ஈரா­னுக்கு எதி­ராக இஸ்­ரே­லுடன் சேர்ந்து தொடுத்த போரின் விளை­வான சிக்­க­லான நிலை­வ­ரத்தில் இருந்து ‘கௌர­வத்தைக்’ காப்­பாற்றிக் கொண்டு எவ்­வாறு வெளி­யே­று­வது என்று தடு­மாறிக் கொண்­டி­ருக்கும் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப், மீண்டும் தவ­று­க­ளையே செய்து கொண்­டி­ருக்­கிறார்.

ட்ரம்பின் தற்­போ­தைய இக்­கட்­டான நிலையைப் பற்றி எழு­தும்­போது சர்­வ­தேச இரா­ணுவ மற்றும் அர­சியல் ஆய்­வா­ளர்­களும் அவ­தா­னி­களும் சில வர­லாற்று நிகழ்­வு­களைப் நினை­வூட்­டு­கி­றார்கள்.

வியட்நாம் போர், ஈராக் போர், ஆப்­கா­னிஸ்தான் போர் என்று அமெ­ரிக்­காவின் ஆக்­கி­ர­மிப்புப் போர்­களின் தோல்­வி­க­ளுக்கு நீண்­ட­தொரு பட்­டியல் இருக்­கி­றது.

ஆனால், முன்னாள் ஜனா­தி­பதி ரிச்சர்ட் நிக்­ச­னுடன் ட்ரம்பை ஒப்­பீடு செய்­வ­துடன் தற்­போது ஹோர்முஸ் நீரி­ணையில் அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­பட்­டி­ருக்கும் நெருக்­க­டியின் சாத்­தி­ய­மான விளை­வு­க­ளுக்கும், 1956 சுயெஸ் கால்வாய் நெருக்­க­டியில் பிரிட்டன் சந்­தித்த தோல்­விக்கும் இடையில் சமாந்­தரம் வரைந்து தெரி­விக்­கப்­படும் கருத்­துக்கள் பிரத்­தி­யே­க­மான கவ­னத்­துக்கு உரி­ய­வை­யாக இருக்­கின்­றன.

முன்­னுக்குப் பின்­மு­ர­ணாக ட்ரம்ப் அடிக்­கடி செய்யும் அறி­விப்­புக்­க­ளையும் ஈரானின் நாக­ரி­கத்தை மீட்­டெ­டுக்க முடி­யாத வகையில் ஓர் இர­வி­லேயே அழித்து விடப்­போ­வ­தாக அவர் விடுத்த அச்­சு­றுத்­த­லையும் விமர்­சிக்கும் அவ­தா­னிகள், நிக்சன் பயன்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் ‘ பைத்­தி­யக்­காரன் கோட்­பாட்டை ‘ (Madman Theory) பற்றி நினை­வு­ப­டுத்­து­கி­றார்கள்.

முன்னாள் ஜனா­தி­பதி ரிச்சர்ட் நிக்­ச­ன்

 

வியட்நாம் போரின் போது நிக்சன் கையாண்ட அதே தந்­தி­ரத்தை ஈரா­னுக்கு எதி­ரான ட்ரம்பின் மிரட்­டல்­களில் காணக்­கூடி­ய­தாக இருப்­ப­தா­கவும் ஆனால், நிக்சன் சந்­தித்த அதே கதியை ட்ரம்ப் சிந்­தித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர்கள் எச்­ச­ரிக்­கி­றார்கள்.

ஒரு தலைவர் தனது மன­நிலை குறித்து எதி­ரா­ளி­க­ளுக்கு சந்­தே­கத்தை உண்­டாக்­கு­வதன் மூலம் அவர்­களைப் பய­மு­றுத்தி சாத­க­மான இணக்­கப்­பா­டு­க­ளுக்கு பணி­ய­வைக்கும் இரா­ஜ­தந்­திர அணு­கு­மு­றையே நிக்­சனின் ‘பைத்­தி­யக்­காரன் கோட்­பா­டு’­ஆகும்.

