மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் போர் வெறும் பிராந்திய மோதலாக மட்டும் சுருங்கிவிடாமல், ஒட்டுமொத்த உலக நாடுகளின் பொருளாதார நிலைத்தன்மைக்கும் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.
இந்தப் போரின் தீவிரமும், இது இன்னும் எத்தனை நாட்களுக்கு நீடிக்கப்போகிறது என்பதும்தான் வருங்கால உலகப் பொருளாதாரத்தின் திசையைத் தீர்மானிக்கப் போகின்றன.
தற்போது இலங்கையில் எரிபொருட்கள் மற்றும் எரிவாயுவின் விலைகள் அதிகரித்துள்ளன. இது பொருட்களின் விலைகள், சேவைக் கட்டணங்களில் அதிகரிப்பை ஏற்படுத்துவதுடன் மக்களுக்கே வாழ்க்கை சுமையை அதிகரிப்பதாக அமையும்.
கடந்த காலங்களில் மிக மோசமான பொருளாதார நெருக்கடிகளைச் சந்தித்து, தற்போது மெல்ல மெல்ல மீண்டு வர முயற்சிக்கும் இலங்கையைப் போன்ற நாடுகளுக்கு, மத்திய கிழக்கு போர் வடுக்கள் மீண்டும் ஒரு கறுப்பு நிழலைப் படியச் செய்துள்ளன.
இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு இந்த யுத்தம் இதே வேகத்தில் தொடருமானால், இலங்கை மீண்டும் ஒரு பாரிய பொருளாதார முடக்கத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்பது கசப்பான உண்மையாகும்.
விநியோகச் சங்கிலி முடக்கம்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவும் நேரடி மோதல்கள், சர்வதேச வர்த்தகப் பாதைகளில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக, ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் வழித்தட முடக்கங்கள் உலகளாவிய விநியோகச் சங்கிலியைச் சீர்குலைத்துள்ளன.
இலங்கையின் பிரத்தியேக பொருளாதார கடல் எல்லைக்குள்ளேயே ஈரானியக் கப்பல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதல், இந்தப் போர் எமது அண்மைய எல்லைவரை வந்துவிட்டதைக் காட்டுகிறது. இத்தகைய சூழல் கப்பல் போக்குவரத்தில் தாமதத்தையும், காப்புறுதிச் செலவு அதிகரிப்பையும் ஏற்படுத்தி, இறுதியில் நுகர்வோர் மீதான விலையேற்றமாக உருவெடுக்கிறது.
ஹோர்முஸ் நீரிணை நெருக்கடி
உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் ஈரானின் கட்டுப்பாட்டிலுள்ள ‘ ஹோர்முஸ் நீரிணை’ மிக முக்கியமான ஒரு கேந்திர நிலையமாகும்.
தற்போது நிலவும் போர் காரணமாக இந்தப் பாதை தற்காலிகமாக முடக்கப்பட்டிருப்பது, உலக நாடுகளுக்கு விடப்பட்ட பெரும் சவாலாகும்.
உலகளாவிய எரிபொருள் தேவையில் இருபது சதவீதப் போக்குவரத்து இந்தப் பாதையிலேயே தங்கியுள்ளது. ஈரான் ஒரு சில கப்பல்களுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கினாலும், பெரும்பாலான சரக்குக் கப்பல்கள் மாற்றுப் பாதைகளைத் தேடி அலைகின்றன.
இது எரிபொருள் விலையைச் சர்வதேசச் சந்தையில் பன்மடங்கு உயர்த்த வழிவகுக்கும். தற்போது சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலைகள் 100 டொலர்களை தாண்டியுள்ளன.
பின்னர் குறிப்பிட்ட வீதத்தில் குறைந்தது. இந்த பின்னணிலேயே இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
சிங்கப்பூர், இந்தியா மற்றும் சீனா போன்ற ஆசிய நாடுகள் இந்தப் பாதையையே பெரிதும் நம்பியுள்ளன. இந்தியா தனது மொத்த எரிபொருள் இறக்குமதியில் முப்பது சதவீதத்தை இந்த வழியாகவே பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு ஏற்படும் நெருக்கடி என்ன?
