பிப்ரவரி 28 முதல் மார்ச் 11 வரை அரேபிய வளைகுடா, ஹார்முஸ் ஜலசந்தி மற்றும் ஓமன் வளைகுடாவில் மொத்தம் 13 கப்பல்கள் தாக்கப்பட்டுள்ளதாக பிரிட்டனின் UK கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈராக் கடற்கரையில் இரவு நேரத்தில், பாஸ்ரா நகருக்கு அருகிலுள்ள உம் கஸ்ர் துறைமுகத்திற்கு அருகில் மேலும் இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டன.
இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் 38 பேர் காயமடைந்தனர் என்று ஈராக் துறைமுகங்களுக்கான பொது நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
சிறிது நேரத்திற்கு முன்பு, யுகேஎம்டிஓ, ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஜெபல் அலிக்கு வடக்கே மற்றொரு சம்பவத்தை குறிப்பிட்டது. ‘கன்டெய்னர் கப்பல் அடையாளம் தெரியாத பொருளால்(Projectile) தாக்கப்பட்டதாகவும், கப்பலில் ஒரு சிறிய தீ ஏற்பட்டது’ என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
18 ட்ரோன்களை இடைமறித்ததாக கூறும் சௌதி அரேபியா
வளைகுடா நாடுகள் மீது இரான் தாக்குதல் நடத்திவருகிறது. அபுதாபியில் நடத்தப்பட்ட தாக்குதலின் படம்
தங்கள் நாட்டின் கிழக்கு பிராந்தியத்தில் 18 ட்ரோன்களை இடைமறித்து, அழித்ததாக சௌதி அரேபியா பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சௌதி செய்தி நிறுவனத்தின்படி, கடந்த சில தினங்களாக பல ட்ரோன்கள் அழிக்கப்பட்டுள்ளன. அந்த ட்ரோன்கள் எங்கிருந்து வந்தன என்பது குறித்த தகவலை சௌதி அரேபியா வெளியிடவில்லை.
அதற்கு சிறிது நேரம் கழித்து, ஷாய்பா எண்ணெய் வயலை நோக்கி வந்த ட்ரோன் ஒன்று, எம்ப்ட்டி குவார்ட்டர் பகுதியின் வடக்கு விளிம்பில் இடைமறித்து அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சௌதி அரேபியா, குவைத், கத்தார், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் பிற இடங்களில் இரான் தாக்குதல் நடத்திவருகிறது.
இராக்கில் அமெரிக்க எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்- இந்தியர் ஒருவர் உயிரிழப்பு

இராக்கில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இராக்கின் பாஸ்ரா அருகே கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற அமெரிக்க டேங்கர் கப்பல் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
தூதரகத்தின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இருப்பினும், இந்தத் தாக்குதலை நடத்தியது யார் என்று தூதரகம் தெரிவிக்கவில்லை.
“2026 மார்ச் 11 அன்று, மார்ஷல் தீவுகளின் கொடியுடன் சென்ற அமெரிக்க கச்சா எண்ணெய் டேங்கர் கப்பலான ‘சேஃப்சீ விஷ்ணு’ (Safesea Vishnu), இராக்கின் பாஸ்ரா அருகே தாக்கப்பட்டது,” என்று சமூக ஊடகத் தளமான எக்ஸ்-இல் தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கப்பலில் இருந்த எஞ்சிய 15 இந்தியப் பணியாளர்கள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாத்தில் உள்ள இந்தியத் தூதரகம், இராக் அதிகாரிகளுடனும் மீட்கப்பட்ட இந்திய மாலுமிகளுடனும் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும், தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த பணியாளரின் குடும்பத்திற்கு தூதரகம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளது.
இராக்கில் உள்ள பிரிட்டன் படைகள் மீது டிரோன் தாக்குதல்
இதற்கிடையே இராக் அருகே இரு வணிக கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளானது.
இராக்கில் உள்ள ஒரு ராணுவத் தளத்தில் இருந்த பிரிட்டிஷ் படைகள் மீது இரானிய டிரோன்கள் தாக்குதல் நடத்தியதாக பிபிசி நியூஸ் அறிந்தது.
இந்த தாக்குதலில் பிரிட்டிஷ் படைகளுக்கு உயிரிழப்பு எதுவும் இல்லை, ஆனால் சில அமெரிக்க படையினர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு இராகில் உள்ள எர்பில் நகரத்தில் இருக்கும ராணுவத் தளம் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் அங்கு பிரிட்டிஷ் படைகள் உள்ளிட்ட அமெரிக்காவின் கூட்டணி நாடுகளின் படைகளும் அடிக்கடி தங்குவதுண்டு.
இதற்கிடையே இராக் அருகே இரு வணிக கப்பல்களும் தாக்குதலுக்கு உள்ளானது.

