இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு, சில நாட்களே ஆன நிலையில், தெற்கு லெபனானில் நேற்று (ஏப்ரல் 27) இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட லெபனான் நாட்டினர் 14 பேர் கொல்லப்பட்டனர்,
37 பேர் காயமடைந்தனர். போர் நிறுத்தத்தை மீறியதாக இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்கிறார்கள்.
இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஏப்ரல் 16-ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. அந்த போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரக் காலம் நீடிக்கும் என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ ஆகியோரை இருபுறமும் வைத்துக்கொண்டு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏப்ரல் 23-ம் தேதி அறிவித்தார்.
இந்தப் போர் நிறுத்தத்தின் மூன்று வார நீட்டிப்பு ஒரு முக்கியமான, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணம் என்று துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குறிப்பிட்டார்.
ஹிஸ்புல்லா உருவான பின்னணி!
இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் ஏப்ரல் தொடக்கத்தில் வெள்ளை மாளிகையில் முதல் சுற்றுடன் தொடங்கியது. 1993-க்குப் பிறகு இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற முதல் பேச்சுவார்த்தை இது என்பது குறிப்பிடத்தக்கது.
‘லெபனான் – இஸ்ரேல் இடையே நீண்டகால அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி செய்வதால், வரும் வாரங்களில் லெபனான் அதிபர் ஜோசஃப் அவுனும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் வெள்ளை மாளிகைக்கு வருவார்கள்’ என்று அதிபர் ட்ரம்ப் கூறினார்.
ஆனால், போர் நிறுத்தம் முறிந்து இரு தரப்பும் தற்போது தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது.
ஈரானின் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு மிகவும் சக்திவாய்ந்த, ஆயுதம் தாங்கிய ஒரு குழுவாக நீண்ட காலமாக லெபனானில் செயல்பட்டுவருகிறது.
தற்போது அதன் வலிமையிழப்பு – கடந்த சில ஆண்டுகளாக ஈரான் பலவீனமடைவதுடன் சேர்ந்து – ஹிஸ்புல்லாவை நிராயுதபாணி நிலைக்குக் கொண்டுவருவதற்கான வாய்ப்பை உருவாக்கி இருப்பதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் நம்புகின்றன.
லெபனான் நாட்டை தளமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ஆயுதம் தாங்கிய ஹிஸ்புல்லா அமைப்பு, 1975-ம் ஆண்டு லெபனானில் உள்நாட்டுப் போர் வெடித்தபோது உருவானது.
1943-ம் ஆண்டின் அரசியல் ஒப்பந்தத்தின் கீழ், லெபனானின் முக்கிய மதக் குழுக்களிடையே அரசியல் அதிகாரம் – ஒரு சன்னி முஸ்லீம் பிரதமராகவும், ஒரு மரோனைட் கிறிஸ்தவர் அதிபராகவும், ஒரு ஷியா முஸ்லீம் நாடாளுமன்ற சபாநாயகராகவும் கொண்டதாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது.
அல்லாஹ்வின் கட்சி!
மென்மையான சமநிலையை பல்வேறு காரணிகள் சீர்குலைத்ததால், இந்தக் குழுக்களுக்கு இடையிலான பதற்றங்கள் உள்நாட்டுப் போராக உருவெடுத்தன.
பாலஸ்தீன அகதிகள் லெபனானுக்கு வந்ததால், சன்னி மக்கள்தொகை வளர்ந்தது. அதே நேரத்தில், ஆளும் கிறிஸ்தவ சிறுபான்மையினரால் தாங்கள் ஓரங்கட்டப்படுவதாக ஷியாக்கள் உணர்ந்தனர்.
இந்தச் சூழலில், தெற்கு லெபனானை இஸ்ரேலியப் படைகள் 1978-லும், 1982-லும் ஆக்கிரமித்தன.
