திட்டமிட்ட குற்றச்செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றவாளியான கணேமுல்ல சஞ்சீவ என்ற நபர் கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி புதுக்கடை இலக்கம் 05 நீதவான் நீதிமன்றில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் இலங்கையின் நீதித்துறை கட்டமைப்பில் உள்ள பாதுகாப்பு பலகீனங்களை அம்பலப்படுத்தியது மாத்திரமின்றி நாட்டில் வேரூன்றி போயுள்ள பாதாள உலக கோஷ்டியினரின் ஆதிக்கத்தையும் வெளிப்படத்தியிருந்தது.
ஆனால் கனேமுல்ல சஞ்சீவ சுட்டு கொல்லப்பட்டமையை அடுத்து அதிரடியாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
அதில் கனேமுல்ல சஞ்சீவவைக் கொலை செய்வதற்கு துப்பாக்கியை கொண்டு வந்து கொடுத்த பெண், கொழும்பில் உள்ள ஒரு தங்குமிடத்தில் இருந்து வந்ததாக சஞ்சீவவைக் கொலை செய்த பிரதான சந்தேகநபர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
“தானும், குறித்த பெண்ணும் கொலையைச் செய்த பிறகு மருதானை பகுதிக்குச் சென்று முச்சக்கரவண்டியில் நீர்கொழும்பு பகுதிக்கு சென்றதாகவும், அதனையடுத்து தானும் அந்தப் பெண்ணும் தனித்தனியாக பயணம் செய்ததாகவும் குறித்த சந்தேகநபர் அப்போது தெரிவித்திருந்தார்.
அவ்வாறு தப்பிச் சென்ற பெண்ணே இஷாரா செவ்வந்தி. கொழும்பில் கணேமுல்ல சஞ்சீவ படுகொலை விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட அவர் பின்பு யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து படகு மூலமாக இந்தியா சென்று பின்பு நேபாளத்தில் தலைமறைவாக தங்கியிருந்தார்.
எனினும் இலங்கை பொலிஸாரின் நுட்பத்தால் அவர் உட்பட அவருடன் தங்கியிருந்த நான்கு சந்தேக நபர்களும் நேபாளத்தில் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் கைது செய்யப்பட்டனர்.
பின்பு இவர் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் தடுப்புக் காவல் கட்டளையின் கீழ் வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றார்.
கணேமுல்லே சஞ்சீவ கொலை வழக்கின் 15 ஆவது சந்தேகநபராக இஷாரா செவ்வந்தி பெயரிடப்பட்டுள்ளார் என்பது முக்கிய விடயம்.
இந்நிலையில் கடந்த மாதம் 29 ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் தடுப்புக்காவல் கட்டளையின் கீழ் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்ட சம்பவம் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
சிறையில் உள்ள சந்தேகநபருக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுவதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
குறித்த நாளன்று அவரின் பெயருக்கு கொண்டு வரப்பட்ட கேக் யாரால் அனுப்பப்பட்டது என்பது தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதி கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினுள் குறித்த சந்தேகநபரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்குத் தயார் நிலையில் இருப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து கொழும்பு வலயத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் உடனடியாக அவ்விடத்திற்குச் சென்று அந்தப் பிறந்தநாள் கொண்டாட்டத்தைத் தடுத்து நிறுத்தியதுடன், இது குறித்து காவல்துறை தலைமையகத்திற்கு அறிக்கையொன்றையும் சமர்ப்பித்துள்ளார்.
அந்த அறிக்கையின் அடிப்படையில், பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் காவல்துறை களப் படையணித் தலைமையகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் தடுப்புக்காவலில் உள்ள ஒருவருக்கு பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே இவ்வாறான விசேட சலுகைகள் வழங்கப்பட முயன்றமை பொலிஸ் திணைக்களத்திற்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதன் பின்னணியில் இஷாரா செவ்வந்தியின் பின்னணியில் செயற்படும் பாதாள உலகக் கோஷ்டியினர் சம்பந்தப்பட்டிருப்பார்களா என்ற சந்தேகம் எழும் அதே நேரம் பாதாள உலக சந்தேக நபர்களை வெளிநாடுகளுக்கும் சென்று கைது செய்து வரும் பொலிஸ் அதிகாரிகளுக்குள் கருப்பு ஆடுகளும் உள்ளனவா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
நீதிமன்றத்துக்குள் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புடைய ஒரு சந்தேக நபருக்கு இவ்வாறு பிறந்த நாள் கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்தவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் பண்டார விஜேதுங்க என்பவராவார்.
