1977, ஜனவரி 18-ம் தேதி. வானொலி வாயிலாக முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார் பிரதமர் இந்திரா காந்தி.
மொத்த இந்தியாவிலும் ஒரே பரபரப்பு. ‘அவசரநிலை படிப்படியாகத் தளர்த்தப்படும். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, மார்ச் மாதத்தில் தேர்தல் நடத்தப்படும்’ என்பதுதான் அந்த அறிவிப்பு.
அத்துடன், சர்வாதிகார இருள் அகன்று, சிறைகளிலிருந்து மிசா கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்!
ஏமாந்த எம்.ஜி.ஆர்..!
அவசரநிலை வாபஸ் பெறப்பட்டதால், தேசிய அரசியலில் காட்சிகள் மாறின. இந்திரா காங்கிரஸை ஆட்சிக்கட்டிலிலிருந்து அகற்ற வேண்டும் என்று ஜே.பி வியூகம் வகுக்கத் தொடங்கினார்.
காங்கிரஸுக்கு எதிராக மிகப்பெரிய அணி உருவானது. ஸ்தாபன காங்கிரஸ், சோசலிஸ்ட் கட்சி, பாரதிய லோக் தளம், ஜன சங்கம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் ஒன்றுகூடி, ‘வரும் தேர்தலில் ஒரே கட்சியாகப் போட்டியிடுவது’ என முடிவெடுத்தனர்.
நான்கு கட்சிகளும் சேர்ந்து ‘ஜனதா கட்சி’ என்று புது அவதாரம் எடுத்தன. 1977, ஜனவரி 23-ம் தேதி ஜனதா கட்சி தொடங்கப்பட்டு, அதன் தலைவராக மொரார்ஜி தேசாயும், வழிகாட்டியாக ஜே.பி-யும் செயல்பட்டனர்.
அந்தக் கட்சியின் சின்னம், ‘ஏர் உழவன்.’ நேரு அமைச்சரவையிலும், இந்திரா அமைச்சரவையிலும் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவர் பாபு ஜெகஜீவன் ராம்.

ரயில்வே, பாதுகாப்புத்துறை உட்பட முக்கியத் துறைகளுக்கு அமைச்சராக இருந்த அவர், அவசரநிலை காலத்தின் அராஜகங்களால் கடும் அதிருப்தியில் இருந்தார்.
தேர்தல் வருவதற்கு முன்பு காங்கிரஸிலிருந்து விலகி, ‘ஜனநாயக காங்கிரஸ்’ என்ற புதிய கட்சியை ஆரம்பித்து ஜனதா கட்சியுடன் அவர் கூட்டணி வைத்தார்.
நாடாளுமன்றத் தேர்தலுடன், தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும் என்று பலர் எதிர்பார்த்தனர். குறிப்பாக, எம்.ஜி.ஆர் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தார்.
அவரது கனவில் மண்ணைப் போட்டது தேர்தல் ஆணையம். அதேநேரம், கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் கொந்தளித்தார். ஆனாலும், என்ன செய்ய… காங்கிரஸைப் பகைத்துக்கொள்ள அவர் தயாரில்லை.
காங்கிரஸுடன் சேர்ந்தே மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். அ.இ.அ.தி.மு.க 20 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூன்று தொகுதிகளிலும் போட்டியிட்டன.
அ.தி.மு.க அமோக வெற்றி!
அவசரநிலை காலத்தில் கடும் அடக்குமுறைகளை எதிர்கொண்ட தி.மு.க., ஜனதா கட்சியுடன் கூட்டணிவைத்தது.
மேற்கு வங்கத்திலும், கேரளாவிலும் தனித்துப் போட்டியிட்ட சி.பி.எம்., தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஜனதா கட்சி கூட்டணியில் தொகுதி உடன்பாடு செய்துகொண்டது.
தமிழகத்தில் தி.மு.க 19 தொகுதிகளிலும், ஜனதா கட்சி 18 தொகுதிகளிலும் போட்டியிட்டன. சி.பி.எம் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல் என இரு தொகுதிகளை மட்டும் தி.மு.க ஒதுக்கியது.
தேர்தல் நெருங்கியது. அதுதான் சரியான தருணம் என்று, சர்க்காரியா கமிஷனின் இடைக்கால அறிக்கையை வெளியிட்டார்கள்.
அதை வைத்துக்கொண்டு, ‘ஊழல் ஆட்சிக்கு முடிவுகட்டுங்கள்…’ என்று தி.மு.க-வுக்கு எதிராக, அ.இ.அ.தி.மு.க அணி பிரசாரம் செய்தது.