அந்தப் பகுதியை இஸ்ரேலைத் தாக்குவதற்கான தளமாகப் பயன்படுத்திய பாலஸ்தீனிய கெரில்லா போராளிகளை, அங்கிலிருந்து இஸ்ரேலியப் படைகள் வெளியேற்றின.
1979-ல் அதிகாரத்திற்கு வந்த ஷியா, ஈரானின் மதவாத புரட்சியால் உந்தப்பட்ட லெபனானின் ஷியாக்களில் சிலர், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஆயுதம் ஏந்தினர்.
அதில், அரபு நாடுகளில் தனது செல்வாக்கை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்பைக் கண்ட ஈரானும், அதன் இஸ்லாமியப் புரட்சிகரக் காவலர் படையும் (IRGC) வளர்ந்துவரும் இந்த ஆயுதக் குழுவுக்கு நிதியும், பயிற்சியும் வழங்கின.
இந்தக் குழு `ஹிஸ்புல்லா’ அல்லது “அல்லாஹ்வின் கட்சி” என்ற பெயரை தனக்குச் சூட்டிக்கொண்டது.
அதை எதிர்த்த மற்றொரு ஷியா ஆயுதக் குழுவான அமல் இயக்கம் போன்றவற்றுடன் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
1983-ல் பெய்ரூட்டில் அமெரிக்க, பிரெஞ்சுப் படைகள் தங்கியிருந்த முகாம்கள் மீது ஹிஸ்புல்லா தற்கொலைப்படைத் தாக்குதலை நடத்தியது. அதில், 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
அதனால், தீவிரமான போராளித்துவத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் பெயர் பெற்ற அமைப்பாக ஹிஸ்புல்லா மாறியது.
ஹிஸ்புல்லாவின் கட்டமைப்பு!
1985-ம் ஆண்டு, ஹிஸ்புல்லா தனது கருத்தியலாக ஓர் அறிக்கையை வெளியிட்டது. அதில், மேற்கத்தியச் சக்திகளை லெபனானில் இருந்து வெளியேற்றுவதாகச் சத்தியம் செய்து, இஸ்ரேலிய அரசை அழிப்பதற்கு அழைப்பு விடுத்தது.
மேலும், ஈரானின் உச்சத் தலைவருக்குத் தனது விசுவாசத்தைத் தெரிவித்த ஹிஸ்புல்லா, ஈரானுக்கு ஒரு முக்கிய பதிலியாக (proxy) மாறியது.
2024-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி, இஸ்ரேலால் கொல்லப்படும்வரை ஹிஸ்புல்லாவின் பொதுச்செயலாளராக இருந்து அதை வழிநடத்தியவர், ஹசன் நஸ்ரல்லா.
அவரது மறைவுக்குப் பிறகு, 2024 அக்டோபர் 29-ம் தேதி அந்தப் பொறுப்புக்கு வந்தார் நைம் காசிம்.

நைம் காசிம்.
ஏழு உறுப்பினர்களைக் கொண்ட (ஷுரா) அவையையும், அதன் ஐந்து துணைக் குழுக்களையும் (அரசியல், ஜிகாத் (போர்), நாடாளுமன்றம், நிர்வாகம், நீதித்துறை) காசிம் மேற்பார்வையிடுகிறார்.
உலகளவில் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ஹிஸ்புல்லாவுக்கு இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை மதிப்பிடுகிறது.
லெபனானின் ஷியா பெரும்பான்மை பகுதிகளை ஹிஸ்புல்லா கட்டுப்படுத்துகிறது. இதில் பெய்ரூட்டின் பகுதிகள், தெற்கு லெபனான் மற்றும் கிழக்கு பெக்கா பள்ளத்தாக்கு ஆகியவை அடங்கும். ஹிஸ்புல்லாவின் நடவடிக்கைகள், குறிப்பாக அமெரிக்காவைக் குறிவைக்கும் செயல்பாடுகள் “சர்வதேச பயங்கரவாத அமைப்பு” என்று அமெரிக்கா முத்திரை குத்துவதற்கு (அக். 8, 1997) உதவின.
