எரிமலை போன்று கடந்த சில வாரங்களாக காட்சியளித்து வந்த மத்திய கிழக்கில் தற்காலிக அமைதி ஏற்பட்டுள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே உச்சக்கட்டத்தை எட்டியிருந்த போர் பதற்றம், தற்போது ஒரு தற்காலிக அமைதி நிலையை எட்டியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமரின் சமாதான முயற்சியினால் ஏற்பட்டுள்ள இந்த இரண்டு வார கால போர் நிறுத்தம், உலக நாடுகளுக்கு ஒரு நிம்மதிப் பெருமூச்சை அளித்துள்ளதுடன், சிதைந்து போயிருந்த உலகப் பொருளாதாரத்தை மீண்டும் சீரமைக்கும் நம்பிக்கையை விதைத்துள்ளது.
கடந்த ஏப்ரல் ஏழாம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு என்பது மனித வரலாற்றில் மறக்க முடியாத ஒரு திகிலூட்டும் இரவாக அமைந்தது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த எச்சரிக்கை உலகையே ஒரு கணம் உலுக்கியது.
ஈரானின் “முழு நாகரிகத்தையும்” அழிக்கப்போவதாக அவர் விடுத்த பகிரங்க மிரட்டல், மூன்றாவது உலகப் போர் மூண்டுவிடுமோ அல்லது அணு ஆயுதப் போர் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தை உலக மக்கள் மத்தியில் விதைத்தது.
அன்று இரவு எட்டு மணிக்குப் பிறகு என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய ஒட்டுமொத்த உலகமும் தொலைக்காட்சிகளுக்கும் இணையதளங்களுக்கும் முன்னால் தவம் கிடந்தன. ஒரு தேசத்தின் கலாசாரம் மற்றும் வரலாற்றுச் சின்னங்களை அழிப்போம் என்ற அறிவிப்பே இதற்கு காரணமாகும்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்ட பாகிஸ்தான், இரு நாடுகளையும் ஒரு இணக்கப்பாட்டுக்குக் கொண்டு வந்தது.
அமெரிக்கா முன்வைத்த 15 அம்ச முன்மொழிவுகள் மற்றும் ஈரானின் 10 அம்ச திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு, இரண்டு வார கால தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த உடன்படிக்கையின் மிக முக்கியமான அம்சம் ‘ஹோர்மூஸ் நீரிணை’ மீண்டும் திறக்கப்படுவதாகும். உலகப் பொருளாதாரத்தின் இதயம் என்று அழைக்கப்படும் இந்த நீரிணை வழியாகவே உலகின் 20 சதவீதமான கச்சா எண்ணெய் விநியோகம் இடம்பெறுகிறது.
ஈரான் மற்றும் ஓமானின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தப் பாதை மூடப்பட்டால், உலக நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பு பெரும் ஆபத்துக்குள்ளாகும்.
தற்போது நிபந்தனைகளுடன் இந்தப் பாதையைத் திறக்க ஈரான் ஒப்புக்கொண்டுள்ளமை, சர்வதேச வர்த்தகத்திற்குப் பெரும் பலமாகும். ஈரானிய இராணுவத்தின் ஒருங்கிணைப்புடன் தொழில்நுட்ப வரம்புகளுக்கு உட்பட்டு கப்பல் போக்குவரத்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, உலக நாடுகளின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.
உலகச் சந்தையில் ஏற்பட்ட மாற்றம்
போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே உலகச் சந்தையில் ஒரு ஆச்சரியமான மாற்றம் நிகழ்ந்தது.
கடந்த சில நாட்களாக 100 டொலர்களைத் தாண்டி விற்பனையான கச்சா எண்ணெய் விலை, ஒரே நாளில் 16 சதவீதம் வரை சரிந்தது. போர் மேகங்கள் விலகத் தொடங்கியவுடன் பங்குச் சந்தைகள் மீண்டும் எழுச்சி பெற்றன.
யுத்தம் நிறுத்தப்பட்டால் உலகின் பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளர்ச்சி அடையும் என்பதற்கு இது ஒரு கண்கூடான சான்றாகும். எண்ணெய் விலை வீழ்ச்சியானது போக்குவரத்துச் செலவு, உற்பத்திச் செலவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைக்க உதவும் என்பதால், இது உலகளாவிய பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு வாய்ப்பாக அமையும்.
இலங்கைப் பொருளாதாரத்தில் இதன் தாக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் அமைதி என்பது இலங்கையைப் போன்ற ஒரு நாட்டுக்கு மிக அத்தியாவசியமான ஒன்றாகும். ஏற்கனவே பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வரும் இலங்கையில், இந்த யுத்தம் காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் விண்ணைத் தொட்டன.
இதனால் மின்சாரக் கட்டணம் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்து, சாதாரண மக்கள் அன்றாட வாழ்க்கையைத் தள்ளாடிக் கொண்டு நடத்தும் சூழல் ஏற்பட்டது.