இலங்கை நேரடியாக ஹோர்முஸ் நீரிணை வழியாக எரிபொருளைப் பெறாவிட்டாலும், எரிபொருளுக்காகச் சார்ந்திருக்கும் இந்தியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அந்தப் பாதையையே நம்பியுள்ளன.
அந்த நாடுகளில் எரிபொருள் தட்டுப்பாடு அல்லது விலை உயர்வு ஏற்படும் போது, அங்கிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளைப் பெறும் இலங்கையும் நிச்சயமாகப் பாதிக்கப்படும்.
அடுத்த சில வாரங்களுக்குப் போர் நீடித்தால், இலங்கையில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், விலையும் கணிசமாக உயரும் நிலமையே நீடிக்கிறது.
எரிபொருள் என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத் தேரின் அச்சாணி போன்றது. அதன் விலையேற்றம் போக்குவரத்து, மின்சாரம், கல்வி, மருத்துவம் மற்றும் உற்பத்தித் துறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி, மக்களின் அன்றாட வாழ்வைச் சுமைமிக்கதாக மாற்றும்.
எரிபொருள் விலை உயரும் போது, அது நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திச் செலவை அதிகரிக்கச் செய்யும். விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் மற்றும் சேவைத் துறைகள் அனைத்தும் எரிபொருளிலேயே தங்கியுள்ளன.
விவசாயிகளுக்குத் தேவையான உரம் உள்ளிட்ட உள்ளீடுகள் இறக்குமதி செய்யப்படுவதால், நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தல் ஏற்படலாம்.
போக்குவரத்துச் செலவுகள் அதிகரிக்கும் போது சந்தையில் உணவுப் பொருட்களின் விலையும், மருந்துப் பொருட்களின் விலையும் ஏழை எளிய மக்களின் எட்டாக்கனியாக மாறும். இது பொதுவான பணவீக்கத்தை மட்டுமன்றி, உணவுப் பணவீக்கத்தையும் மிக உயரிய நிலைக்குக் கொண்டு செல்லும் அபாயம் உள்ளது.
சுற்றுலாத்துறை
அந்நியச் செலாவணி
இலங்கையின் அந்நியச் செலாவணி வருவாயில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஐரோப்பிய நாடுகளிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் மத்திய கிழக்கு வான்வழியாகவும், அந்தப் பகுதி விமான நிலையங்கள் ஊடாகவுமே இலங்கை வருகின்றனர்.
போர் காரணமாக வான்வழிப் போக்குவரத்துப் பாதைகள் மாற்றப்படுவதும், விமான நிலையங்கள் முடக்கப்படுவதும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை வெகுவாகக் குறைத்துள்ளது.
கடந்த ஆண்டில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டப்பட்ட வருமானம் நாட்டின் பொருளாதார மீட்சிக்கு பெரும் உதவியாக இருந்தது.
ஆனால், தற்போதைய பதற்றம் டொலர் உள்வருகையைக் கடுமையாகக் குறைத்து, இலங்கையின் அந்நியச் செலாவணி கையிருப்பைச் சரிவடையச் செய்யும். மத்திய வங்கியின் தகவலின்படி 2025 இல் இலங்கை சுற்றுலாத்துறை ஊடாக 3.7 பில்லியன் டொலர்களை ஈட்டியது.
மேலும் இலட்சக்கணக்கான இலங்கையர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் ஆண்டுதோறும் அனுப்பும் பில்லியன் கணக்கான டொலர்கள்தான் இலங்கையின் பொருளாதாரத்தைத் தாங்கிப் பிடிக்கின்றன.
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் ஊடாக 2025இல் 7 பில்லியன் டொலர்கள் இலங்கைக்கு வந்துள்ளன.
போர்க்காலச் சூழலில் அந்த நாடுகளில் வேலைவாய்ப்புகள் குறையலாம் அல்லது அங்கிருந்து இலங்கையர்கள் வெளியேற வேண்டிய சூழல் உருவாகலாம்.
இது அந்நியச் செலாவணி வருகையைக் குறைப்பதுடன், நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தையும் அதிகரிக்கும். சுற்றுலா வருமானம் மற்றும் வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம் ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் பாதிக்கப்படுவது இலங்கைப் பொருளாதாரத்தைச் சங்கிலித் தொடர் நெருக்கடிக்குள் தள்ளிவிடும்.
