ஈரான் மீதான போர் இஸ்ரேல்–அமெரிக்க கூட்டின் இருப்பில் பாரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின்அழிவும், ஈரான் இஸ்ரேல் மீது நடத்தும் தாக்குதலும் வரலாற்றில் எதிர்பார்க்க முடியாததொன்றாக மாறியுள்ளது.
மேற்காசியாவில் நிகழும் போர் தற்போது முக்கிய திருப்பங்களை எதிர்கொண்டுள்ளது. பரஸ்பரம் இருதரப்பிலும் பாரிய அழிவுகள் சாத்தியமானாலும், போர் முடிவுக்கு வராத ஒன்றாக உள்ளது. அமெரிக்கா இப்போரில் ஈடுபட்டதன் மூலம் உலக வல்லரசுக்கான தனித்துவத்தை இழக்க ஆரம்பித்துள்ளது.
அதனால் அமெரிக்கா போரில் தனிமைப்படுத்தப்படுவதை விட, உலக ஆதிக்கத்திலிருந்து விலகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீதான போரில் அமெரிக்கா பாரிய நெருக்கடியை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது.
இராணுவ ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் எதிர்கொண்ட நெருக்கடிகள் தற்போது அமெரிக்க ஜனாதிபதியின் அரசியல் இருப்பையும் அமெரிக்காவின் முதல்தர வல்லரசு நிலையையும் நெருக்கடிக்கு உள்ளாக்க ஆரம்பித்துள்ளன.
இப்போரை குறுகிய காலத்தில் முடிக்க அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவின் அனைத்து நடவடிக்கைகளையும் ஈரான் முறியடித்து விட்டதாகவே தெரிகிறது.
ஈரானின் வலிமையான தாக்குதல் அமெரிக்காவின் இலக்கை தோற்கடித்துள்ளது. அமெரிக்கா தனது போர் உத்திகளை சரியான முறையில் நகர்த்த முடியாத சூழலை ஈரான் உருவாக்கியுள்ளது.
ஈரானின் நவீன தொழில்நுட்ப வளர்ச்சி வளைகுடா நாடுகளின் அமெரிக்கத் தளங்களையும் இஸ்ரேலின் இருப்பையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
இதனால் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படுவதோடு போரின் வெற்றியை அடைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. வல்லரசொன்றின் இருப்பு அதன் போர் வெற்றியில்தான் தங்கியுள்ளது.
அடுத்ததாக அமெரிக்காவின் நெருக்கடிக்கு அதன் போர் உத்தியும் பிரதான காரணமாகத் தெரிகிறது. காரணம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் நிகழ்ந்த இத்தகைய போர்களில் அமெரிக்கா தனித்து போரிட்ட வரலாறு குறைவானது. வியட்நாம் போரின் தோல்விக்குப் பின்னாலும் அத்தகைய இயல்பு ஒன்றைக் கண்டுகொள்ள முடிந்தது.
ஈரான் மீதான போரில் அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்புகளையும் நேட்டோ அணியினரையும் கைவிட்டே ஈடுபட்டது. அந்த நாடுகளிடம் ஆலோசனை பெறாமலும் இராணுவ ஒத்துழைப்பை கோராமலும் போரில் ஈடுபட்டது.
போரின் தோல்வியை எதிர்கொள்ள முடியாத நிலையிலும், உலக பொருளாதார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கும் நோட்டோவினை அமெரிக்க நிர்வாகம் அணுக ஆரம்பித்து தோற்றுப் போயுள்ளது.
நேட்டோ நாடுகளின் வலுவான எதிர்ப்பு அமெரிக்காவுக்கு மேலும் இன்னொரு தோல்வியாக மாறியுள்ளது.
குறிப்பாக பிரித்தானியா, பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நேட்டோ நாடுகள் முழுமையாகவே போரில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டுவதுடன் முடிவுக்கு வராத போர் ஒன்றில் ஈடுபாடு காட்டுவது பலவீனமானது என பிரித்தானிய பிரதமர் கெயர் ஸ்டாமர் ஊடகங்களுக்கு முன்னே தெரிவித்துள்ளார்.
அதேபோன்றே பிரான்ஸ் ஜனாதிபதியும், ஜெர்மனியின் தலைவரும் இப்போரில் ஈடுபடுவதற்கு தயக்கம் காட்டியுள்ளனர்.
