ஈரானுக்கு எதிராக இஸ்ரேலுடன் சேர்ந்து தொடுத்த போரின் விளைவான சிக்கலான நிலைவரத்தில் இருந்து ‘கௌரவத்தைக்’ காப்பாற்றிக் கொண்டு எவ்வாறு வெளியேறுவது என்று தடுமாறிக் கொண்டிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் தவறுகளையே செய்து கொண்டிருக்கிறார்.
ட்ரம்பின் தற்போதைய இக்கட்டான நிலையைப் பற்றி எழுதும்போது சர்வதேச இராணுவ மற்றும் அரசியல் ஆய்வாளர்களும் அவதானிகளும் சில வரலாற்று நிகழ்வுகளைப் நினைவூட்டுகிறார்கள்.
வியட்நாம் போர், ஈராக் போர், ஆப்கானிஸ்தான் போர் என்று அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களின் தோல்விகளுக்கு நீண்டதொரு பட்டியல் இருக்கிறது.
ஆனால், முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சனுடன் ட்ரம்பை ஒப்பீடு செய்வதுடன் தற்போது ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்காவுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியின் சாத்தியமான விளைவுகளுக்கும், 1956 சுயெஸ் கால்வாய் நெருக்கடியில் பிரிட்டன் சந்தித்த தோல்விக்கும் இடையில் சமாந்தரம் வரைந்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பிரத்தியேகமான கவனத்துக்கு உரியவையாக இருக்கின்றன.
முன்னுக்குப் பின்முரணாக ட்ரம்ப் அடிக்கடி செய்யும் அறிவிப்புக்களையும் ஈரானின் நாகரிகத்தை மீட்டெடுக்க முடியாத வகையில் ஓர் இரவிலேயே அழித்து விடப்போவதாக அவர் விடுத்த அச்சுறுத்தலையும் விமர்சிக்கும் அவதானிகள், நிக்சன் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ‘ பைத்தியக்காரன் கோட்பாட்டை ‘ (Madman Theory) பற்றி நினைவுபடுத்துகிறார்கள்.

முன்னாள் ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்சன்
வியட்நாம் போரின் போது நிக்சன் கையாண்ட அதே தந்திரத்தை ஈரானுக்கு எதிரான ட்ரம்பின் மிரட்டல்களில் காணக்கூடியதாக இருப்பதாகவும் ஆனால், நிக்சன் சந்தித்த அதே கதியை ட்ரம்ப் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.
ஒரு தலைவர் தனது மனநிலை குறித்து எதிராளிகளுக்கு சந்தேகத்தை உண்டாக்குவதன் மூலம் அவர்களைப் பயமுறுத்தி சாதகமான இணக்கப்பாடுகளுக்கு பணியவைக்கும் இராஜதந்திர அணுகுமுறையே நிக்சனின் ‘பைத்தியக்காரன் கோட்பாடு’ஆகும்.
அந்த கோட்பாடு உருவான விதத்தை ஐரிஷ் புலனாய்வுப் பத்திரிகையாளரும் எழுத்தாளருமான அந்தோனி சம்மேர்ஸ், 2000 ஆம் ஆண்டில் வெளியிட்ட தனது ‘ அதிகாரத்தின் செருக்கு ‘ (The Arrogance of Power) என்று நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
ஈரான் போரில் ட்ரம்பின் அணுகுமுறைகள் பற்றி கடந்த வாரம் எழுதிய கட்டுரை ஒன்றில் ‘ த கார்டியன் ‘ பத்திரிகையின் வொஷிங்டன் செய்தியாளர் ரொபேர்ட் ரெய்ற், சம்மேர்ஸின் நூலலை மேற்கோள் காட்டியிருந்தார்.
ஜனாதிபதியாக வருவதற்கு முன்னரே 1968 ஆம் ஆண்டில் பசுபிக் கரையோரத்தில் நடைபயணத்தின்போது நிக்சன் தனது எதிர்கால வெள்ளைமாளிகை தலைமை அதிகாரி பொப் ஹால்ட்மேனிடம் ‘ தனது ‘பைத்தியக்காரன் யோசனையை’ விளக்கிக் கூறியதாக சம்மர்ஸ் நூலில் எழுதியிருக்கிறார்.
” பொப், இதை நான் பைத்தியக்காரன் கோட்பாடு என்று அழைக்கிறேன். போரை நிறுத்துவதற்கு நான் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விட்டேன் என்று வட வியட்நாமியர்கள் நம்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ‘
கடவுள் மீது ஆணையாக, நிக்சன் கம்யூனிஸ்டுகள் மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அவர் கோபப்பட்டால் எங்களால் கட்டுப்படுத்த முடியாது.
