ஹோர்மூஸ் நீரிணை “போர் நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு முற்றிலும் திறந்திருக்கும்” என இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “லெபனான் போர் நிறுத்தத்திற்கு இணங்க, இரான் இஸ்லாமியக் குடியரசின் துறைமுகங்கள் மற்றும் கடல்சார் அமைப்பால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த பாதையில், அனைத்து வணிகக் கப்பல்களும் ஹோர்மூஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு, போர் நிறுத்தத்தின் எஞ்சிய காலத்திற்கு முற்றிலும் திறந்திருக்கும் என அறிவிக்கப்படுகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிப்ரவரி மாதம் இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, உலகின் மிகவும் பரபரப்பான எண்ணெய் கப்பல் போக்குவரத்துப் பாதையை வாரக்கணக்கில் இரான் மூடி வைத்திருந்தது.

இதனைத் தொடர்ந்து, இந்த வார தொடக்கத்தில் ஹோர்மூஸ் நீரிணையில் கடற்படை முற்றுகையைத் தொடங்கப் போவதாக அமெரிக்கா அறிவித்தது.

இரானின் இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

ட்ரூத் சோஷியல் தளத்தில் அவர், “இரான் நீரிணை முழுமையாகத் திறக்கப்பட்டிருப்பதாகவும், முழுப் போக்குவரத்திற்குத் தயாராக இருப்பதாகவும் இரான் இப்போதுதான் அறிவித்துள்ளது. நன்றி.” என குறிப்பிட்டுள்ளார்.

டொனால்ட் டிரம்ப் மற்றொரு பதிவில், ”ஹோர்மூஸ் நீரிணை “வணிகத்திற்காக முற்றிலும் திறக்கப்பட்டுள்ளது மற்றும் தயாராக உள்ளது” என்று கூறியுள்ளார்.

“ஆனால், இரான் உடனான நமது கொடுக்கல் வாங்கல் 100% முடியும் வரை, இரான் தொடர்பான விஷயங்களில் மட்டும் கடற்படை முற்றுகை முழு பலத்துடனும் அமலிலும் இருக்கும். பெரும்பாலான அம்சங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டதால், இந்தச் செயல்முறை மிக விரைவாக நடக்கும்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply