ஈரான்-, அமெரிக்கா, -இஸ்ரேல் யுத்தமானது முடிவுக்கு வரும் நிலையை அடைந்துள்ளதாகவே தெரிகின்றது. ஆனாலும் அமெரிக்காவின் சமாதான முயற்சிகளை ஈரானியர்கள் சந்தேகத்தோடு நோக்குகின்ற நிலைமையே காணப்படுகிறது.
அமெரிக்க தரப்பின் சமாதான முயற்சியானது ஈரான் மீதான அடுத்த கட்டப் போருக்கான தற்காலிகமான இடைவெளியாக அமையலாம் என்ற சந்தேகத்தையும் இது ஏற்படுத்துகின்றது.
இப்போரில் அமெரிக்காவின் இலக்கு அடையப்பட்டு விட்டது என்றும், அமெரிக்காவின் தாக்குதலை ஈரான் போராக மாற்றி இருக்கிறது என்றும், அதனால் இப்போருக்கு ஒரு தற்காலிக ஓய்வு தேவைப்படுகிறது என்றும் விவாதிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் முன்வைக்கப்படுகின்ற நிபந்தனைகள் மாறுபட்டதாக இருந்தாலும், அமெரிக்காவை விட ஈரான் இப்போர் தொடர்பாக முன்வைத்திருக்கும் நிபந்தனை அதீதமானதாகவே உள்ளது. அத்தகைய நிபந்தனைகள் சாத்தியமானவையா என்ற கேள்வியும் உண்டு.
மேற்காசியாவில் நிகழ்ந்து வரும் போர் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளனவா என்று இவ்விடத்தில் நாம் ஆராய வேண்டியுள்ளது.
முதலாவதாக, அமெரிக்காவின் இலக்கு என்னவென்பது ஈரான் மீதான தாக்குதலின் போது தெட்டத்தெளிவாகியுள்ளது. அதனை இஸ்ரேலும் விரும்பியது.
ஈரானின் உயர்மட்ட மதத் தலைவர் மட்டுமன்றி, இராணுவத் தளபதிகளும் போருக்குத் தலைமை தாங்குகின்ற முக்கிய தரப்பினரும் கொல்லப்பட்டதோடு, தாக்குதலின் இலக்கு நிறைவு பெற்றிருந்தது.
அத்தகைய தாக்குதலின் விளைவுகள் ஈரானுக்கு பின்னடைவாகவே உள்ளது. ஈரானின் பாதிப்புகள் அடுத்து வரும் ஒன்றுக்கு மேற்பட்ட தசாப்தங்களுக்கு ஈரானை பின்னடைவாக்குகின்றன.
அமெரிக்க – இஸ்ரேலிய கூட்டு வெற்றி கண்டு விட்டது. எனவே மேற்குலக நாடுகளின் பிரதான இலக்கு அடையப்பட்டதாகவே உணரப்படுகிறது.
இரண்டாவதாக, அமெரிக்க – இஸ்ரேலிய தாக்குதலானது ஈரானின் முக்கிய இராணுவ இலக்குகளை குறிவைத்து நிகழ்த்தப்பட்டது என்று மேற்குலகத் தரப்பு குறிப்பிடுகிறது. இது ஈரானின் இராணுவ ரீதியான இருப்பை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
ஈரானின் இராணுவத் தளங்கள், ஆயுத உற்பத்தி செய்யும் மையங்கள் போன்றவற்றை அழித்துள்ளதாக அமெரிக்க தரப்பு கூறுகின்றது.
ஆனால் ஈரானின் வாதம் வேறாகவே உள்ளது.அமெரிக்கா கூறுகின்ற இலக்குகள் எட்ட முடியாத நிலைக்குள் இருப்பதாகவும், போலியான தளங்களை இலக்கு வைத்து அமெரிக்க தரப்பு தாக்கியதாகவும் ஈரான் கூறுகின்றது.
ஆனாலும் ஈரான் மண்ணில் அமெரிக்கத் தரப்பின் தாக்குதல் பாரிய அளவில் நிகழ்த்தப்பட்டிருக்கின்றது.
அது பெரும் அளவுக்கு ஈரானின் இராணுவ ரீதியான பலத்தை நெருக்கடிக்குள் தள்ளியிருக்கின்றது என்று வெளிநாடுகளில் உள்ள இராணுவ ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மூன்றாவதாக, ஈரானின் இராணுவ ரீதியான இலக்குகளில் மிகப் பிரதானமானது அணுவாயுதத் தளங்கள் ஆகும். அவற்றை நோக்கி அமெரிக்க – இஸ்ரேலிய தரப்பு பாரிய தாக்குதலை நிகழ்த்தியதாக கூறுகின்றது.
மேற்காசியாவில் அணு ஆயுத உற்பத்தி நிகழ்ந்துவிடக் கூடாது என்பது மேற்குலகத்தின் நீண்டகால திட்டமிடல் ஆகும். எனவே தாக்குதல் மீண்டும் ஒரு தடவை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஈரானின் அணு ஆயுத நிலையங்கள் மீதான தாக்குதல் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு உள்ளது என அமெரிக்க தரப்பு கூறுகிறது. ஈரான் அதனை மறுத்தாலும், அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன என்று இராணுவ ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். ஆனால் இத்தகைய தாக்குதல் ஈரானின் நீண்ட கால அணு ஆயுத இலக்கை பலவீனப்படுத்தியது என்றே புரிந்து கொள்ளப்படுகிறது.