மேலும், நஸ்ரல்லா உட்படப் பல தனிப்பட்ட ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் சிறப்பாக வகைப்படுத்தப்பட்ட உலகளாவிய பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டு அமெரிக்கத் தடைகளுக்கு உட்பட்டனர்.
ராணுவ வலிமை!
ஹிஸ்புல்லாவின் ராணுவ வலிமையைக் குறைப்பதற்கு, லெபனானின் அரசுக்கும், ராணுவத்திற்கும் பராக் ஒபாமா நிர்வாகம் உதவி வழங்கியது.
இருப்பினும், இஸ்லாமிய அரசு (Islamic State) மற்றும் அல்-காயிதா (Al Qaeda) போராளிகளிடமிருந்து சிரிய எல்லையைப் பாதுகாப்பதற்கான ஹிஸ்புல்லா மற்றும் லெபனானின் இணைந்த ராணுவ முயற்சிகள், ஹிஸ்புல்லா கைக்கு அந்த ஆயுதங்கள் செல்லக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்த, லெபனானிய ராணுவத்திற்கு மேலும் உதவி அனுப்புவதற்கு அமெரிக்கக் காங்கிரஸை (அமெரிக்க நாடாளுமன்றம்) தயங்கச் செய்தது.
ஹிஸ்புல்லா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியச் சக்திகளுடனான வளைகுடா நாடுகளின் கூட்டணிகளைக் காரணம் காட்டி, பெரும்பாலும் சன்னி வளைகுடா அரபு நாடுகளை இகழ்ந்துள்ளது.
வளைகுடா ஒத்துழைப்பு மன்றம் (Gulf Cooperation Council) – ஈராக் தவிர்த்து பாரசீக வளைகுடாவின் ஏழு அரபு நாடுகளைக் கொண்டது – ஹிஸ்புல்லாவை ஒரு பயங்கரவாத அமைப்பாகக் கருதுகிறது.
2015-ல், அமெரிக்கக் காங்கிரஸ் ஹிஸ்புல்லா சர்வதேச நிதியுதவி தடுப்புச் சட்டத்தை நிறைவேற்றி ஹிஸ்புல்லாவுக்கு நிதியளிக்க அமெரிக்க வங்கிக் கணக்குகளைப் பயன்படுத்தும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தடை விதித்தது.
கூடுதலாக, சவூதி அரேபியாவும், அமெரிக்காவும் கூட்டாகப் பயங்கரவாத நிதியுதவி குறிவைப்பு மையத்தை வழிநடத்துகின்றன.
இது 2017-ல் ஹிஸ்புல்லா போன்ற ஈரான் ஆதரவு குழுக்களுக்கான நிதிவள ஓட்டங்களை (resource streams) சீர்குலைக்க உருவாக்கப்பட்டது.
கூடுதலாக, டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுக்கு எதிரான அதன் “அதிகபட்ச அழுத்த” வியூகத்தின் ஒரு பகுதியாக லெபனான் நாடாளுமன்றத்தில் உள்ள ஹிஸ்புல்லாவின் சில உறுப்பினர்களுக்குத் தடை விதித்தது.
வெளிநாடுகளில் இஸ்ரேலிய மற்றும் யூத இலக்குகளுக்கு எதிரான பயங்கரவாதச் செயல்களை ஹிஸ்புல்லா திட்டமிட்டு நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறையின் கூற்றுப்படி, ஹிஸ்புல்லாவின் பயிற்சி, ஆயுதங்கள் மற்றும் நிதிக்கான பெரும்பகுதியை ஈரான் வழங்குகிறது.
சட்டப்பூர்வ வணிகங்கள், சர்வதேச குற்ற நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர்ந்த லெபனானிய மக்களிடமிருந்து நிதியையும் ஹிஸ்புல்லா பெறுகிறது.
சமாளிக்க முடியாத இஸ்ரேல்!
