கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாமனார், மருமகள் இடையே ஏற்பட்ட தவறான உறவு குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி அருகே 5 மாத குழந்தையைக் கொன்று, உடலை கிணற்றில் வீசிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.  மாமனார், மருமகள் இடையே ஏற்பட்ட தவறான உறவு குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு சென்றுள்ளது. நடந்தது என்ன?

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள ராமச்சந்திரத்தை சேர்ந்தவர் தமிழரசன். டிராக்டர் டிரைவரான இவருக்கும், மத்தூர் அருகே உள்ள கூச்சூரை சேர்ந்த சத்யவாணி என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுடன் தமிழரசனின் தந்தை ராஜனும், தாய் லட்சுமியும் ஒன்றாக வசித்து வந்தனர். வீட்டில் மருமகளுடன் பேசிவந்த ராஜனுக்கும், அவரது மருமகள் சத்யவாணிக்கும் இடையே தவறான தொடர்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கர்ப்பமான சத்யவாணிக்கு கடந்த 2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. அடுத்த 2 மாதத்தில் சத்யவாணி மீண்டும் கர்ப்பமாக தமிழரசனுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

தனது மனைவிக்கும், தந்தைக்கும் இடையே கள்ளத் தொடர்பு இருப்பதாக ஏற்கனவே பலரும் கூறி வந்த நிலையில், அவர்கள் தான் இல்லாத நேரத்தில் எல்லை மீறி போகிறார்களே என்ற சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் சத்யவாணிக்கு பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை தனக்கு பிறக்கவில்லை என்று தமிழரசன் மனைவியிடம் சண்டை போட்டதால், சத்யவாணி தனது 2 குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.

அங்கு ஒரு வாரம் இருந்துவிட்டு, 17ம் தேதி மாலை ராமச்சந்திரம் கிராமத்திற்கு திரும்பினார். அடுத்த நாள் 18ம் தேதி மதியம் வேலை முடிந்து வீட்டிற்கு வந்திருந்த மாமனார் ராஜன், சத்யவாணியை தனிமையில் இருக்க அழைத்து இருக்கிறார்.

அப்போது குழந்தை அழுததால் மூக்கு மற்றும் வாயை அடைத்து குழந்தையின் மூச்சை அடக்கி கொலை செய்துள்ளார் ராஜன். பின்னர், குழந்தையின் உடலை இருவரும் சேர்ந்து தூக்கிச் சென்று அருகில் உள்ள சேட்டு என்பவரின் கிணற்றில் போட்டு விட்டு வீட்டிற்கு வந்துவிட்டனர்.

இதனிடையே வீட்டிற்கு வந்த தமிழரசன் குழந்தை எங்கே? என கேட்க, எதுவும் நடக்காதது போல் சத்யவாணி தெரியவில்லை என கூறி இருக்கிறார்.

அதேபோல், தந்தை ராஜனையும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்க, அவரும் தனக்கு தெரியாது எனக்கூறி நாடகம் ஆடியுள்ளார். இதையடுத்து குழந்தையை தமிழரசன் உட்பட பலரும் அந்தப் பகுதியில் தேடியுள்ளனர்.

 

இந்நிலையில், கிணற்றிற்குள் குழந்தையின் உடல் கிடப்பதை சிலர் பார்த்து தெரிவிக்க, அப்பகுதியை சேர்ந்தவர்கள் கிணற்றிற்குள் இறங்கி குழந்தையின் உடலை மீட்டுள்ளனர்.

இந்த விவகாரத்தை போலீஸாருக்கு தெரிவிக்காமல் காலையில் குழந்தை உடலை அடக்கம் செய்த நிலையில், இந்த விவகாரம் குறித்து வேப்பனஹள்ளி போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குழந்தையின் தாயிடம் போலீசார் விசாரிக்க அவர் தனக்கு எதுவுமே தெரியாது என நாடகம் ஆடியிருக்கிறார்.

அதன் பின்னர், போலீசார் தங்கள் பாணியில் விசாரிக்க, அனைத்து உண்மைகளையும் அவர் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து சத்யவாணி மற்றும் மாமனார் ராஜன் இருவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Share.
Leave A Reply