நான்காவதாக, அமெரிக்க இஸ்ரேலிய கூட்டின் தாக்குதல் மேற்கு ஆசிய நாடுகள் மீதான அல்லது இஸ்லாமிய நாகரிகத்தின் மீதான தாக்குதலாக அளவீடு செய்யப்படுகின்றது.
அதனால் மேற்காசியா பாரியளவில் சிதைந்துள்ளது. இஸ்ரேல் நாட்டினால் -ஈரான் தாக்கப்பட்டது போல, அமெரிக்க மண்ணில் எத்தகைய பாதிப்பும் ஏற்படவில்லை என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. மாறாக இஸ்ரேலும் -ஈரானும் பாரிய அளவில் அழிவுகளைச் சந்தித்திருக்கின்றன.
ஈரான் மீதான தாக்குதல் ஈரானிய பொருளாதாரத்தை பாரிய சிதைவுக்குள் உட்படுத்தியிருக்கின்றது.
இதனை ஈரான் வென்றெடுப்பதற்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் அமெரிக்காவோ, மேற்குலக நாடுகளோ அதிக பாதிப்பை எதிர்கொள்ளவில்லை.
ஐந்தாவதாக, இப்போரில் ஈரான் படைகள் அமெரிக்கத் தளங்கள் மீது நிகழ்த்திய தாக்குதல்களை அராபிய நாடுகள் மீதும் அவற்றின் சொத்துக்கள் மீதும் பொருளாதார இருப்புகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகவே காணப்படுகிறது.
ஒரு வகையில் கூறுவதானால் அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் நிகழ்த்த வேண்டிய தாக்குதல்களையும் அழிப்புகளையும் ஈரானே நிகழ்த்தி இருக்கின்றது.
அமெரிக்கத் தளங்கள் மீதான தாக்குதல் அராபிய நாடுகளின் இருப்பின் மீதான தாக்குதலாகவே விளங்கிக் கொள்ளப்பட வேண்டும்.
நேட்டோ இப்போரில் ஈடுபடாமல் இருந்ததும், அமெரிக்கா நெருக்கடிகளை எதிர் கொண்டிருந்ததும் ஒரு வகையில் போரின் நேரடி விளைவுகளை மேற்கு ஐரோப்பா எதிர்கொள்வதை தவிர்ப்பதற்கானதாகவே தெரிகிறது.
ஆறாவதாக, போரின் விளைவுகளை மதிப்பிடுகின்ற போது, அமெரிக்காவின் மண்ணில் நிகழாத போராக இந்த யுத்தம் விளங்குவதோடு, முழுமையான பாதிப்பை மேற்காசிய பிராந்தியம் அடைந்திருக்கின்றது.
ஆனால் ஈரான் தனது இராணுவத் திறனை மேற்காசியாவில் வெளிப்படுத்தியதோடு, பிராந்திய வல்லரசுக்கான சமநிலையை மேல்நிலைப்படுத்துவதில் ஈரான் வெற்றிகரமான பக்கத்தை காண்பித்திருக்கின்றது. அதற்காக இப்போரில் ஈரான் முழுமையான வெற்றி அடைந்திருக்கின்றதா என்பதற்கு பதில் கடினமானது.
மறுபுறத்தில் இஸ்ரேலின் இருப்பு கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. யூதர்கள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவுள்ள நெருக்கடி என்பது பொருளாதார ரீதியானது மட்டுமல்ல… இராணுவ, புலனாய்வு மற்றும் உளவியல் ரீதியானதாக பார்க்கப்பட வேண்டும்.
ஆனால் யூதர்கள் மிக வேகமாக மீண்டெழக் கூடியவர்கள். அதற்கான ஒத்துழைப்பை மேற்குலகம் யூதர்களுக்கு வழங்கத் தயாராக உள்ளது. ஆனால் ஈரானைப் பொறுத்தவரை மீண்டெழுவதற்கு பல தசாப்தங்கள் தேவைப்படுகின்றது.
ஏழாவதாக இப்போரின் பார்வையாளராக நேரடியான பங்கெடுப்பு நிகழ்த்தாத நாடுகளாக மேற்கு ஐரோப்பா, சீனா, இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
இந்நாடுகள் பெருமளவுக்கு போர்நிறுத்தத்தை முன்மொழிகின்றன. காரணம் இப்போரின் எல்லையை இருதரப்பும் அடைந்திருக்கின்றன.
ஹமோஸ் நீரிணை மீதான ஈரானின் நிபந்தனை மேற்கு ஐரோப்பிய நாடுகளை நெருக்கடிக்குள் தள்ளி இருக்கின்றது. பெற்றோலியம் மற்றும் எரிவாயு தொடர்பில் மேற்கு ஐரோப்பிய நாடுகள் அதிக பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளன.
இதிலிருந்து மீள்வதற்கு மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு சமாதானம் அவசியமானதாக இருக்கின்றது. எனவே ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேலிய போரானது- சமாதானத்தை நோக்கி நகர்கின்றது.
போரின் இலக்குகள் இரு தரப்பினாலும் அடையப்பட்டுள்ளமை தெரிகின்றது. போரில் ஏற்பட்ட இழப்புகள், உலகளாவிய அரசியல் மீதான நெருக்கடியின் தொடக்கநிலைகள் என்பன இப்போரை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்துள்ளன என்பதுதான் உண்மை.
-ரீகணேசலிங்கம்-

