மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று (ஜனவரி 26) இடம்பெற்ற அரியதொரு பிரசவத்தில், கிரான்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் ஐந்து ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
மட்டக்களப்பு, கிரான்குளம் பகுதியைச் சேர்ந்த சிவா மற்றும் மனோஜினி தம்பதியினருக்கே இந்த அபூர்வக் கொடை கிடைத்துள்ளது.
திருமணமான தம்பதியினர் நீண்ட நாட்களாகக் குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருந்த நிலையில், ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்துள்ளமை அவர்களது குடும்பத்தினர் மற்றும் கிராம மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வைத்தியசாலையின் அறிக்கை: நேற்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் விசேட மகப்பேற்று வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் இந்தப் பிரசவம் வெற்றிகரமாக இடம்பெற்றது. தற்போது தாயும், ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இவ்வாறான பல குழந்தைகள் கொண்ட பிரசவங்கள் சிக்கலானவை என்பதால், வைத்தியசாலை ஊழியர்கள் மற்றும் தாதியர்களின் விசேட கவனிப்பில் குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்ட வரலாற்றில் ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்தமை இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இந்த மகிழ்ச்சியான செய்தியை அறிந்த பலரும் சமூக வலைத்தளங்களில் அத்தம்பதியினருக்குத் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்

