பிபிசி நியூஸ் பெர்சியன் தகவலின்படி, இரானின் இஸ்பஹானைச் சேர்ந்த 21 வயதான சசன் ஆசாத்வர் ஜோங்கானி தூக்கிலிடப்பட்டார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட அவர், இஸ்பஹானின் தஸ்த்கார்ட் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.

அவரது குடும்பத்திற்கு நெருக்கமான ஒரு வட்டாரம், மனித உரிமைகள் இணையதளமான HRANA-விடம், அவரது இறுதிச் சடங்கு வியாழக்கிழமை மதியம் ஒரு ‘பாதுகாக்கப்பட்ட மண்டலத்தில்’ நடைபெற்றதாகவும், அதில் “அவரது 10 உறவினர்கள் மட்டுமே” கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டதாகவும் கூறியது.

இரானிய இஸ்லாமியக் குடியரசின் நீதித்துறை, அரசாங்கத்தை “கவிழ்க்கும்” நோக்கில் ஜனவரி மாதம் நடந்த ஆர்ப்பாட்டங்களின்போது, சசன் ஆசாத்வர் ஜோங்கானி “அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ஒரு மினிபஸ் மீது கற்கள் மற்றும் குச்சிகளால் தாக்குதல் நடத்தி, வாகனத்தின் ஜன்னல்களை உடைத்து, அதிகாரிகள் மீது கற்களையும் செங்கற்களையும் வீசினார்” என்று கூறுகிறது.

இரானிய நீதித்துறையின்படி, பேரணிகளில் கலந்துகொள்வதற்கு முன்பு, ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் வீதிகளில் இறங்கப்போவதாக தன்னைச் சுற்றியிருந்தவர்களிடம் கூறியதாகவும், மேலும் தனது நண்பர்களையும் ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு “அழைத்திருந்ததாகவும்” அவர் ஒப்புக்கொண்டார்.

ஆசாத்வார் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலைமைகள், அவருக்கு வழக்கறிஞரை அணுகுவதற்கான அனுமதி, மற்றும் அவரது வாக்குமூலம் பெறப்பட்ட சூழ்நிலைகள் ஆகியவை தங்களுக்குத் தெரியாது என்று மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Share.
Leave A Reply