ஏற்றுமதித் துறையில் ஏற்படும் சரிவு
மத்திய கிழக்கு நெருக்கடியால் எரிபொருள், எரிவாயு விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் வாழ்க்கைச் செலவு அதிகரிக்கும் போது, அங்கிருக்கும் மக்களின் கொள்வனவுத் திறன் குறையும்.
இது இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடை மற்றும் ஏனைய உற்பத்திப் பொருட்களுக்கான தேவையை வீழ்ச்சியடையச் செய்யும். குறிப்பாக, ஆடை ஏற்றுமதி மூலம் கிடைக்கும் பெரும் வருமானம் போர் காரணமாகக் குறைய வாய்ப்புள்ளது.
அதேபோன்று தேயிலை ஏற்றுமதியும் பாதிக்கப்படலாம். இலங்கைக்கு வருடம் ஒன்றுக்கு கிட்டத்தட்ட 2 பில்லியன் டொலர்கள் தேயிலை ஏற்றுமதியில் கிடைக்கிறது.
மத்திய கிழக்கு நாடுகளுக்கான தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்படும். சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலை உயர்வால் உற்பத்திச் செலவு அதிகரிப்பதும், அதேசமயம் விற்பனை குறைவதும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்குப் பெரும் நட்டத்தை ஏற்படுத்தும். இது நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறையை மேலும் விரிவடையச் செய்யும்.
ஏற்கனவே பாரிய பொருளாதார நெருக்கடியிலிருந்து சர்வதேச நிதி நிறுவனங்களின் உதவியுடன் மீண்டு வரும் இலங்கை, வரும் ஆண்டுகளில் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள பொருளாதார நிபுணர் தனனாத் பெர்னாண்டோ இந்நேரத்தில் டொலர் வருமானம் குறைந்தால், கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிக்கல்கள் எழும்.
இது டொலருக்கு நிகரான ரூபாவின் மதிப்பை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்யும். ரூபாவின் மதிப்பு குறையும் போது இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், மருந்து மற்றும் உணவுப் பொருட்களின் விலை மேலும் உயர்ந்து, வாழ்க்கைச் செலவு உயரும் இது தொடர்பில் அவதானம் அவசியமாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய இக்கட்டான சூழலைச் சமாளிக்க அரசாங்கம் மிகவும் விவேகமாகவும், விரைவாகவும் செயற்பட வேண்டும்.
பொருளாதார நிபுணர்களைக்கொண்ட உயர்மட்டக் குழுக்களை அமைத்து, வரவிருக்கும் சவால்களை முன்கூட்டியே கணிக்க வேண்டும்.
எரிபொருள் சிக்கனம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதுடன், கையிருப்பில் உள்ள டொலர்களைச் சரியான முன்னுரிமை அடிப்படையில் நிர்வகிப்பது முக்கியமாகும். அத்தியாவசியத் தேவைகளான உணவு மற்றும் மருந்து இறக்குமதிக்கு எவ்விதத் தடையும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் முதன்மைக் கடமையாகும்.
மத்திய கிழக்கு போர் என்பது சர்வதேசப் பிரச்சினை என்றாலும், அதன் பொருளாதாரத் தாக்கங்கள் உள்ளூர் மட்டத்தில் பெரும் மாற்றங்களை நிகழ்த்தக் கூடியவையாக உள்ளன.
2022 ஆம் ஆண்டு சந்தித்த கசப்பான அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களைக் கொண்டு, இலங்கை இந்த நெருக்கடியைத் திறம்படக் கையாள வேண்டும்.
முறையான திட்டமிடல், சிக்கனமான செலவீனம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய மேலாண்மை இருந்தால் மட்டுமே, மீண்டும் ஒரு பொருளாதாரப் படுகுழியில் விழுவதிலிருந்து நாட்டைப் பாதுகாக்க முடியும். இந்தப் போர்க் காலத்தில் அரசாங்கம் எவ்வளவு நுட்பமாக மூலோபாய ரீதியில் செயற்படுகிறது என்பதிலேயே இலங்கையின் எதிர்காலம் தங்கியுள்ளது.
ரொபட் அன்டனி

