– இந்திராகாந்தி படுகொலை
1983, பிப்ரவரி 9-ம் தேதி, காலை 10 மணி. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு அரிசி அனுப்பாததைக் கண்டித்து, அண்ணா சமாதி முன்பு உண்ணாவிரதம் தொடங்கினார் முதல்வர் எம்.ஜி.ஆர். அந்தச் செய்தி தீயாகப் பரவி, அண்ணா சமாதியை நோக்கி அணி அணியாக மக்கள் திரண்டுவந்தனர்!
`எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம் இருக்கிறார்’ என்ற செய்தி டெல்லியை அதிரவைத்தது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வரின் அலுவலகத் தொலைபேசி மணி ஒலித்தது.
முதல்வரின் தனிச்செயலாளர் தொலைபேசியை எடுத்தபோது, எதிர்முனையில் மத்திய உணவுத்துறை அமைச்சர் ராவ் வீரேந்திர சிங் பேசினார்.
‘‘முதல்வர் உண்ணாவிரதம் இருப்பது வருத்தமாக இருக்கிறது. போராட்டத்தைக் கைவிடச் சொல்லுங்கள். அவரை டெல்லிக்கு வரச் சொல்லுங்கள். அரிசிப் பிரச்னையைப் பார்த்துக்கொள்ளலாம்” என்றார் மத்திய அமைச்சர்
. அந்தத் தகவல் அண்ணா சமாதியில் இருந்த எம்.ஜி.ஆரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, ‘தமிழகத்தின் உணவுப்பொருள் நெருக்கடியை மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லவும், வறட்சியால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு உதவிசெய்யத் தவறியதைச் சுட்டிக்காட்டவும்தான் இந்த உண்ணாவிரதப் போராட்டம். இதைப் பாதியிலேயே நிறுத்த முடியாது.
விரைவில் டெல்லிக்கு வருகிறேன்…’ என்ற செய்தி எம்.ஜி.ஆர் தரப்பிலிருந்து மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.

மாலை 5 மணியளவில் உண்ணாவிரதம் நிறைவுபெற்றது. பின்னர், டெல்லிக்குச் சென்று பிரதமர் இந்திரா காந்தியை எம்.ஜி.ஆர் சந்தித்தார். அரிசிப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
தாக்கப்பட்ட தமிழர்கள்!
1983, ஜூலையில் தமிழர்களுக்கு எதிரான தாக்குதல்கள் இலங்கையில் தீவிரமடைந்தன. ‘ஈழத்தந்தை செல்வா’ என்றழைக்கப்படும் செல்வநாயகம், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளுக்காக அறவழிப் போராட்டத்தை முன்னெடுத்துவந்தார்.
அந்தப் போராட்டத்தை இடது கையால் புறம்தள்ளியது இலங்கை அரசு. சாத்வீகப் போராட்டம் சரிப்பட்டு வராது என்ற முடிவுக்கு வந்தனர் தமிழ் இளைஞர்கள்.
ஆயுதப் போராட்டம் ஆரம்பமானது. தங்கதுரை, குட்டிமணி உள்ளிட்ட இளைஞர்களால் ‘தமிழீழ விடுதலை இயக்கம்’ உருவானது.
பிறகு, தமிழீழ விடுதலைப் புலிகள், ஈராஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ப்ளாட் என்று பல ஆயுதக்குழுக்கள் தோன்றின.
ஆயுதம் தாங்கிய அவர்களின் அதிரடித் தாக்குதல்களால் இலங்கை அரசு மிரண்டது. அந்தப் போராளிக் குழுக்களுக்கு தமிழகம் அடைக்கலம் கொடுத்தது. பிரபாகரன், உமாமகேஸ்வரன் உள்ளிட்ட இயக்கத் தலைவர்கள் தமிழ்நாட்டில் வந்து தங்கியிருந்தனர்.
1983, ஜூலை 23. சிங்கள ராணுவ வாகனம் ஒன்றின் மீது தமிழ்ப் போராளிகள் தாக்குதல் நடத்தினர். அதில் 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
இலங்கை ஆட்சியாளர்களுக்குக் கோபம் தலைக்கேறியது. கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் உடல்கள், பொதுமக்கள் பார்க்கும் வண்ணம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.
அதன் மூலம் தமிழர்களுக்கு எதிராக, சிங்கள மக்களிடம் வெறி ஊட்டப்பட்டது. மறுநாளே (ஜூலை 24), தமிழர்களை, சிங்களர்கள் தாக்கத் தொடங்கினர்.
வெலிக்கடைச் சிறையில்..!