சவூதி அரேபியா மற்றும் சிரியாவால் மத்தியஸ்தம் செய்யப்பட்டு லெபனானின் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்த 1989-ம் ஆண்டின் தாயீஃப் ஒப்பந்தத்தின் கீழ், தனது ஆயுதங்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட ஒரே ஆயுதக் குழு ஹிஸ்புல்லா மட்டுமே.
இந்த ஆயுதக் குழுவில் குறைந்தபட்சம் இருபதாயிரம் செயல்படும் போராளிகளும், ஏராளமான சிறு ஆயுதங்கள், டாங்கிகள், ட்ரோன்கள் மற்றும் பல்வேறு நீண்ட தூர ஏறிவிசை ஏவுகணைகள் மற்றும் ஏவுகலன்கள் (ராக்கெட்டுகள்) உள்ளதாகவும் சர்வதேச சிந்தனை அமைப்புகள் மதிப்பிடுகின்றன.
மேலும் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுக் கழகத்தின் (Centre for Strategic and International Affairs) 2018 அறிக்கை இதனை “உலகின் மிகக் கனரக ஆயுதங்களைக் கொண்ட அரசு சாரா சக்தி” என்று அழைத்துள்ளது.
ஹிஸ்புல்லா, இஸ்ரேலை அதிநவீன கப்பல் எதிர்ப்பு மற்றும் கவச எதிர்ப்பு ஆயுதங்களால் தாக்கியுள்ளது.
அவற்றை மேற்கத்திய அதிகாரிகள் ஈரான் வழங்குவதாகக் கூறுகிறார்கள். ஈரான் வழங்கும் மிகவும் துல்லியமான ஆயுதங்கள் ஹிஸ்புல்லா இஸ்ரேலுக்கு அதிகரித்து வரும் அபாயகரமான அச்சுறுத்தலாக மாறுவதை உறுதி செய்யக்கூடியது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
2000-ல் ஹிஸ்புல்லாவை சமாளிக்க முடியாமல் இஸ்ரேல் தனது 1982 தொடங்கிய லெபனான் ஆக்கிரமிப்பை முடித்துக்கொண்டது.
இந்த வெற்றியும், லெபனானில் கட்டமைப்பு, சுகாதாரம், பள்ளிகள் மற்றும் இளைஞர் திட்டங்கள் உள்ளிட்ட சமூக சேவைகளின் பரந்த வலையமைப்பை ஹிஸ்புல்லா உருவாக்கி நிர்வகிப்பதும் ஷியா மற்றும் ஷியா அல்லாத லெபனானியர்கள் இருவரிடமிருந்தும் ஹிஸ்புல்லாவிற்கு ஆதரவைத் திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன.
1992 முதல் ஹிஸ்புல்லா லெபனான் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கிறது. அவ்வாண்டு, அதன் எட்டு உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மேலும் 2005 முதல் அமைச்சரவைப் பதவிகளை வகித்து வந்தது. எனினும், அக்டோபர் 2019-ல், ஹிஸ்புல்லா வெகுஜன எதிர்ப்புகளின் இலக்காக மாறியது.
அரசாங்கத்தின் தவறான மேலாண்மை மற்றும் பல்லாண்டு தொய்வான வளர்ச்சி லெபனானை உலகின் மிக உயர்ந்த பொதுக் கடன் சுமைகளில் ஒன்றான அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 150 சதவீதமாகக் கொண்டு சுமத்தியிருந்தது.
பொருளாதார வீழ்ச்சியால் நம்பிக்கையிழந்த லட்சக்கணக்கான லெபனானியர்கள், அதிகாரத்தை, அரசாங்கம் ஒரு புதிய, தொழில்நுட்பவாத தலைமைக்கு விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
கார் குண்டுத் தாக்குதல்!
2005-ல் முன்னாள் லெபனானிய பிரதமர் ரஃபிக் ஹரிரி மற்றும் 21 பேர் படுகொலையில் ஹிஸ்புல்லா இணைப்பாளரான சலீம் ஜமீல் அய்யாஷையும், மேலும் இரண்டு பேரையும் (பின்னர்) குற்றவாளிகள் என்று ஐக்கிய நாடுகள் ஆதரவு தீர்ப்பாயம் 2020 டிசம்பரில் கண்டறிந்தது.