தி.மு.க அணியோ, அவசரநிலை காலக் கொடுமைகளை முன்வைத்து, ‘ஜனநாயகத்துக்கும் சர்வாதிகாரத்துக்கும் இடையிலான யுத்தம்’ என்று பிரசாரம் செய்தது.
மார்ச் 16 – 20 தேதிகளில் தேர்தல். மார்ச் 21-ம் தேதி முடிவுகள் வெளியாகின. தி.மு.க-வுக்கு அதிர்ச்சியையும், அ.தி.மு.க-வுக்கு ஆனந்தத்தையும் தேர்தல் முடிவுகள் கொடுத்தன.
தி.மு.க இடம்பெற்ற ஜனதா கட்சி தேசிய அளவில் 295 இடங்களைப் பிடித்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
ஜனதா கூட்டணி ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிய இடங்கள் 345 (மக்களவை மொத்த இடங்கள் 542).
அதேநேரம், தமிழ்நாட்டில் தி.மு.க – ஜனதா கூட்டணி தோல்வியைத் தழுவியது. தி.மு.க வேட்பாளர்களில் ஏ.வி.பி.ஆசைத்தம்பி (வடசென்னை), சி.என்.விஸ்வநாதன் (திருப்பத்தூர்) இருவர் மட்டுமே வெற்றிபெற்றனர்.
ஜனதா கட்சியில் ஐக்கியமான ஸ்தாபன காங்கிரஸின் குமரி அனந்தன் (நாகர்கோவில்), வி.தண்டாயுதபாணி (வேலூர்), பா.ராமச்சந்திரன் (மத்திய சென்னை) ஆகிய மூவர் மட்டுமே வெற்றிபெற்றனர்.
சி.பி.எம் வேட்பாளர்கள் இருவருமே தோல்வியடைந்தனர்.
அ.தி.மு.க வேட்பாளர்களில் மாயத்தேவர் (திண்டுக்கல்), எஸ்.டி.சோமசுந்தரம் (தஞ்சாவூர்) உட்பட 18 பேர் வெற்றிபெற்றனர்.
இந்திரா காங்கிரஸின் வேட்பாளர்களில் ஆர்.வி.சுவாமிநாதன் (மதுரை), ஆர்.வெங்கட்ராமன் (தென்சென்னை), ஓ.வி.அழகேசன் (அரக்கோணம்), வாழப்பாடி கே.ராமமூர்த்தி (தருமபுரி), எம்.அருணாசலம் (தென்காசி), கே.டி.கோசல்ராம் (திருச்செந்தூர்) உட்பட 14 பேர் வெற்றிபெற்றனர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பார்வதி கிருஷ்ணன் (கோயம்புத்தூர்), எம்.கல்யாணசுந்தரம் (திருச்சி), எஸ்.ஜி.முருகையன் (நாகப்பட்டினம்) ஆகிய மூவரும் வெற்றிபெற்றனர்.
சரிந்த சாம்ராஜ்ஜியம்!
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சிக்கு 154 இடங்களே கிடைத்தன. அவசரநிலை காலத்தில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான வடமாநில மக்கள், காங்கிரஸை மண்ணைக் கவ்வச் செய்தார்கள்.
உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 85 தொகுதிகள். அங்கு ஒரு தொகுதியில்கூட காங்கிரஸ் ஜெயிக்கவில்லை.
பீகாரில் மொத்தம் 54 தொகுதிகள். அங்கும் ஓர் இடம்கூட காங்கிரஸுக்குக் கிடைக்கவில்லை. ராஜஸ்தானிலும், மத்தியப் பிரதேசத்திலும் தலா ஒரு தொகுதியில் மட்டும் காங்கிரஸ் ஜெயித்தது.
பிரதமர் இந்திரா காந்தி ரேபரேலியிலும், அவசரநிலைக் காலத்தில் ஆட்டம் போட்ட இந்திரா காந்தியின் இளைய புதல்வர் சஞ்சய் காந்தி அமேதியிலும் தோற்றுப்போயினர்.
1971 தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடும்போது, இந்த முறை 200 இடங்களை காங்கிரஸ் இழந்தது. அவசரநிலையால் பெரிய அளவில் பாதிக்கப்படாத தென்மாநிலங்களே காங்கிரஸுக்குக் கைகொடுத்தன.
தமிழ்நாட்டில் 14 இடங்களிலும் (மொத்தம் 39), கர்நாடகாவில் 26 இடங்களிலும் (மொத்தம் 28), ஆந்திராவில் 41 இடங்களிலும் (மொத்தம் 42), கேரளாவில் 11 இடங்களிலும் (மொத்தம் 20) இந்திரா காங்கிரஸ் வெற்றிபெற்றது.
