வெள்ளை மாளிகை நிருபர்களுடான விருந்தின்போது வெடிப்புச் சத்தம் கேட்டதால் அமெரிக்க அதிபர் டிரம்ப் ரகசிய சேவையால் உடனடியாக வெளியேற்றப்பட்டார். அந்தச் சத்தம் துப்பாக்கிச் சூடாக இருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

வாஷிங்டன் ஹில்டன் விடுதியில் நடைபெற்ற இந்த நிகழ்வின் வெடிப்புச் சத்தம் கேட்ட உடனேயே அமெரிக்க ரகசிய சேவை அதிகாரிகள் அந்த இடத்திலிருந்து டிரம்பை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர்.

டிரம்ப் உடன் அவரின் தலைமை ஆலோசகர் ஸ்டிபன் மில்லர் உட்பட பல மூத்த அதிகாரிகளும் அங்கிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர்.

டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவை ரகசிய சேவை அதிகாரிகள் மேடையிலிருந்து அழைத்துச் சென்றதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு ஊடக நிறுவனமான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

இந்தச் சம்பவத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கண்டித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவம் “சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.

அதோடு அதிபர் டிரம்ப். அவரது மனைவி மெலனியா மற்றும் துணை அதிபர் ஜேடி வான்ஸ் ஆகியோர் பாதுகாப்பாக நிம்மதியளிப்பதாகவும் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில் “அவர் (டிரம்ப்) தொடர்ந்து பாதுகாப்பாகவும் உடல்நலத்துடனும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் வன்முறைக்கு எந்த இடமும் இல்லை, இந்தச் சம்பவம் சந்தேகத்துக்கு இடமின்றி கண்டிக்கப்பட வேண்டும்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபர் யார்?

சந்தேக நபர் கலிஃபோர்னியாவின் டோரன்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் எனத் தெரிய வந்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் தென் மேற்கு நகர்ப்புற பகுதிகளில் வசித்து வருபவரான கோல் தாமஸ் ஆலன் புகழ்பெற்ற கலிஃபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பட்டம்பெற்று டோரன்ஸ் நகரில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது.

அந்த நிகழ்வு நடைபெற்ற விடுதியில் அவர் விருந்தினராக தங்கியிருந்தாகவும் அவர் தங்கியிருந்த அறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் வாஷிங்டன் காவல்துறை தலைவர் ஜெஃப்ரி வி கேரல் தெரிவித்துள்ளார். சந்தேக நபரின் நோக்கம் தற்போது வரை தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

அவரிடம், “ஒரு ஷாட்கன், ஒரு கைத்துப்பாக்கி, மற்றும் பல கத்திகள்” உட்பட பல்வேறு ஆயுதங்கள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ரகசிய சேவை வீரர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஜெஃப்ரி கூறினார்.

“அதிகாரிகளை இலக்கு வைத்தேன்” – சந்தேக நபர் கூறியது என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் தொடர்புடைய அதிகாரிகளை இலக்கு வைத்ததாக விசாரணை அதிகாரிகளிடம் சந்தேக நபர் தெரிவித்துள்ளார் என, பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு அதிகாரிளைக் குறிப்பிட்டு வெளியிடப்பட்ட அந்த செய்தியில், சம்பவ இடத்தில் 5 முதல் 8 துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சந்தேக நபருடன் தொடர்புடைய இடத்தில் காவல்துறை மற்றும் எஃப்.பி.ஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். கலிஃபோர்னியாவின் டோரன்ஸ் பகுதியில் உள்ள அந்த வீட்டில் காவல்துறையினர் அதிக அளவில் உள்ளனர்.

இந்த ஒட்டுமொத்த சம்பவத்துக்குப் பிறகு பேசிய அதிகாரி ஒருவர் புதிய அறிவிப்பு வரும் என்றும் அதன் பிறகு விருந்து தொடரும் என்றும் தெரிவித்திருந்தார். அதன் பிறகு இந்த நிகழ்வு முழுவதும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஒரு மாத காலத்திற்குள் மீண்டும் நிகழ்வு நடத்தப்படும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது செய்யப்பட்டிருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

“ரகசிய சேவை மற்றும் இதர அதிகாரிகள் சிறப்பான பணியைச் செய்தனர். அவர்கள் விரைவாகவும் தைரியத்துடனும் செயல்பட்டனர்,” என தனது ட்ரூத் சோசியல் பதிவில் குறிப்பிட்டார்.

அடுத்தடுத்து கேட்ட துப்பாக்கிச் சூடு சத்தம்

 

வெள்ளை மாளிகை செய்தியாளர் டேனியல் புஷ், சம்பவ இடத்தில் 7 முதல் 8 முறை துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதாக பாதுகாப்பு பணியிலிருந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி தெரிவிக்கிறார்.

டிரம்ப் தன் ட்ரூத் சோசியல் பதிவில், “தாக்குதல் நடத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிகழ்வு தொடர வேண்டும் என நான் கூறினேன். ஆனால் சட்ட அமலாக்க அமைப்புகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்ற முழுவதும் தயாராக இருக்கிறேன்.” என்றார். தனது மாலை இனி திட்டமிடப்பட்டதைப் போல இருக்காது என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டதை எஃப்.பி.ஐ உறுதிபடுத்தியுள்ளது.

அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ஸ், எஃப்.பி.ஐ இயக்குநர் கஷ் படேல் உட்பட இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த பல மூத்த அதிகாரிகளும் அங்கிருந்து மீட்கப்பட்டனர்.

“அதிபர் டிரம்ப், மெலனியா மற்றும் ரகசிய சேவையின் கீழ் வரும் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்,” என அமெரிக்க ரகசிய சேவையின் செய்தி தொடர்பாளர் அந்தோணி குக்ளிமெலி தெரிவித்தார். ஒருவர் தற்போது காவலில் இருப்பதாகவும் அவரின் நிலை பற்றி தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

சம்பவ இடத்தில் என்ன நடந்தது?

ஃபாக்ஸ் நியூஸ் செய்தியாளர் ஜாக்கி ஹெயின்ரிக், ஒரு தனிநபர் துப்பாக்கி உடன் பாதுகாப்பு சோதனையைக் கடந்து செல்ல முயன்றதாக தனது எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

டிரம்ப் கலந்து கொண்ட விருந்து நடைபெற்று வந்த அரங்கில் திடீரென துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதால் அங்கு கூடியிருந்த செய்தியாளர்கள் அனைவரும் மேசைகளுக்கு கீழே தஞ்சமடைந்தனர்.

உள்ளூர் நேரப்படி இரவு 08.35 மணிக்கு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக முதன்மை வட அமெரிக்க செய்தியாளர் கேரி ஓ டானகியூ தெரிவிக்கிறார்.

முதலில் டிரம்பும் அவரது மனைவி மெலனியாவும் அங்கிருந்து மீட்கப்பட்டு பக்கத்தில் இருந்த அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பிறகு அந்த விடுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். டிரம்பைத் தொடர்ந்து இதர அமெரிக்க அதிகாரிகளும் அங்கிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டனார்.

டிரம்பை வெளியேற்றியதைத் தொடர்ந்து நிகழ்விடம் மற்றும் விடுதி முழுவதும் பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஹில்டன் விடுதிக்கு வெளியே காவல் துறையினர் பெரும் எண்ணிக்கையில் நிறுத்தப்பட்டனர்.

ரகசிய சேவை அதிகாரி சுடப்பட்டார்” – டிரம்ப்

இதனைத் தொடர்ந்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் டிரம்ப்.

ஒரு தனி நபர் பல ஆயுதங்களுடன் பாதுகாப்பு சோதனையைக் கடக்க முயன்றதாகக் கூறும் டிரம்ப், ரகசிய சேவையில் சில மிகவும் தைரியமான அதிகாரிகளால் அவர் பிடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

தற்போது காவலில் இருக்கும் அந்த சந்தேகந நபர் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் காணொளியை வெளிப்படைத்தன்மை கருதி சமூக ஊடகத்தில் பகிர்ந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார்.

ரகசிய சேவை பிரிவு ஒரு அதிகாரி மிக நெருக்கத்தில் சுடப்பட்டதாகக் கூறும் டிரம்ப், குண்டு துளைக்காத கவசத்தால் அவர் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார்.
காணொளிக் குறிப்பு, “உங்களுக்கு தொடர்ந்து இப்படி நடக்கிறதா?” – துப்பாக்கிச்சூடு பற்றி டிரம்ப் பதில்

“நான் அந்த அதிகாரியிடம் பேசினேன். அவர் மிகவும் உற்சாகத்துடன் இருக்கிறார். நாங்கள் அவரை நேசிப்பதாகவும் மதிப்பதாகவும் தெரிவித்தேன். அவர் மிகவும் பெருமை மிக்க நபர்,” எனத் தெரிவித்தார் டிரம்ப்.

இதற்கு முன்னதாக தன்னைக் கொல்ல இரண்டு முயற்சிகள் நடந்ததாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். “தற்போது காவலில் இருக்கும் நபர் மிகவும் மோசமானவர். இது போன்ற விஷயங்கள் நடப்பதை நாங்கள் விரும்பவில்லை.” என்றும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய டிரம்ப், “இந்தச் சம்பவம் மெலனியாவுக்கு மிகவும் அதிர்ச்சியளிக்கும் அனுபவமாக இருந்தது. நான் அங்கு இருப்பதில் பிடிவாதமாக இருந்தேன். ஆனால் விதிமுறைப்படி நான் அங்கிருந்து விலக வேண்டும். மேலும் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது ஒரு தனிநபர் மட்டும் தானா என்பது அப்போது உறுதியாக தெரியவில்லை.” என்றார்.

பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லையென்றும் இந்த தாக்குதலின் நோக்கம் பற்றி தெரியவில்லை என்றும் எனக் குறிப்பிடும் டிரம்ப், சந்தேக நபர் மிகவும் தீங்கானவர் போல தெரிந்தார் என்கிறார்.

“சந்தேக நபர் சுமார் 45 மீட்டர் (50 யார்டுகள்) தொலைவிலிருந்து தாக்க தொடங்கினார். ஆனால் அதற்குள் ரகசிய சேவை அதிகாரிகள் தங்களின் துப்பாக்கிகளை எடுத்தனர். கலிஃபோர்னியாவில் உள்ள சந்தேக நபரில் இல்லத்திற்கு அதிகாரிகள் சென்றுள்ளனர்,” என்றும் அவர் தெரிவித்தார்.

 

Share.
Leave A Reply