அணுவாயுதப் பொத்தான் மீது அவரது கை இருக்கிறது’ என்ற செய்தியை நாம் அவர்களிடம் கசியவிடவேண்டும். அப்போது ஹோ சி மின் தானாகவே இரண்டு வாரங்களில் பாரிஸுக்கு வந்து சமாதானத்துக்காக கெஞ்சுவார் என்று ஹால்ட்மேனிடம் நிக்சன் கூறினார்.”
அடுத்தடுத்த வருடங்களில் நிக்சன் இந்த தந்திரத்தை பல தடவைகள் கையாண்டார். சோவியத் அதிகாரிகளிடம் சென்று தங்கள் தலைவர் சற்று பைத்தியக்காரத்தனமானவர் என்றும் கொடூரமான செயல்களைச் செய்யக்கூடியவர் என்றும் கூறுமாறு தனது உதவியாளர்களை நிக்சன் பணித்தார். ஆனால், நிக்சனின் உதவியாளர்களில் சிலர்,புதிதாக எதையும் புனையத் தேவையில்லை, அவர் மெய்யாகவே அப்படித் தான் இருந்தார் என்று உணர்ந்தனர்.
நிக்சனின் ‘ ‘பைத்தியக்காரத்தனப்’ பாவனைகளுக்கு மத்தியிலும் 1972 ஆம் ஆண்டில் வியட்நாம் போர் இன்னும் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.
அப்போது கம்யூனிஸ்டுகளின் வசமிருந்த வட வியட்நாமுக்கு எதிராக அணுவாயுதங்களைப் பயன்படுத்த விரும்புவதாக நிக்சன் தனது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கி கீசிங்கரிடம் கூறினார்.
அவ்வாறு செய்வது ஆபத்தானது என்று கீசிங்கர் கூறியபோது, அவர் பொதுமக்களைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறார் என்று நிக்சன் கேலி செய்தார்.
“அமெரிக்காவின் அணுவாயுதங்களைத் தூண்டும் பொத்தானை இயக்குவதற்கு சரியான மனிதராக நிக்சன் இருக்கமாட்டாரோ” என்று அவருக்கு 40 வருடங்களுக்கு மேலாக மனநல மருத்துவராக இருந்தவர் கவலை தெரிவித்ததாக சம்மர்ஸின் நூல் பதிவு செய்திருக்கிறது.
உட்கட்டமைப்புக்களை அழித்து வட வியட்நாமியர்களை மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதற்காக நிக்சன் குண்டு வீச்சுக்களை நடத்தியதைப் போன்றே ஈரானியர்களையும் தனது நிபந்தனைகளுக்கு பணிய வைப்பதற்காக படுமோசமான குண்டு வீச்சுக்களை ட்ரம்ப் தற்போது நடத்துகிறார்.
வியட்நாமில் நிக்சன் அழிவுகளை ஏற்படுத்தியிருக்கலாம், ஆனால், கம்யூனிஸ்டுக்களை போரில் நோற்கடிக்க முடியவில்லை.
இறுதியாக கம்யூனிஸ்டுகள் அமெரிக்க ஆக்கிரமிப்பை முறியடித்து வியட்நாமை 1975 ஏப்ரலில் விடுதலை செய்தார்கள். கம்யூனிஸ்டுகள் முன்னேறிக் கொண்டிருந்தபோது ஹெலிகொப்டர்களில் தொங்கிக்கொண்டு அமெரிக்கர்கள் தப்பிச் சென்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காட்சியின் புகைப்படம் கண்முன் நிழலாடுகிறது.
நிக்சன் மீது மோகம் கொண்டவரான ட்ரம்ப், அவரின் தந்திரங்களுக்கு நேர்ந்த கதியைப் பற்றியும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஈரானின் நாகரிகத்தை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாகவும் அந்த நாட்டைக் கற்காலத்துக்கு தள்ளப்போவதாகவும் மிரட்டிய ட்ரம்ப், தான் விதித்த காலக்கெடு முடிவடைவதற்கு ஒன்றரை மணித்தியாலங்கள் முன்னதாக சமூக ஊடகப் பதிவொன்றின் மூலமாக தனது தீர்மானத்தில் இருந்து பின்வாங்கி போர்நிறுத்தத்துக்கு இணங்கினார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த ஞாயிறன்று அமெரிக்காவுக்கு ஈரானுக்கும் இடையிலான 21 மணிநேர நேரடிப் பேச்சுவார்த்தைகள் இணக்கபாடு எதுவுமின்றி தோல்வியில் முடிவடைந்தன. இரு தரப்புகளினதும் நிலைப்பாடுகளுக்கு இடையில் பாரிய இடைவெளி இருந்தது.