ஆனால் இங்கு எழும் சந்தேகங்கள் என்னவென்றால் மார்ச் 29 ஆம் திகதி இஷாரா செவ்வந்தியின் பிறந்த நாளன்று கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவுக்கு இஷாராவின் பெயரில் பிறந்த நாள் கேக்கை அனுப்பி வைத்தவர் யார் என்பதாகும்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை மற்றும் இதற்கு முன்னர் இடம்பெற்ற திட்டமிட்ட குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்கள் பற்றிய தகவல்கள், வெளிநாடுகளில் தங்கியுள்ள பாதாள உலக கோஷ்டியினர் பற்றிய விபரங்கள்
மற்றும் எதிர்காலத்தில் இலங்கையில் அவர்கள் திட்டமிட்டுள்ள தாக்குதல் அல்லது கொலைச்சம்பவங்கள் பற்றிய தகவல்களை தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாராவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் முயற்சியில் குற்றப்புலனாய்வினர் ஈடுபட்டு வரும் தருவாயில் அவரை கொலை செய்யும் முயற்சியில் இரசாயனங்கள் அல்லது ஏதாவது விஷம் கலக்கப்பட்ட கேக் அனுப்பப்பட்டுள்ளதாக என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
இது தொடர்பில் முழுமையான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்த பொலிஸார், குறித்த கேக்கை அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைத்து அறிக்கை பெறுவதற்கு நீதிமன்றத்திடம் அனுமதி கோரினர்.
சந்தேகத்துக்குரிய கேக்கை உடனடியாக அரச இரசாயன பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட மேலதிக நீதவான், இது தொடர்பான விசாரணை அறிக்கையை விரைவில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டுள்ளார்.
சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி முதலில் 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
தற்போது மேலும் 90 நாட்கள் அவரைத் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இவருடன் தொடர்புடைய விசாரணைகளை விரைவுபடுத்தி, இவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் கடந்த வாரம் பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி பிரதம இன்ஸ்பெக்டர் பண்டார விஜேதுங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டாலும் அவரின் அனுசரணையுடனேயே இந்த பிறந்த நாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுகின்றது.
இஷாராவிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொள்வதை தடுப்பதற்கு அவரை சுகவீனமுற்றவராக மாற்றுவதற்கோ அல்லது தடுப்புக் காவலில் அவர் இருக்கும் போதே அவரை கொலை செய்வதற்கோ அவருடன் தொடர்புடைய பாதாள உலக கோஷ்டியினர் முயற்சித்திருக்கலாம் என்ற ஊகம் நிலவுகின்றது.
இதற்கு குறித்த பொலிஸ் அதிகாரி உடந்தையாக செயற்பட்டாரா அல்லது அவருக்குத் தெரியாமலேயே இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாமா என்பது விசாரணை அறிக்கைககளின் பின்னரே வெளிவரும்.
எது எவ்வாறிருப்பினும் கடந்த காலங்களில் பாதாள உலகக் கோஷ்டியினர் நாட்டிலிருந்து தப்பிச்செல்வதற்கு பல பொலிஸ் அதிகாரிகள் துணை போயுள்ளனர் என்பதை முழு நாடுமே அறியும்.
அந்த வகையில் பாதாள உலக கோஷ்டியினரை கட்டுப்படுத்தும் நோக்கிலும் இலங்கைக்கு அபாயகரமான போதை பொருட்கள் பரவுவதை தடுக்கவும் செயற்பட்டு வரும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை தடுக்கும் வகையில் சில ஊழல் பொலிஸ் அதிகாரிகள் செயற்பட்டு வருவது நாட்டின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாகும்.
இது குறித்து உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்க வேண்டிய தேவை உள்ள அதே வேளை பாதாள உலக கோஷ்டியினருடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை இனங்கண்டு கொள்ள வேண்டியது பாதுகாப்பு தரப்பின் பிரதான பணியாகவுள்ளது.
சி.சி.என்