அந்த கோட்­பாடு உரு­வான விதத்தை ஐரிஷ் புல­னாய்வுப் பத்­தி­ரி­கை­யா­ளரும் எழுத்­தா­ள­ரு­மான அந்­தோனி சம்மேர்ஸ், 2000 ஆம் ஆண்டில் வெளி­யிட்ட தனது ‘ அதி­கா­ரத்தின் செருக்கு ‘ (The Arrogance of Power) என்று நூலில் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

ஈரான் போரில் ட்ரம்பின் அணு­கு­மு­றைகள் பற்றி கடந்த வாரம் எழு­திய கட்­டுரை ஒன்றில் ‘ த கார்­டியன் ‘ பத்­தி­ரி­கையின் வொஷிங்டன் செய்­தி­யாளர் ரொபேர்ட் ரெய்ற், சம்­மேர்ஸின் நூலலை மேற்கோள் காட்­டி­யி­ருந்தார்.

ஜனா­தி­ப­தி­யாக வரு­வ­தற்கு முன்­னரே 1968 ஆம் ஆண்டில் பசுபிக் கரை­யோ­ரத்தில் நடை­ப­ய­ணத்­தின்­போது நிக்சன் தனது எதிர்­கால வெள்­ளை­மா­ளிகை தலைமை அதி­காரி பொப் ஹால்ட்­மே­னிடம் ‘ தனது ‘பைத்­தி­யக்­காரன் யோச­னையை’ விளக்கிக் கூறி­ய­தாக சம்மர்ஸ் நூலில் எழு­தி­யி­ருக்­கிறார்.

” பொப், இதை நான் பைத்­தி­யக்­காரன் கோட்­பாடு என்று அழைக்­கிறேன். போரை நிறுத்­து­வ­தற்கு நான் எதை வேண்­டு­மா­னாலும் செய்யத் துணிந்து விட்டேன் என்று வட வியட்­நா­மி­யர்கள் நம்ப வேண்டும் என்று நான் விரும்­பு­கிறேன். ‘

கடவுள் மீது ஆணை­யாக, நிக்சன் கம்­யூ­னிஸ்­டுகள் மீது கடும் கோபத்தில் இருக்­கிறார். அவர் கோபப்­பட்டால் எங்­களால் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.

அணு­வா­யுதப் பொத்தான் மீது அவ­ரது கை இருக்­கி­றது’ என்ற செய்­தியை நாம் அவர்­க­ளிடம் கசி­ய­வி­ட­வேண்டும். அப்­போது ஹோ சி மின் தானா­கவே இரண்டு வாரங்­களில் பாரி­ஸுக்கு வந்து சமா­தா­னத்­துக்­காக கெஞ்­சுவார் என்று ஹால்ட்­மே­னிடம் நிக்சன் கூறினார்.”

அடுத்­த­டுத்த வரு­டங்­களில் நிக்சன் இந்த தந்­தி­ரத்தை பல தட­வைகள் கையாண்டார். சோவியத் அதி­கா­ரி­க­ளிடம் சென்று தங்கள் தலைவர் சற்று பைத்­தி­யக்­கா­ரத்­த­ன­மா­னவர் என்றும் கொடூ­ர­மான செயல்­களைச் செய்­யக்­கூ­டி­யவர் என்றும் கூறு­மாறு தனது உத­வி­யா­ளர்­களை நிக்சன் பணித்தார். ஆனால், நிக்­சனின் உத­வி­யா­ளர்­களில் சிலர்,புதி­தாக எதையும் புனையத் தேவை­யில்லை, அவர் மெய்­யா­கவே அப்­படித் தான் இருந்தார் என்று உணர்ந்­தனர்.

நிக்­சனின் ‘ ‘பைத்­தி­யக்­கா­ரத்­தனப்’ பாவ­னை­க­ளுக்கு மத்­தி­யிலும் 1972 ஆம் ஆண்டில் வியட்நாம் போர் இன்னும் தீவி­ர­மாக நடந்து கொண்­டி­ருந்­தது.