இப்போது உலகச் சந்தையில் எண்ணெய் விலை குறைந்துள்ளதால், மக்களுக்கும் அதன் பயன்கள் சென்றடைய வேண்டும். எரிபொருள் விலையைக் குறைப்பதன் மூலம் மட்டுமே நலிவடைந்து வரும் மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்க முடியும்.
ஜனாதிபதி ஏற்கனவே பாராளுமன்றத்தில் மீனவர்கள், விவசாயிகள் மற்றும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு நிவாரணங்களை அறிவித்துள்ளார். இந்த நிவாரணங்கள் உரிய முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்றால், எரிபொருள் விலைக் குறைப்பு என்பது கட்டாயமாகும்.
உலகச் சந்தையில் விலை ஏறும் போது உடனடியாக விலையை உயர்த்தும் நிறுவனங்கள், விலை குறையும் போது பல்வேறு காரணங்களைக் கூறி விலையைக் குறைக்கத் தயங்குவது ஏற்புடையதல்ல. மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள இந்தத் தற்காலிக அமைதி என்பது இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர ஒரு பொன்னான வாய்ப்பாகும்.
இந்த போர் நிறுத்த உடன்படிக்கை ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான மோதல்களைத் தற்காலிகமாக நிறுத்தினாலும், இது லெபனானுக்குப் பொருந்தாது என இஸ்ரேல் அறிவித்துள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.
மத்திய கிழக்கில் ஒரு பகுதியில் அமைதி நிலவும் போது, மற்றொரு பகுதியில் தாக்குதல்கள் தொடர்வது ஒட்டுமொத்த அமைதி முயற்சிக்கும் சவாலாக அமையும். ஒரு பிராந்தியத்தில் நிரந்தர அமைதி வேண்டும் என்றால், அது அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
அடுத்த கட்டமாக, ஏப்ரல் 10-ஆம் திகதி இஸ்லாமாபாத்தில் இரு நாடுகளின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இந்த இரண்டு வார கால அமைதியை ஒரு நிரந்தரமான போர் நிறுத்தமாக மாற்றுவதே இந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய நோக்கமாகும்.
அமெரிக்காவின் 15 அம்சத் திட்டம் மற்றும் ஈரானின் 10 அம்சத் திட்டம் ஆகியவற்றுக்கு இடையே ஒரு பொதுவான இணக்கப்பாட்டை எட்டுவது எளிதான விடயமல்ல. இருப்பினும், இரு நாடுகளும் தற்போது காட்டியுள்ள ஞானம் மற்றும் புரிதல், வரும் நாட்களில் ஒரு நல்ல செய்தியைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடந்த யுத்தங்களால் மத்திய கிழக்கின் பல நாடுகள் சின்னாபின்னமாகியுள்ளன. இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.
தற்போது ஏற்பட்டுள்ள அமைதிச் சூழலைப் பயன்படுத்தி, அந்த நாடுகளை மீண்டும் கட்டியெழுப்ப சர்வதேச சமூகம் முன்வர வேண்டும். யுத்தம் என்பது அழிவைத் தவிர வேறு எதையும் தருவதில்லை.
மனித உயிர்களின் மதிப்பை உணர்ந்து, ஆயுதங்களை மெளனிக்கச் செய்து, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவதே நாகரிகமான சமூகத்தின் அடையாளமாகும்.
சர்வதேச உறவுகளைப் பொறுத்தவரையில், நாடுகள், சர்வதேச நிறுவனங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள் என அனைத்துத் தரப்பினரும் போர் நகர்வுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
ஒரு நாட்டின் நாகரிகத்தை அழிப்பது என்பது போர் குற்றம் என்பதை அனைவரும் உரக்கச் சொன்னார்கள். இந்த அழுத்தம் தான் இறுதியில் ஒரு தற்காலிகப் போர் நிறுத்தத்திற்கு வழிவகுத்துள்ளது.
மத்திய கிழக்கில் மலர்ந்துள்ள இந்தத் தற்காலிக அமைதி என்பது ஒரு சிறிய ஒளிக்கீற்றாகும். இந்த ஒளிக்கீற்றை ஒரு பிரகாசமான சூரியனாக மாற்றுவது உலகத் தலைவர்களின் கைகளிலேயே உள்ளது.
வன்முறை மற்றும் ஆயுதங்களால் எத்தகைய மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது, மாறாகப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பரஸ்பர மரியாதையினாலேயே உலக அமைதியை நிலைநாட்ட முடியும்.
யுத்த வடுக்களைக் களைந்து, அமைதியான ஒரு உலகைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இந்த அமைதி நீடித்தால் மட்டுமே, உலகப் பொருளாதாரம் மீண்டும் செழித்து, ஏழை நாடுகளின் மக்கள் பசியின்றி வாழ முடியும்.
ரொபட் அன்டனி