கொழும்பு வெலிக்கடைச் சிறையில் தங்கதுரை, குட்டிமணி, ஜெகன் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட தமிழர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரையும் அங்கிருந்த சிங்களக் கைதிகள் பயங்கர ஆயுதங்களால் தாக்கிப் படுகொலை செய்தனர். குட்டிமணி என்ற செல்வராஜா யோகச்சந்திரன், மரணதண்டனைக் கைதியாகச் சிறையில் இருந்தார்.
‘என் மரண தண்டனையை நிறைவேற்றும் முன்பு, என் கண்களை எடுத்து, பார்வையற்ற ஒருவருக்குப் பொருத்துங்கள். நான் காண முடியாத தமிழீழத்தை என் கண்களாவது பார்க்கட்டும்’ – என்று தனது கடைசி ஆசையை வெளிப்படுத்தியிருந்தார் குட்டிமணி.
அதை அறிந்திருந்த சிங்களக் கைதிகள், குட்டிமணியைக் கொடூரமாகக் கொன்ற பிறகு, அவரது இரு கண்களையும் தோண்டியெடுத்து,
அவற்றைக் கால்களால் நசுக்கினர். தாக்குதல் தீவிரமடைந்த காரணத்தால், இலங்கைத் தமிழர்கள் அலை அலையாகத் தமிழகத்துக்கு வரத்தொடங்கினர்.
`ஈழத்தமிழர் விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தவில்லை’ என்று மத்திய, மாநில அரசுகள்மீது கருணாநிதி குற்றம்சாட்டினார்.
இன்னொரு புறம், இலங்கை அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்து முதல்வர் எம்.ஜி.ஆர் உண்ணாவிரதம் இருந்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்னைக்காக கருணாநிதியும் அன்பழகனும் சட்டமன்ற உறுப்பினர் பதவிகளையே ராஜினாமா செய்தனர்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் தனித்தனியாகக் குரல் கொடுத்தாலும், இரண்டு கட்சிகளும் இலங்கைத் தமிழர்களுக்கு உதவிகளும் செய்தன.
விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களும், போர்ப் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. அதற்குப் பிரதமர் இந்திரா காந்தி உதவினார்.
ஜெ-வுக்கு ஏராளமான எதிரிகள்!
இலங்கைத் தமிழர் பிரச்னை தீவிரமடைந்திருந்த அந்தக் காலகட்டத்தில் தமிழக அரசியலிலும், இந்திய அரசியலிலும் பல முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்தன. அ.தி.மு.க-வில் ஜெயலலிதாவின் செல்வாக்கு அதிகரித்தது.
அவர் தினமும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்துகொண்டிருந்தார். பொதுச்செயலாளர் ப.உ.சண்முகத்தின் அறைக்குப் பக்கத்து அறை ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
அமைச்சர்களுக்கும், தலைமைக் கழகப் பேச்சாளர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பும் ஜெயலலிதா, என்ன பேச வேண்டும்… எப்படிப் பேச வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு அறிவுரை வழங்குவார்.
அரசியலில் பழம் தின்று கொட்டைபோட்ட அந்த சீனியர்கள், ‘ஒரு நடிகை எங்களுக்குப் பாடம் எடுப்பதா?’ என்று கொந்தளித்தனர். இது பற்றித் தலைவரிடம் பேச அவர்களுக்குத் துணிவில்லை.
மனதுக்குள்ளேயே புழுங்கினர். கட்சிக்குள் ஏராளமான எதிரிகளை ஜெயலலிதா சம்பாதித்தார்.
தமிழ்நாட்டில் சட்ட மேலவை உறுப்பினர்கள் ஏழு பேரின் பதவிக்காலமும், ராஜ்ய சபா உறுப்பினர்கள் ஆறு பேரின் பதவிக்காலமும் முடிவுற்றன.
யார் யாருக்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கும் என்பது பற்றிய பேச்சுகள் எழுந்தன. சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்திருந்த கருணாநிதி, சட்ட மேலவை உறுப்பினராகப் பதவியேற்றார்.
நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு வை.கோபால்சாமியை அனுப்பினார் கருணாநிதி.
சீனியர்களின் கோபத்துக்கு ஆளாகியிருந்த ஜெயலலிதாவுக்கு, மாநிலங்களவை எம்.பி பதவியை எம்.ஜி.ஆர் பரிசளித்தார்.
மாநிலங்களவையில் அண்ணா அமர்ந்திருந்த அதே இருக்கை ஜெயலலிதாவுக்கு ஒதுக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் வளர்ச்சியைப் பல சீனியர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஜெயலலிதா விவகாரத்தில் கடும் அதிருப்திக்கு ஆளான எஸ்.டி.சோமசுந்தரம் கட்சியைவிட்டு வெளியேறி, ‘நமது கழகம்’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
`இறைவா உன் மாளிகையில்..!’