அப்­போது கம்­யூ­னிஸ்­டு­களின் வச­மி­ருந்த வட வியட்­நா­முக்கு எதி­ராக அணு­வா­யு­தங்­களைப் பயன்­ப­டுத்த விரும்­பு­வ­தாக நிக்சன் தனது தேசிய பாது­காப்பு ஆலோ­சகர் ஹென்றி கி கீசிங்­க­ரிடம் கூறினார்.

அவ்­வாறு செய்­வது ஆபத்­தா­னது என்று கீசிங்கர் கூறி­ய­போது, அவர் பொது­மக்­களைப் பற்றி மிகவும் கவ­லைப்­ப­டு­கிறார் என்று நிக்சன் கேலி செய்தார்.

“அமெ­ரிக்­காவின் அணு­வா­யு­தங்­களைத் தூண்டும் பொத்­தானை இயக்­கு­வ­தற்கு சரி­யான மனி­த­ராக நிக்சன் இருக்­க­மாட்­டாரோ” என்று அவ­ருக்கு 40 வரு­டங்­க­ளுக்கு மேலாக மன­நல மருத்­து­வ­ராக இருந்­தவர் கவலை தெரி­வித்­த­தாக சம்­மர்ஸின் நூல் பதிவு செய்­தி­ருக்­கி­றது.

உட்­கட்­ட­மைப்­புக்­களை அழித்து வட வியட்­நா­மி­யர்­களை மீண்டும் பேச்­சு­வார்த்தை மேசைக்கு கொண்டு வரு­வ­தற்­காக நிக்சன் குண்டு வீச்­சுக்­களை நடத்­தி­யதைப் போன்றே ஈரா­னி­யர்­க­ளையும் தனது நிபந்­த­னை­க­ளுக்கு பணிய வைப்­ப­தற்­காக படு­மோ­ச­மான குண்டு வீச்­சுக்­களை ட்ரம்ப் தற்­போது நடத்­து­கிறார்.

வியட்­நாமில் நிக்சன் அழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கலாம், ஆனால், கம்­யூ­னிஸ்­டுக்­களை போரில் நோற்­க­டிக்க முடி­ய­வில்லை.

இறு­தி­யாக கம்­யூ­னிஸ்­டுகள் அமெ­ரிக்க ஆக்­கி­ர­மிப்பை முறி­ய­டித்து வியட்­நாமை 1975 ஏப்­ரலில் விடு­தலை செய்­தார்கள். கம்­யூ­னிஸ்­டுகள் முன்­னேறிக் கொண்­டி­ருந்­த­போது ஹெலி­கொப்­டர்­களில் தொங்­கிக்­கொண்டு அமெ­ரிக்­கர்கள் தப்பிச் சென்ற வர­லாற்று முக்­கி­யத்­துவம் வாய்ந்த காட்­சியின் புகைப்­படம் கண்முன் நிழ­லா­டு­கி­றது.

நிக்சன் மீது மோகம் கொண்­ட­வ­ரான ட்ரம்ப், அவரின் தந்­தி­ரங்­க­ளுக்கு நேர்ந்த கதியைப் பற்­றியும் சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

ஈரானின் நாக­ரி­கத்தை முடி­வுக்குக் கொண்டு வரப்­போ­வ­தா­கவும் அந்த நாட்டைக் கற்­கா­லத்­துக்கு தள்­ளப்­போ­வ­தா­கவும் மிரட்­டிய ட்ரம்ப், தான் விதித்த காலக்­கெடு முடி­வ­டை­வ­தற்கு ஒன்­றரை மணித்­தி­யா­லங்கள் முன்­ன­தாக சமூக ஊடகப் பதி­வொன்றின் மூல­மாக தனது தீர்­மா­னத்தில் இருந்து பின்­வாங்கி போர்­நி­றுத்­தத்­துக்கு இணங்­கினார்.