ஏறக்குறைய அமெரிக்கா தனித்துவிடப்பட்டதோர் நிலைக்கு ஆளாகி உள்ளது. இதன் மூலம் அமெரிக்கா உலக ஆதிக்க வல்லரசுக்கான தலைமை நாடு என்பதை இழப்பதற்கான அடிப்படை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஈரானின் பதில் தாக்குதலின் வீரியம் உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளாலும் அமெரிக்கா நிராகரிக்கப்படுகின்ற நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே அமெரிக்காவின் வரி விதிப்புகளால் அதிர்ந்து போன உலகம், போரில் அமெரிக்க தரப்புக்கு ஏற்பட்ட பலவீனத்தை அடுத்து அமெரிக்க மேலாதிக்கத்தை நிராகரிக்கத் தொடங்கியுள்ளது. இது முழுமையாகவே அமெரிக்காவின் தலைமைத்துவத்தை உலக நாடுகள் நிராகரிக்க வழிவகுத்துள்ளது.
குறிப்பாக பாகிஸ்தான், தென்ஆபிரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் அமெரிக்காவின் இராணுவரீதியான நடவடிக்கையை வெளிப்படையாக நிராகரிக்கின்றன.
அமெரிக்கா தனித்து விடப்படுதல் என்பது அமெரிக்காவின் வல்லரசு நிலையை இழப்பதற்கு ஒப்பானதாகவே தெரிகின்றது.
ஐரோப்பிய நாடுகளாலும் ஆசிய நாடுகளாலும் அமெரிக்கா கைவிடப்படுகின்ற அதேநேரம், இஸ்ரேலை பாதுகாக்க முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
யூதர்களாலும் அமெரிக்கா நிராகரிக்கப்படுகின்ற ஒரு தேசமாக மாறி வருகிறது. யூதர்கள் போருக்கு எதிரான போராட்டங்களை தொடங்கியுள்ளதோடு, போரை நிறுத்துமாறு அமெரிக்காவையும் இஸ்ரேலையும் வலியுறுத்துகின்றனர்.
இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு மீதான எதிர்ப்புணர்வை யூதர்கள் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதேநேரம் அமெரிக்காவுக்கு எதிராகவும் அவர்களது போராட்டம் மாறியுள்ளது. ஐரோப்பா எங்கும், ஆசிய நாடுகள் பலவற்றிலும் போருக்கு எதிரான போராட்டம் நிகழ்வது போல, இஸ்ரேலிலும் போருக்கு எதிரான போராட்டங்கள் முனைப்புப் பெற்றிருக்கின்றன.
இவை ஒட்டுமொத்தத்தில் அமெரிக்க வல்லரசு வலிமையை பலவீனப்படுத்துவதாக மாறியுள்ளது. அதிக உலக மக்களால் வெறுக்கப்படும் ஆட்சியாளராக டொனால்ட் ட்ரம்ப் மாறிவருகிறார்.
உலகளாவிய ரீதியில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்படுகின்ற அதேவேளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. அவரது ஆட்சியில் ஏற்பட்டுவரும் பொருளாதார நெருக்கடியை முதன்மைப்படுத்தி அமெரிக்க மக்கள் வீதியில் இறங்கியுள்ளனர்.
தொடர்ச்சியான போராட்டங்கள் அமெரிக்காவில் எழுச்சிபெறத் தொடங்கியுள்ளன. குறிப்பாக அமெரிக்க ஆட்சியாளர்கள் முரண்படுவதும் உயர் இராணுவ அதிகாரிகள் பதவி விலகுவதும்அமெரிக்க அரசியல் வரலாற்றில் மீண்டும் ஒரு நெருக்கடியான சூழலை தோற்றுவித்துள்ளது.
வியட்நாம் போரில் அமெரிக்கா இழந்ததை விட ஈரான் போரில் அதிகமானவற்றை இழந்துள்ளது.
அமெரிக்கா பொருளாதாரம், இராணுவம் மற்றும் அரசியல் பலத்தையும் இழந்து வருகிறது. அமெரிக்காவின் இழப்பென்பது உலகளாவிய நெருக்கடியாக மாறிவருகிறது. காரணம் அமெரிக்கா உலகளாவிய சக்தியாக விளங்கியதென்பதே அடிப்படையாகும்.
எனவே ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போர் அமெரிக்க வல்லரசு பலத்தையும் அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ட்ரம்ப் இருப்பையும் கேள்விக்கு உட்படுத்தி உள்ளது.
அரசியல் மற்றும் இராணுவ ரீதியான தோல்விகள் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் அமெரிக்காவின் வல்லரசு நிலையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
ரீ.கணேசலிலிங்கம்