அணுவாயுதங்களை தயாரிக்கும் நோக்கத்தை கைவிடுவதற்கு ஈரான் தயாரில்லாமல் இருப்பதே பேச்சுவார்த்தைகளின் தோல்விக்கு காரணம் என்று அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்ற அதேவேளை, சமாதானத் தேவைகளுக்காக அணுத்திட்டங்களில் ஈடுபடுவதற்கான தனது உரிமையை தாங்கள் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை என்று ஈரானியர்கள் கூறுகிறார்கள்.
பாரிய உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் மத்தியிலும் கடந்த நூற்றாண்டின் பிற்பகுதியில் ஈராக்குடன் பத்து வருடங்கள் போர் செய்த ஈரானுக்கு பின்னடைவுகளைத் தாங்கிக்கொள்வதில் உள்ள ஆற்றலை ட்ரம்ப் அலட்சியப்படுத்தியதே இன்று அவரைச் சிக்கலுக்குள் தள்ளியிருக்கிறது என்று அவதானிகள் கூறுகிறார்கள்.
போர் தொடங்குவதற்கு முன்னரான காலப் பகுதியில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளில் பெருமளவுக்கு பேரம் பேசமுடியாமல் இருந்த ஈரான், ஒன்றரை மாதப் போருக்குப் பிறகு போட்டியாக நிபந்தனைகளை முன்வைக்கக்கூடிய அளவுக்கு இராஜதந்திர ரீதியில் பலம் பெற்றிருக்கிறது.
போரை பிராந்திய மயப்படுத்தியதுடன் ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் மூலம் உலகப் பொருளாதாரத்தையும் போருக்குள் இழுத்து விட்டதன் மூலம் ஈரான் பெரிய தந்திரோபாய வெற்றியை பெற்றிருக்கிறது.
சுயெஸ் கால்வாய் நெருக்கடியுடன் ஒப்பீடு
இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததை தொடர்ந்து ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடும் நடவடிக்கைகளை தொடங்கியிருப்பதாக அமெரிக்கா ஞாயிறன்று அறிவித்தது.
இந்த குறுகிய நீரிணையின் ஊடாக ஈரான் எண்ணெய் ஏற்றுமதியைச் செய்வதையும் வெளிநாடுகளில் இருந்து எதையும் இறக்குமதி செய்வதையும் தடுப்பதே வொஷிங்டனின் நோக்கமாகும்.
உலகின் ஐந்து சதவீதமான எண்ணெய்த் தேவையை கொண்டுசெல்லும் இந்த நீரிணையின் ஊடான கப்பல் போக்குவரத்து, போர் தொடங்கிய பிறகு மிகவும் கடுமையாக குறைந்துவிட்டது.
ஒரு மாதத்துக்கும் அதிகமான காலமாக மூடப்பட்டிருக்கும் நீரிணையூடாக ஈரான் அதன் சொந்தக் கப்பல்களையும் வேறுசில கப்பல்களையும் அதனூடாக அனுமதித்தது. எண்ணெய் விலைகள் அதிகரித்ததன் விளைவாக உலக நாடுகளில் ட்ரம்புக்கு எதிராக அதிகரிக்கும் உணர்வுகளை புரிந்துகொண்ட வொஷிங்டன், அந்த கப்பல் போக்குவரத்துக்களை தடுக்கவில்லை.
தற்போது ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கரையோரங்களில் இருந்து கப்பல்கள் புறப்படுவதையும் அவற்றுக்குள் பிரவேசிப்பதையும் தடுப்பதற்கு அமெரிக்கா மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை வெற்றியளிக்கக்கூடிய சாத்தியம் குறித்து நிபுணர்கள் சந்தேகம் கிளப்புகிறார்கள்.
எது எவ்வாறிருந்தாலும், ட்ரம்பின் உத்தரவு போரில் புதிய ஒரு பரீட்சைக்கு களம் அமைத்திருக்கிறது. மேலும் கூடுதலான பொருளாதார வேதனையை எந்தத் தரப்பினால், எவ்வளவு காலத்துக்கு தாங்கிக் கொள்ள முடியும் என்பது முக்கியமான கேள்வி.
அமெரிக்காவின் இராணுவ வலிமையும் தொழில்நுட்ப வல்லமையும் ஈடிணையற்றவை என்பது உண்மையே. அமெரிக்காவின் பாதுகாப்புச் செலவினம் அதற்கு அடுத்தபடியாக இருக்கும் எட்டு பெரிய நேசநாடுகளின் பாதுகாப்பு பட்ஜெட்களுக்கு சமமானது என்று கூறப்படுகிறது.