பாகிஸ்தான் தலை­நகர் இஸ்­லா­மா­பாத்தில் கடந்த ஞாயி­றன்று அமெ­ரிக்­கா­வுக்கு ஈரா­னுக்கும் இடை­யி­லான 21 மணி­நேர நேரடிப் பேச்­சு­வார்த்­தைகள் இணக்­க­பாடு எது­வு­மின்றி தோல்­வியில் முடி­வ­டைந்­தன. இரு தரப்­பு­க­ளி­னதும் நிலைப்­பா­டு­க­ளுக்கு இடையில் பாரிய இடை­வெளி இருந்­தது.

அணு­வா­யு­தங்­களை தயா­ரிக்கும் நோக்­கத்தை கைவி­டு­வ­தற்கு ஈரான் தயா­ரில்­லாமல் இருப்­பதே பேச்­சு­வார்த்­தை­களின் தோல்­விக்கு காரணம் என்று அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கூறு­கின்ற அதே­வேளை, சமா­தானத் தேவை­க­ளுக்­காக அணுத்­திட்­டங்­களில் ஈடு­ப­டு­வ­தற்­கான தனது உரி­மையை தாங்கள் விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ரில்லை என்று ஈரா­னி­யர்கள் கூறு­கி­றார்கள்.

பாரிய உயி­ரி­ழப்­பு­க­ளுக்கும் அழி­வு­க­ளுக்கும் மத்­தி­யிலும் கடந்த நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் ஈராக்­குடன் பத்து வரு­டங்கள் போர் செய்த ஈரா­னுக்கு பின்­ன­டை­வு­களைத் தாங்­கிக்­கொள்­வதில் உள்ள ஆற்­றலை ட்ரம்ப் அலட்­சி­யப்­ப­டுத்­தி­யதே இன்று அவரைச் சிக்­க­லுக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது என்று அவ­தா­னிகள் கூறு­கி­றார்கள்.

போர் தொடங்­கு­வ­தற்கு முன்­ன­ரான காலப் பகு­தியில் இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தை­களில் பெரு­ம­ள­வுக்கு பேரம் பேச­மு­டி­யாமல் இருந்த ஈரான், ஒன்­றரை மாதப் போருக்குப் பிறகு போட்­டி­யாக நிபந்­த­னை­களை முன்­வைக்­கக்­கூ­டிய அள­வுக்கு இரா­ஜ­தந்­திர ரீதியில் பலம் பெற்­றி­ருக்­கி­றது.

போரை பிராந்­திய மயப்­ப­டுத்­தி­ய­துடன் ஹோர்முஸ் நீரி­ணையை மூடி­யதன் மூலம் உலகப் பொரு­ளா­தா­ரத்­தையும் போருக்குள் இழுத்து விட்­டதன் மூலம் ஈரான் பெரிய தந்­தி­ரோ­பாய வெற்­றியை பெற்­றி­ருக்­கி­றது.

சுயெஸ் கால்வாய் நெருக்­க­டி­யுடன் ஒப்­பீடு

இஸ்­லா­மா­பாத்தில் பேச்­சு­வார்த்­தைகள் தோல்­வி­ய­டைந்­ததை தொடர்ந்து ஹோர்முஸ் நீரி­ணையை முற்­று­கை­யிடும் நட­வ­டிக்­கை­களை தொடங்­கி­யி­ருப்­ப­தாக அமெ­ரிக்கா ஞாயி­றன்று அறி­வித்­தது.

இந்த குறு­கிய நீரி­ணையின் ஊடாக ஈரான் எண்ணெய் ஏற்­று­ம­தியைச் செய்­வ­தையும் வெளி­நா­டு­களில் இருந்து எதையும் இறக்­கு­மதி செய்­வ­தையும் தடுப்­பதே வொஷிங்­டனின் நோக்­க­மாகும்.

உலகின் ஐந்து சத­வீ­த­மான எண்ணெய்த் தேவையை கொண்­டு­செல்லும் இந்த நீரி­ணையின் ஊடான கப்பல் போக்­கு­வ­ரத்து, போர் தொடங்­கிய பிறகு மிகவும் கடு­மை­யாக குறைந்­து­விட்­டது.

