கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல் நோக்கிப் புறப்பட்ட துருக்கிய ஏர்லைன்ஸ் (TK733) விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நள்ளிரவில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.
விமானத்தின் தரையிறங்கும் சக்கரப் பகுதியில் (Landing Gear) ஏற்பட்ட கோளாறு காரணமாக, அதிக எடையுடன் தரையிறங்குவதைத் தவிர்க்க விமானி சாமர்த்தியமாகச் செயல்பட்டார். இதற்காகச் சிலாபம் கடல் பகுதிக்கு மேலாக சுமார் 2 மணி நேரம் விமானம் வட்டமடிக்கச் செய்யப்பட்டு, வானிலேயே பெருமளவு எரிபொருள் வெளியேற்றப்பட்டது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த சூழலில், விமானி விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்கினார். இதனால் விமானத்திலிருந்த 202 பயணிகள் மற்றும் 10 ஊழியர்கள் என மொத்தம் 212 பேரும் எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பினர். விமானியின் நிதானமான செயல்பாடும், தரைக் கட்டுப்பாட்டு அறையின் துரித நடவடிக்கையும் பெரும் விபத்தைத் தவிர்த்துள்ளன.