ஆனால், இவ்வளவு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியதுடன் கோடிக்கணக்கான டொலர்கள் செலவழிக்கப்பட்ட பின்னரும் கூட ஈரானில் வெற்றிபெறுவதற்கு அமெரிக்காவின் வலிமையால் இதுவரையில் முடியவில்லை. ஈரானின் அரசியல் மற்றும் இராணுவத் தலைமைத்துவத்தின் பெரும்பகுதி அழிக்கப்பட்ட பின்னரும் கூட நாட்டுக்கு வழிகாட்டுவதற்கு ஒரு தலைமைத்துவக் கட்டமைப்பு தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறது.
ஹோர்முஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு அமெரிக்கா தற்போது மேற்கொண்டிருக்கும் முயற்சிகள் 1956 சுயெஸ் கால்வாய் நெருக்கடியில் எகிப்து மீது தாக்குதல் நடத்தியதற்கு பிறகு உலகில் பிரிட்டனின் அந்தஸ்து முன்னரைப் போன்று இல்லாமல் போனதை ஒத்த நிலைக்கு அமெரிக்காவைக் கொண்டுவந்து வரலாற்றை மீண்டும் நிகழ்த்துமோ என்ற கேள்வியை எழுப்புகின்றன.
1869 ஆம் ஆண்டில் சுயெஸ் கால்வாய் நிர்மாணிக்கப்பட்ட பிறகு அது பிரிட்டிஷ்-பிரெஞ்சு கூட்டு நிறுவனம் ஒன்றுக்கே (Suez Canal Company) சொந்தமானதாக இருந்துவந்தது. எகிப்திய ஜனாதிபதி அப்துல் கமால் நாசர், அந்த கம்பனியை தேசியமயமாக்குவதாக 1956 ஜூலை 26 ஆம் திகதி அறிவித்து அதை தனது நாட்டின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.
வணிக மற்றும் மூலோபாய ரீதியாக பிரிட்டனுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்கிய கால்வாயை நாசர் தேசியமயமாக்கியதால் ஆத்திரமடைந்த அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் அந்தோனி ஈடன், “எகிப்திய ஜனாதிபதி எங்களது மூச்சுக்குழாய் மீது தனது கட்டை விரலை வைப்பதை அனுமதிக்க முடியாது ” என்று கூறினார்.
அதற்கு ஆவேசமாகப் பதிலளித்த நாசர், தான் செய்த காரியம் பிரிட்டனுக்கும் பிரான்ஸுக்கும் பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தங்கள் கோபத்திலேயே மூச்சுத் திணறிச் சாகலாம் என்று கூறினாராம்.
கால்வாயை மீண்டும் கைப்பற்றவும் நாசரைப் பதவியில் இருந்து அகற்றவும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட படையெடுப்பு சுயெஸ் நெருக்கடிக்கு வழிவகுத்தது. அந்த நெருக்கடியின்போது 1956 ஒக்டோபர் தொடக்கம் 1957 மார்ச் வரை கால்வாய் மூடப்பட்டிருந்தது.
அமெரிக்க ஜனாதிபதி டுவைட் ஐசனோவரின் தலையீட்டின் விளைவாக கடுமையான நெருக்குதலின் கீழ் பிரிட்டிஷ், பிரெஞ்சு துருப்புக்கள் விரைவாகவே விலக்கிக் கொள்ளப்பட்டு கால்வாய் ஐக்கிய நாடுகளின் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அந்தோனி ஈடன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அந்த நெருக்கடியில் வெற்றியாளராக வெளிக்கிளம்பிய நாசர் அரபு மற்றும் எகிப்திய தேசியவாதத்தின் நாயகனாக போற்றப்பட்டார்.
அமெரிக்காவினதும் ஐக்கிய நாடுகளினதும் ஆதரவுடன் எகிப்து சுயெஸ் கால்வாய் மீதான தனது கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொண்டது. மத்திய கிழக்கில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் வீழ்ச்சி வெளிச்சத்துக்கு வந்தது.
சுயெஸ் நெருக்கடியில் பெரும் இராணுவ நடவடிக்கை மூலம் பிரிட்டன் மத்திய கிழக்கில் அதன் விருப்பத்தை நிலைநாட்ட முடியாமல் போனதைப் போன்ற கதி தற்போது ஹோர்முஸ் நெருக்கடியில் ட்ரம்பின் குளறுபடியான அணுகுமுறைகளின் விளைவாக அமெரிக்காவுக்கு நேருமா?
வீரகத்தி தனபாலசிங்கம்

