ஹோர்முஸ் நீரிணை பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்க கடற்படையால் தடை செய்யப்பட்ட ஒரு சீன எண்ணெய் கப்பல் திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
“ரிச் ஸ்டாரி” (Rich Starry) எனப்படும் அந்தக் கப்பல், சோஹர் (Sohar ) துறைமுகத்திற்கு 250,000 பீப்பாய் மெத்தனோலை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தது.
ஆனால், ஓமான் வளைகுடா பகுதியை அடைந்தபோது, அங்கு ரோந்து பணியில் இருந்த அமெரிக்கப் போர்க்கப்பல்களின் நடவடிக்கையைத் தொடர்ந்து, அது திடீரென தனது பாதையை மாற்றியது. பின்னர், அதன் பயண நிலையை “உத்தரவுகளுக்காகக் காத்திருக்கிறது” என மாற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம், டொனால்ட் டிரம்ப், “ஈரானியக் கப்பல்கள் முற்றுகையை மீற முயன்றால் அவை அழிக்கப்படும்” என்று எச்சரித்ததற்கு பின்னர் நடந்துள்ளது. இதனால், இந்த முக்கியமான எண்ணெய் கடல் பாதையை கடக்க முயன்ற முதல் கப்பலாக இது கருதப்படுகிறது.
இதற்கிடையில், ஸ்காட் பெசென்ட் (Scott Bessent ) வெளியிட்ட கருத்தில், “சீன டேங்கர் கப்பல்கள் நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படாது;
அதனால் அவர்கள் எண்ணெயைப் பெற முடியாது” எனத் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளித்த சீனா, இந்த நடவடிக்கையை “ஆபத்தானதும் பொறுப்பற்றதுமானது” என்று விமர்சித்துள்ளது.
“ரிச் ஸ்டாரி” கப்பலும், அதன் உரிமையாளரான ‘ஷாங்காய் சுவான்ருன் ஷிப்பிங்’ நிறுவனம், ஈரானுடன் வணிகம் செய்ததற்காக 2023ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவால் தடை செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கப்பல் ஐக்கிய இராச்சியம் பகுதியில் சரக்குகளை ஏற்றியிருந்ததால், ஈரானிய துறைமுகங்களைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு மட்டுமே பொருந்தும் முற்றுகையின் கீழ் இது உட்படாது என எதிர்பார்க்கப்பட்டது.
இருப்பினும், அமெரிக்கா இதையும் தடுத்துள்ளது, டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தின் கடுமையான நிலைப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது.
பென்டகனின் முன்னாள் அதிகாரி மைக்கேல் ரூபின் (Michael Rubin ) கூறுகையில், இந்த நடவடிக்கை, கியூப ஏவுகணை நெருக்கடி (Cuban Missile Crisis ) காலத்தில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதியான ஜோன் எப். கெனடி ( John F. Kennedy ) எடுத்த முற்றுகை நடவடிக்கைகளுக்குப் பிறகு மிக முக்கியமான ஒன்றாகும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “இந்த நடவடிக்கை அமெரிக்கா–ஈரான் இடையிலான ஏற்கனவே பலவீனமான போர்நிறுத்தத்தை மேலும் பாதிக்கக்கூடும்” என எச்சரித்துள்ளார்.
இந்தச் சம்பவம், அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவில் புதிய விரிசலை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, இன்னும் ஒரு மாதத்தில் பீஜிங் நகருக்கு டொனால்ட் டிரம்ப் விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