ஒரு மாதத்­துக்கும் அதி­க­மான கால­மாக மூடப்­பட்­டி­ருக்கும் நீரி­ணை­யூ­டாக ஈரான் அதன் சொந்தக் கப்­பல்­க­ளையும் வேறு­சில கப்­பல்­க­ளையும் அத­னூ­டாக அனு­ம­தித்­தது. எண்ணெய் விலைகள் அதி­க­ரித்­ததன் விளை­வாக உலக நாடு­களில் ட்ரம்­புக்கு எதி­ராக அதி­க­ரிக்கும் உணர்­வு­களை புரிந்­து­கொண்ட வொஷிங்டன், அந்த கப்பல் போக்­கு­வ­ரத்­துக்­களை தடுக்­க­வில்லை.

தற்­போது ஈரா­னிய துறை­மு­கங்கள் மற்றும் கரை­யோ­ரங்­களில் இருந்து கப்­பல்கள் புறப்­ப­டு­வ­தையும் அவற்­றுக்குள் பிர­வே­சிப்­ப­தையும் தடுப்­ப­தற்கு அமெ­ரிக்கா மேற்­கொண்­டி­ருக்கும் நட­வ­டிக்கை வெற்­றி­ய­ளிக்­கக்­கூ­டிய சாத்­தியம் குறித்து நிபு­ணர்கள் சந்­தேகம் கிளப்­பு­கி­றார்கள்.

எது எவ்­வா­றி­ருந்­தாலும், ட்ரம்பின் உத்­த­ரவு போரில் புதிய ஒரு பரீட்­சைக்கு களம் அமைத்­தி­ருக்­கி­றது. மேலும் கூடு­த­லான பொரு­ளா­தார வேத­னையை எந்தத் தரப்­பினால், எவ்­வ­ளவு காலத்­துக்கு தாங்கிக் கொள்ள முடியும் என்­பது முக்­கி­ய­மான கேள்வி.

அமெ­ரிக்­காவின் இரா­ணுவ வலி­மையும் தொழில்­நுட்ப வல்­ல­மையும் ஈடி­ணை­யற்­றவை என்­பது உண்­மையே. அமெ­ரிக்­காவின் பாது­காப்புச் செல­வினம் அதற்கு அடுத்­த­ப­டி­யாக இருக்கும் எட்டு பெரிய நேச­நா­டு­களின் பாது­காப்பு பட்­ஜெட்­க­ளுக்கு சம­மா­னது என்று கூறப்­ப­டு­கி­றது.

ஆனால், இவ்­வ­ளவு பாரிய அழி­வு­களை ஏற்­ப­டுத்­தி­ய­துடன் கோடிக்­க­ணக்­கான டொலர்கள் செல­வ­ழிக்­கப்­பட்ட பின்­னரும் கூட ஈரானில் வெற்­றி­பெ­று­வ­தற்கு அமெ­ரிக்­காவின் வலி­மையால் இது­வ­ரையில் முடி­ய­வில்லை. ஈரானின் அர­சியல் மற்றும் இரா­ணுவத் தலை­மைத்­து­வத்தின் பெரும்­ப­குதி அழிக்­கப்­பட்ட பின்­னரும் கூட நாட்­டுக்கு வழி­காட்­டு­வ­தற்கு ஒரு தலை­மைத்­துவக் கட்­ட­மைப்பு தொடர்ந்து இயங்கிக் கொண்­டி­ருக்­கி­றது.

ஹோர்முஸ் நீரி­ணையை தனது கட்­டுப்­பாட்டில் வைத்­தி­ருப்­ப­தற்கு அமெ­ரிக்கா தற்­போது மேற்­கொண்­டி­ருக்கும் முயற்­சிகள் 1956 சுயெஸ் கால்வாய் நெருக்­க­டியில் எகிப்து மீது தாக்­குதல் நடத்­தி­ய­தற்கு பிறகு உலகில் பிரிட்­டனின் அந்­தஸ்து முன்­னரைப் போன்று இல்­லாமல் போனதை ஒத்த நிலைக்கு அமெ­ரிக்­காவைக் கொண்­டு­வந்து வர­லாற்றை மீண்டும் நிகழ்த்­துமோ என்ற கேள்­வியை எழுப்­பு­கின்­றன.