எனினும், அவர்களைத் தீர்ப்பாயத்திடம் ஒப்படைக்க ஹிஸ்புல்லா மறுத்துவிட்டது.
ஹிஸ்புல்லாவின் இயக்கம், 2004-ல் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் தீர்மானம் 1559-ஐ மீறுவதாக விமர்சகர்கள் கூறுகிறார்கள். இது அனைத்து லெபனானிய ஆயுதக் குழுக்களும் கலைக்கப்பட்டு ஆயுதம் களைவதற்கு அழைப்பு விடுத்த தீர்மானம்.
முதன்முதலில், 1978-ல் லெபனான் மத்திய அரசின் அதிகாரத்தை மீட்டெடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட லெபனானிலுள்ள ஐக்கிய நாடுகளின் படை (UNIFIL) இன்னும் நாட்டில் உள்ளது.
அதற்கு விதிக்கப்பட்ட கடமைகளில் ஒன்று ஹிஸ்புல்லாவை ஆயுதம் களைந்திட ஊக்குவிப்பதாகும்.
இஸ்ரேல்தான் ஹிஸ்புல்லாவின் முக்கிய எதிரி. 1978-ல் இஸ்ரேல் தெற்கு லெபனானை ஆக்கிரமித்தது முதல் இது தொடர்கிறது.
வெளிநாடுகளில் யூத மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீதான தாக்குதல்களுக்கு ஹிஸ்புல்லா குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவற்றில் 1994-ல் அர்ஜெண்டினாவில் 85 பேர் இறந்த ஒரு யூத சமூக மையத்தின் மீதான கார் குண்டுத் தாக்குதல் மற்றும் லண்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்தின் மீதான குண்டுத் தாக்குதல்கள் ஆகியவை அதில் அடங்கும்.
வலுவிழந்துவிட்டதா?
ஹிஸ்புல்லாவும், இஸ்ரேலும் அடிக்கடி சண்டையிட்டுக்கொண்டாலும் ஈரானின் மீது (பிப். 28, 2026) இஸ்ரேல் போர் தொடுத்தபோது, ஈரானுக்கு உதவ வந்த ஹிஸ்புல்லாவுடன் இஸ்ரேல் போரில் ஈடுபட்டது.
தற்போது லெபனான் அரசோடுதான் இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்திருக்கிறதே ஒழிய, ஹிஸ்புல்லாவுடன் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்படுத்தாமல், இந்தியாவும், இலங்கையும் 1987ல் ஒப்பந்தம் செய்துகொண்டன. அதுபோலத்தான் இதுவும்.
இலங்கையில் எப்படி முடிந்தது என்பது நமக்குத் தெரியும்.உறவற்ற இரு அரசுகள் முதன்முறை நுண்ணறிவுப் பரிமாற்றம், ஒத்துழைப்பு என்று ஹிஸ்புல்லாவை இறுக்கும். ஹிஸ்புல்லாவின் சர்வதேச வலையமைப்பு விரிவடைந்து வருவதாக நம்பப்பட்டாலும், அதன் காப்பாளரான ஈரான் வலுவிழந்த நிலையில், அந்த அமைப்பு முன்பு போல் வலுவாக இல்லை என்றே நாம் எண்ணுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் ஃபீனீக்ஸ் பறவை போல், ஹிஸ்புல்லா மீண்டும் மீண்டும் உயிர்ப்புடன் இயங்குவதை வரலாறு நமக்குக் காட்டுகிறது. ஹிஸ்புல்லாவுக்கான இருப்பை இல்லாமல் செய்யவும், மத்திய கிழக்கில் நிரந்தரத் தீர்வை எட்டவும், ஒரு சுதந்திர பாலஸ்தீனம் உருவாவதே நிரந்தர வழி!

