யாழ்ப்பாணம் திருநெல்வேலிப் பகுதியில் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஆறு சந்தேக நபர்களையும் எதிர்வரும் டிசம்பர் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சம்பவ விவரம்: கடந்த ஞாயிற்றுக்கிழமை திருநெல்வேலிச் சந்தி அருகில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பிரதான சூத்திரதாரி உள்ளிட்ட ஆறு பேர் யாழ்ப்பாண மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
-
நீதிமன்ற நடவடிக்கை: ஆறு பேரும் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டபோது, 24 மணி நேரம் பொலிஸ் காவலில் தடுத்து வைத்து விசாரணை நடத்தப் பொலிஸார் அனுமதி கோரினர். பொலிஸ் தடுப்புக் காவல் விசாரணை முடிவுற்ற நிலையில், ஆறு சந்தேக நபர்களும் மீண்டும் யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். இதையடுத்து, மேலதிக நீதிவான் உசைன் அவர்கள் விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
புதிய ஆதாரங்கள் மற்றும் தேடுதல்:
-
கார் மீட்பு: பொலிஸாரின் தடுப்புக் காவல் விசாரணையின்போது, கொலைச் சம்பவம் நடைபெற்ற நேரத்தில் தாக்குதலாளிகளைக் காப்பாற்றும் வகையில் சந்தேக நபர்களைப் பின் தொடர்ந்து பயணித்த ஒரு கார் யாழ்ப்பாண மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் ஏழாலைப் பகுதியில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
-
தேடுதல் தொடர்கிறது: குறித்த கொலைச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்து தலைமறைவாகியுள்ள மேலும் இருவரைத் தேடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

