கச்சா எண்ணெய் தடையில்லாமல் கிடைக்க வேண்டுமானால், ஹார்முஸ் ஜலசந்தி மூடியதால் பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களின் போர்க்கப்பல்களை அனுப்புமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
‘ஹார்முஸ் ஜலசந்திக்கு போர்க் கப்பல்களை அனுப்புங்கள்’… உலக நாடுகளைத் ஈரானுக்கு எதிராக போரில் இழுத்துவிட முனையும் டிரம்ப்
உலகம் முழுவதும் கச்சா எண்ணெய், எரிவாயு சப்ளை செய்யும் முக்கிய நீர் போக்குவரத்து வழியாக ஹார்முஸ் ஜலசந்தி விளங்குகிறது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இணைந்து கூட்டு தாக்குதல் நடத்தியதால், ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக அறிவித்துள்ளது.
இந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு கடலுக்குள் சமாதிதான் என எச்சரித்துள்ளது. இதனால் உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் இந்தச் சூழலில், உலக நாடுகளின் எரிசக்திப் பாதுகாப்பை உறுதி செய்யப் போர்க்கப்பல்கள் அனுப்பப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) பக்கத்தில் விடுத்துள்ள செய்தியில், ஈரானால் முடக்கப்படும் அபாயத்தில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தியைத் திறந்து வைக்கவும், பாதுகாக்கவும் அமெரிக்காவுடன் இணைந்து பல நாடுகள் தங்கள் போர்க்கப்பல்களை அனுப்பும்.
ஈரானின் ராணுவத் திறன் 100% அழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஈரான் எவ்வளவு மோசமாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், இந்த நீர்வழிப் பாதையின் ஏதேனும் ஒரு பகுதியில் ஒன்று அல்லது 2 ஆளில்லா விமானங்களை அனுப்புவதோ, ஒரு கண்ணிவெடியைப் பதிப்பதோ அல்லது ஒரு குறுகிய தூர ஏவுகணையை ஏவுவதோ ஈரானுக்கு மிகவும் எளிதானது.
சீனா, பிரான்ஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இதில் ஒத்துழைக்கும் என எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
மேலும், ஈரான் கடற்கரைப் பகுதிகளில் அமெரிக்கா கடுமையான குண்டுவீச்சை நடத்தும் என்றும், ஈரானியப் படகுகள் மற்றும் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மற்றொரு அதிரடி நடவடிக்கையாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள முக்கிய துறைமுகப் பகுதிகளிலிருந்து மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
துபாயின் ஜேபல் அலி (Jebel Ali), அபுதாபியின் கலீஃபா (Khalifa) மற்றும் ஃபுஜைரா (Fujairah) துறைமுகங்கள் சட்டபூர்வமான இலக்குகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் வசிப்பிடங்களுக்கு இடையே அமெரிக்க ராணுவப் படைகள் மறைந்திருப்பதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் அடுத்த சில மணிநேரங்களில் அங்குத் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என ஈரானின் டாஸ்னிம் (Tasnim) செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
போர் பதற்றம் காரணமாக, இந்தியாவின் முன்னனி விமான நிறுவனமான இந்திகோ (IndiGo), மத்திய கிழக்கின் 7 முக்கிய நகரங்களுக்கான விமானச் சேவைகளை மார்ச் 28 வரை ரத்து செய்துள்ளது. தோஹா, குவைத், ஷார்ஜா உள்ளிட்ட இடங்களுக்கான சேவைகள் இதில் அடங்கும்.
ஈரானின் எரிசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அந்தப் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கப் பங்குகள் உள்ள நிறுவனங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி எச்சரித்து உள்ளார்.
லெபனான் கடற்கரையோரம் செல்லும் சிவிலியன் லாரிகள் மீது ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கடத்துவதாகக் கூறி, இஸ்ரேல் ராணுவம் அங்குள்ள வாகனங்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈராக்கின் எர்பில் நகரில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்தைக் குறிவைத்து ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