1869 ஆம் ஆண்டில் சுயெஸ் கால்வாய் நிர்­மா­ணிக்­கப்­பட்ட பிறகு அது பிரிட்டிஷ்-பிரெஞ்சு கூட்டு நிறு­வனம் ஒன்­றுக்கே (Suez Canal Company) சொந்­த­மா­ன­தாக இருந்­து­வந்­தது. எகிப்­திய ஜனா­தி­பதி அப்துல் கமால் நாசர், அந்த கம்­ப­னியை தேசி­ய­ம­ய­மாக்­கு­வ­தாக 1956 ஜூலை 26 ஆம் திகதி அறி­வித்து அதை தனது நாட்டின் கட்­டுப்­பாட்டின் கீழ் கொண்­டு­வந்தார்.

வணிக மற்றும் மூலோ­பாய ரீதி­யாக பிரிட்­ட­னுக்கு முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக விளங்­கிய கால்­வாயை நாசர் தேசி­ய­ம­ய­மாக்­கி­யதால் ஆத்­தி­ர­ம­டைந்த அன்­றைய பிரிட்டிஷ் பிர­தமர் அந்­தோனி ஈடன், “எகிப்­திய ஜனா­தி­பதி எங்­க­ளது மூச்­சுக்­குழாய் மீது தனது கட்டை விரலை வைப்­பதை அனு­ம­திக்க முடி­யாது ” என்று கூறினார்.

அதற்கு ஆவே­ச­மாகப் பதி­ல­ளித்த நாசர், தான் செய்த காரியம் பிரிட்­ட­னுக்கும் பிரான்­ஸுக்கும் பிடிக்­க­வில்லை என்றால் அவர்கள் தங்கள் கோபத்­தி­லேயே மூச்சுத் திணறிச் சாகலாம் என்று கூறி­னாராம்.

கால்­வாயை மீண்டும் கைப்பற்றவும் நாசரைப் பதவியில் இருந்து அகற்றவும் பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் இணைந்து மேற்கொண்ட படையெடுப்பு சுயெஸ் நெருக்கடிக்கு வழிவகுத்தது. அந்த நெருக்கடியின்போது 1956 ஒக்டோபர் தொடக்கம் 1957 மார்ச் வரை கால்வாய் மூடப்பட்டிருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி டுவைட் ஐசனோவரின் தலையீட்டின் விளைவாக கடுமையான நெருக்குதலின் கீழ் பிரிட்டிஷ், பிரெஞ்சு துருப்புக்கள் விரைவாகவே விலக்கிக் கொள்ளப்பட்டு கால்வாய் ஐக்கிய நாடுகளின் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. அந்தோனி ஈடன் பிரதமர் பதவியில் இருந்து விலகினார். அந்த நெருக்கடியில் வெற்றியாளராக வெளிக்கிளம்பிய நாசர் அரபு மற்றும் எகிப்திய தேசியவாதத்தின் நாயகனாக போற்றப்பட்டார்.

அமெரிக்காவினதும் ஐக்கிய நாடுகளினதும் ஆதரவுடன் எகிப்து சுயெஸ் கால்வாய் மீதான தனது கட்டுப்பாட்டை தக்கவைத்துக் கொண்டது. மத்திய கிழக்கில் பிரிட்டிஷ் ஆதிக்கத்தின் வீழ்ச்சி வெளிச்சத்துக்கு வந்தது.

சுயெஸ் நெருக்கடியில் பெரும் இராணுவ நடவடிக்கை மூலம் பிரிட்டன் மத்திய கிழக்கில் அதன் விருப்பத்தை நிலைநாட்ட முடியாமல் போனதைப் போன்ற கதி தற்போது ஹோர்முஸ் நெருக்கடியில் ட்ரம்பின் குளறுபடியான அணுகுமுறைகளின் விளைவாக அமெரிக்காவுக்கு நேருமா?

 

வீரகத்தி தனபாலசிங்கம்

Share.
Leave A Reply