தேசிய அளவில் பாபு ஜெகஜீவன் ராமின் ஜனநாயக காங்கிரஸுக்கு 28 இடங்களும், சி.பி.எம் கட்சிக்கு 22 இடங்களும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏழு இடங்களும் கிடைத்தன.
அரியணையில் புதியவர்கள்!
சுதந்திர இந்தியாவில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய காங்கிரஸ், முதன்முறையாக அரியணையிலிருந்து அகற்றப்பட்டது.
1977, மார்ச் 24-ம் தேதி ஜனதா கட்சி தலைமையில் புதிய அரசு அமைந்தது. பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றார்.

Atal Bihari Vajpayee Morarji Desai and Charan Singh
சரண் சிங், பாபு ஜெகஜீவன் ராம், மது தண்டவதே, அடல் பிஹாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, பா.ராமச்சந்திரன், பிஜு பட்நாயக், பிரகாஷ் சிங் பாதல், ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சுர்ஜித் சிங் பர்னாலா உள்ளிட்டோர் மத்திய அமைச்சர்களாக இடம்பெற்றனர்.
ஆனால், தி.மு.க-வுக்கு இரண்டு எம்.பி-க்கள் இருந்தும், மத்திய அமைச்சரவையில் இடம் கொடுக்க மொரார்ஜி தேசாய்க்கு மனமில்லை.
அவசரநிலைக் காலத்தில், பரோடா வெடிகுண்டு சதி வழக்கில் கைதுசெய்யப்பட்ட ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், சிறையில் இருந்தவாறே முசாஃபர்பூர் (பீகார்) தொகுதியில் போட்டியிட்டு வென்றார். அவர்மீதான வழக்கு வாபஸ் பெறப்பட்டது.
பிரகாஷ் சிங் பாதல் மீதான கிரிமினல் வழக்கும் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், தி.மு.க-வுக்கு எதிரான சர்க்காரியா கமிஷனை மொரார்ஜி தேசாய் ரத்துசெய்யவில்லை.
கருணாநிதிக்கு சிக்கல்!
ஏற்கெனவே கட்சிக்குள் கருணாநிதியின் தலைமைமீதான எதிர்ப்புக்குரல் ஒன்று இருந்துவந்தது. அவசரகால நிலை சமயத்தில், ‘தி.மு.க தலைவர் பதவியிலிருந்து கருணாநிதி விலகினால், கட்சிக்கு சிக்கல்கள் வராது’ என்று சில முன்னணித் தலைவர்களே கட்சிக்குள் பேசத் தொடங்கினார்கள்.
முன்னாள் அமைச்சர் செ.மாதவன் வீட்டில் கூட்டமெல்லாம் போட்டார்கள். பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் கருணாநிதி எதிர்ப்பில் தீவிரமாக இருந்தனர்.
நடிகர் எஸ்.எஸ்.ஆர்., ‘கருணாநிதி பதவி விலகக் கூடாது’ என்று குரல் உயர்த்தினார். பின்னர் அதே எஸ்.எஸ்.ஆர்., ‘தலைவர் பதவியிலிருந்து கருணாநிதி உடனே விலக வேண்டும்’ என்று பல்டி அறிக்கை வெளியிட்டார்.
‘அனைத்துக்கும் பின்னால் இந்திரா காந்தி அரசு இருப்பதாக’ தி.மு.க-வினர் குற்றம்சாட்டினர்.
மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மீண்டும் அந்த எதிர்ப்புக்குரல் எழுந்தது. தேர்தல் தோல்வி காரணமாக தி.மு.க தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கருணாநிதி அறிவித்தார்.
உடனே, பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்வதாக நெடுஞ்செழியன் அறிவித்தார். அன்பழகன் உள்ளிட்ட தலைவர்களின் தலையீட்டால் ராஜினாமாவை இருவரும் வாபஸ் பெற்றனர்.
ஆனாலும், பிரச்னை தீரவில்லை. தி.மு.க-விலிருந்து நெடுஞ்செழியன் திடீரென்று விலகினார். முன்னாள் அமைச்சர்கள் செ.மாதவன், க.ராசாராம், சி.பா.ஆதித்தனார், ப.உ.சண்முகம் ஆகியோர் ‘மக்கள் தி.மு.க’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினர்.
அதன் பொதுச்செயலாளர் பதவியை நெடுஞ்செழியன் ஏற்றார்.அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த எம்.ஜி.ஆரின் மனதுக்குள் ஒரே கொண்டாட்டம்.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பும் வெளியானது. கருணாநிதியும் எம்.ஜி.ஆரும் நேருக்கு நேர் போருக்குத் தயாரானார்கள். வென்றது யார்?
(இன்னும் அறிவோம்
ரத்த சரித்திரம்! அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது! (தமிழக தேர்தல் வரலாறு-13)

