இலங்கையின் பல பகுதிகளில் சனிக்கிழமை (28) மனித உடலில் உணரப்படும் வெப்பநிலையானது ‘எச்சரிக்கை மட்டத்தில்’ (Caution Level) நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, தெற்கு, கிழக்கு, வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும், மொனராகலை மாவட்டத்திலும் வெப்பச் சுட்டெண் (Heat Index) 39 முதல் 45 பாகை செல்சியஸ் வரை காணப்படலாம் என திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.
வளிமண்டலவியல் திணைக்களம் வெப்பநிலையை 39 – 45°C ‘எச்சரிக்கை’ (Caution) நிலை , 46 – 52°C: ‘தீவிர எச்சரிக்கை’ (Extreme Caution) நிலை , 52°C க்கும் மேல் ‘அபாயம்’ (Danger) நிலை என வகைப்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை (27) பதிவான அதிகபட்ச வெப்பநிலை குருணாகல் மாவட்டத்தில் 37.8°C பதிவாகியுள்ளது.
தற்போதைய வெப்பமான காலநிலை சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க எச்சரித்துள்ளார்.
அதிக வெப்பத்தினால் உடல் நீர்ச்சத்து குறைதல், வெப்பத்தினால் ஏற்படும் தளர்ச்சி , வெப்பத்தாக்கம் அல்லது மாரடைப்பு போன்ற நிலை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்.
பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய ஆலோசனைகள்
காலை 10:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நேரடியாக வெயிலில் செல்வதைத் தவிர்க்கவும்.
வெளியில் செல்லும்போது தொப்பி, வெயில் கண்ணாடி அணிவதோடு, வெப்பத்தை உறிஞ்சாத வெளிர் நிறத்திலான தளர்வான ஆடைகளை அணியவும்.
தாகம் எடுக்காவிட்டாலும், சீரான இடைவெளியில் அதிகளவு தண்ணீர் அருந்தி உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும்.
மயக்கம், அதிகப்படியான வேர்வை அல்லது கடும் சோர்வு ஏற்பட்டால், உடனடியாக குளிர்ந்த இடத்திற்குச் செல்லவும். நிலைமை தொடர்ந்தால் மருத்துவ உதவியை நாடவும்.