கட்சிக்குள் எழுந்திருந்த எதிர்ப்புகளையும் குழப்பங்களையும் சரிசெய்ய, எம்.ஜி.ஆர் மெனக்கெட வேண்டியிருந்தது.
அந்தச் சூழலில், 1984, அக்டோபர் 5-ம் தேதி எம்.ஜி.ஆருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ஏதோ சாதாரணப் பிரச்னை என்றுதான் முதலில் நினைத்தனர்.
ஆனால், அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டது… பக்கவாதத்தால் அவர் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின.
மொத்தத் தமிழகமும் சோகத்தில் மூழ்கியது.. எம்.ஜி.ஆர் நலம்பெற வேண்டுமென்று கோயில்களிலும், தேவாலயங்களிலும், மசூதிகளிலும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
ஊர்தோறும் மெழுகுவத்தி ஏந்தி ஊர்வலங்கள் சென்றார்கள் மக்கள். ‘இறைவா உன் மாளிகையில் எத்தனையோ மணி விளக்கு… ஆண்டவனே உன் பாதங்களை நான் கண்ணீரில் நீராட்டினேன்…’ என்ற ‘ஒளி விளக்கு’ படப் பாடல் ஒலிக்காத ஊர்களே இல்லை.
அந்த நேரத்தில், எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரியான கருணாநிதி, தொண்டர்களுக்கு உருக்கமான ஒரு கடிதத்தை எழுதினார்.
அதில், ‘கதிரொளி பட்ட பனிமூட்டமென உங்கள் நோய் மூட்டம் விலக வேண்டும்’ என்று எம்.ஜி.ஆர் விரைவில் நலம்பெற வேண்டி கருணாநிதி எழுதியிருந்தார்.
சென்னைக்கு வந்து எம்.ஜி.ஆரிடம் நலம் விசாரித்தார் பிரதமர் இந்திரா காந்தி. பிறகு, எம்.ஜி.ஆரை உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்ல முடிவானது.
எம்.ஜி.ஆரைக் காண அப்போலோ மருத்துவமனைக்கு ஓடோடிச் சென்றார் ஜெயலலிதா. வாசலிலேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். எவ்வளவோ கெஞ்சியும் அவர் அனுமதிக்கப்படவில்லை.
கண்ணீருடன் அவர் திரும்பிச் சென்றார். தன் உள்ளக்குமுறலை பிரதமர் இந்திரா காந்திக்குக் கடிதமாக எழுதினார் ஜெயலலிதா.
‘அம்மா… என் தலைவரை நான் பார்ப்பதற்கு நீங்கள்தான் ஒரு வழி செய்ய வேண்டும். சோதனை மிகுந்த இந்த நேரத்தில், உதவிசெய்ய உங்களை விட்டால் எனக்கு வேறு யாருமில்லை’ என்று கடிதத்தில் கண்ணீர் வடித்தார் ஜெயலலிதா.
ஆனால், அடுத்த சில நாள்களில் இந்திரா காந்தியே உயிரோடு இல்லை.
டெல்லி வன்முறை!
1984, அக்டோபர் 31-ம் தேதி, காலை நேரம். தன் வீட்டிலிருந்து பக்கத்திலிருக்கும் தனது அலுவலகத்துக்கு நடந்து சென்ற பிரதமர் இந்திரா காந்தியை, அவருடைய பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றனர்.
சத்வந்த் சிங், பியாந்த் சிங் என இருவர் பிரதமரின் பாதுகாவலர்கள். சீக்கியர்களான அவர்கள், பஞ்சாப் பொற்கோயிலில் இந்திரா காந்தி மேற்கொண்ட ‘ஆபரேஷன் புளூ ஸ்டார்’ நடவடிக்கைக்குப் பழிவாங்கவே அவரைச் சுட்டுக் கொன்றனர்.
அன்று இரவே சீக்கியர்களைக் குறிவைத்து டெல்லியில் வன்முறை வெறியாட்டம் தொடங்கியது. கண்ணில் படும் சீக்கியர்களை வன்முறையாளர்கள் படுகொலை செய்தனர். சீக்கியர்களின் வீடுகள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அவர்களின் கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
அத்தனை அராஜகங்களையும் போலீஸ் வேடிக்கை பார்த்தது. மாற்று ஏற்பாடாக, இந்திரா காந்தியின் மூத்த மகன் ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றிருந்தார்.
அடுத்த இரண்டு மாதங்களில் மக்களவைத் தேர்தலுக்குத் தயாரானது இந்தியா. கூடவே தமிழக சட்டமன்றத்துக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தபோது, தமிழ்நாட்டில் தேர்தலா?
(இன்னும் அறிவோம்)-

