தெளிவாகவே அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான பேச்சுவார்த்தை நேரடியாக இரு தரப்புகளுக்கும் இடையிலானது அல்ல என்று. இன்னொரு நாட்டின் மத்தியஸ்தத்தின் கீழ் நிகழ்த்தப்பட வேண்டும் எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

அதிலும் முக்கியமாக அமெரிக்கா விரும்பும் அணுவாயுத பரவல்தடை ஒப்பந்தம் பற்றிய உரையாடலை தன்னிச்சையாக அமெரிக்கா வெளியேறிய சூழலை மையப்படுத்தியே அமைக்க வேண்டும் எனவும் அத்தகைய உடன்படிக்கை ஈரான் மீதான பொருளாதார தடைகள் முழுமையாக அகற்றப்பட்டதன் பின்னரே சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளது.

ஆனால் பேச்சுவார்த்தை சூழலை நோக்கி அமெரிக்காவோ, ஈரானோ முழுமையாக நகரவில்லை என்பது தெரிகிறது. ஆனால் தவிர்க்க முடியாது இரு தரப்பும் ஏதோவொரு அடிப்படையில் உடன்படிக்கை ஒன்றுக்கு நகர வேண்டிய புறச்சூழல் காணப்படுகிறது.

ஈரான் மீதான போரினால் நெருக்கடிக்கு உள்ளாகும் ஒரு சூழலை அமெரிக்கா ஒரு போதும் முதன்மைப்படுத்தாது என்பதே, அது சமாதானம் பற்றிய உரையாடலை முன்வைக்கின்ற போது தெரிகிறது. ஈரான் அணுவாயுத உடன்பாட்டில் இருந்து தன்னிச்சையாக வெளியேறி அமெரிக்காவை பல்வேறு அழுத்தங்கள் மூலம் அத்தகைய உடன்பாட்டுக்கு ஒப்புக்கொள்ள வைப்பதில் வெற்றி கண்டுள்ளது.

முடிவாக ஈரான் அமெரிக்கப் போருக்கான முனைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவே தெரிகிறது.

ஈரான் மீது அமெரிக்கா போரை பிரகடனப்படுத்துமாக இருந்தால் அதன் விளைவுகளை இஸ்ரேல் உடனடியாக அனுபவிக்கும் துயரம் தவிர்க்க முடியாது.

அதனால் எச்சரிக்கைகளுடன் கடந்த காலத்தை போன்று கடந்து செல்லும் தந்திரோபாயத்தை அதிகம் அமெரிக்கா பின்பற்ற வாய்ப்புள்ளது.

அதேநேரம் இஸ்ரேல்- அமெரிக்க நாடுகளின் உளவுப் பிரிவுகள் ஈரான் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தத் தவறாது.

ஏதோவொரு காலப்பகுதியில் ஈரான், அணுவாயுத பரிசோதனை மேற்கொள்ளுமாயின் அதற்கு பதிலான தாக்குதலையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைக்குள் தள்ளப்படும்.

அத்தகைய காலப்பகுதி வரை அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டு காத்திருக்க வேண்டிய நிலை தவிர்க்க முடியாது.

அதனையும் மீறி, ஈரான் அணுவாயுதத்தையோ அல்லது அதற்கு நிகரான ஆயுதத்தையோ பரிசோதித்து வெற்றி காணுமாக இருந்தால் மேற்காசியாவின் அதிகாரச் சமநிலை மாற்றத்திற்கு உள்ளாகும் நிலை தவிர்க்க முடியாததாகும்.

அதனால் தற்போது போருக்கான வாய்ப்பை விட சமாதான உடன்படிக்கைக்கான வாய்ப்பு அதீதமாகவே தெரிகின்றது.

ஈரான் இராஜதந்திர ரீதியில் இஸ்ரேல்- அமெரிக்க உத்திகளை எதிர்கொள்வது அவசியமானது. அத்தகைய நிலையை நோக்கி நகர வேண்டிய தேவைப்பாடு ஈரானுக்கு உண்டு.

அமெரிக்காவையும் இஸ்ரேலின் இராணுவ திறன்களையும் எதிர்கொள்ளக்கூடிய திறனுடைய நாடு என்று குறிப்பிட்டு விட முடியாது.

இதனால் ஒரு போரை தவிர்ப்பதும் தனது இராணுவ வல்லமையை பாதுகாப்பதும் அணு ஆயுத பரிசோதனைக்குரிய சூழலை கையாளுவதும் ஈரானுக்கு அவசியமானது.

எல்லாவற்றுக்கும் மேலாக ஈரானின் புவிசார் அமைவிடம், அதன் இருப்பை பாதுகாக்கின்ற பிரதானமான அம்சம் என்பது அமெரிக்க- இஸ்ரேலிய போர் முனைப்புகள் கைவிடப்படுவதற்கு அல்லது பலவீனம் அடைவதற்கு பிரதான காரணியாக தெரிகின்றது.

அமெரிக்கா நேரடிப் போரைத் தவிர்ப்பதுடன் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலையே மேற்கொள்ள வாய்ப்பு அதிகமாக உள்ளது.

ரீ.கணேசலிங்கம்-

Share.
Leave A Reply