ஈரான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமாபாத்துக்கு வருகை தரும் என்ற பரந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ஷி பாகிஸ்தான், ஒமான், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளுக்கான இராஜதந்திர விஜயத்தை நேற்று முன்தினம் (25 ஆம் திகதி) மாலை ஆரம்பித்தார்.
அவருடன் பிரதி வெளிவிவகார அமைச்சர் காசெம் கரிபாபடி, வெளிவிவகார அமைச்சு பேச்சாளர் இஸ்மாயில் பகாய் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இணைந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் முதலில் பாகிஸ்தானுக்கு விஜயம் செய்ததும் அமெரிக்காவுடனான பேச்சில் பங்குபற்ற விஜயம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதனை அடிப்படையாகக் கொண்டு புதிய எதிர்பார்ப்புகளும் உருவாகின.
ஆனால் அந்தச் சூழலில் ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அராக்ஷி எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கருத்து அந்த எதிர்பார்ப்பை செல்லாக்காசாக்கியது. ‘
தமது விஜயத்தின் நோக்கம் இருபக்க நட்புறவு மேம்பாடு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்கள் குறித்து ஆலோசிப்பதேயாகும்.
அயல்நாடுகளுக்கே முன்னுரிமை அளிக்கிறோம்’ என்பதே அந்த பதிவாகும். அத்தோடு ஈரானிய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் இஸ்மாயில் பகாய்வும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் பங்குபற்றுவதற்கு எந்தத் திட்டமும் இல்லை என்று தெரிவித்தார்.
இருப்பினும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ‘மத்திய கிழக்குக்கான விஷேட பிரதிநிதி ஸ்டீவ் விட்கொப், மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகிய இருவரையும் ஈரானிய குழுவினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட அவசர அவசரமாக பாகிஸ்தானுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்வதாகக் கூறினார்.
இந்தச் சூழலில், பாகிஸ்தான் சென்றடைந்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான குழுவினரை பாகிஸ்தான் விமான நிலையத்தில் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இஷாக் தார், முப்படைத் தளபதி ஆசிம் முனீர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரும் வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானின் இராணுவத் தளபதி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர், உளவுத்துறைத் தலைவர், துணை வெளியுறவு அமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் இடையே ஒரு சந்திப்பு முதலில் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப்புடனும் இக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்பேச்சுவார்த்தைகளின் போது, ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் யுத்த நிறுத்தத்தை கொண்டு வரவும் இரு தரப்பையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வரவும் உழைத்த பாகிஸ்தானின் பணிகளுக்கு வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் முதலில் நன்றி தெரிவித்துப் பாராட்டினர்.
அத்தோடு இருதரப்பு உறவுகளின் மேம்பாடு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் முன்னேற்றங்கள் குறித்தும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
அத்தோடு அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் தாங்கள் பங்குபற்றுவதாயின் தங்கள் தரப்பு நிலைப்பாட்டை அவர்கள் தெளிவாக பாகிஸ்தான் தரப்பினரிடம் எடுத்துக்கூறினர்.
அதன் பின்னர் அவர்கள் திட்டமிட்டபடி, சனிக்கிழமை ஒமானுக்கு பயணத்தை மேற்கொண்டனர். ஈரானிய வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட பிரதிநிதிகள், ட்ரம்பின் பிரதிநிதிகள் பாகிஸ்தானுக்கு வருவார்கள் என்பதை எதிர்பார்க்கவும் இல்லை. அவர்களது வருகைக்காக இவர்கள் காத்திருக்கவும் இல்லை.
இதனால் கோபமடைந்த ட்ரம்ப், ‘ஸ்டீவ் விட்கொப், ஜராட் குஷ்னர், நீங்கள் இருவரும் 18 மணித்தியாலயங்கள் செலவிட்டு இஸ்லாமாபாத்துக்கு போகத் தேவையில்லை. பயணத்திலேயே அதிக நேரம் வீணாகிவிடும்.
அதுமட்டுமின்றி, அவர்களின் தலைமைக்குள் பெரும் உட்கட்சிப் பூசலும் குழப்பமும் நிலவுகிறது.
யார் பொறுப்பில் இருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. மேலும், எல்லா அதிகாரமும் எங்களிடம் உள்ளது.அவர்களிடம் எதுவும் இல்லை. அவர்கள் பேச விரும்பினால், அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் தொலைபேசியில் அழைப்பதுதான்’ என்று ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டார்.
இந்தப் பதிவு வெளியான சொற்ப நேரத்தில் ஈரானிய தரப்பினர், ‘எங்களுக்குள் எந்தவித தலைமைத்துவ சண்டையோ உட்கட்சிப் பூசலோ கிடையவே கிடையாது. நாங்கள் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கின்றோம்’ என்று தெரிவித்தனர்.
இந்தச் சூழலில் அக்சியோசிஸ் தளத்தின் செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், ‘அமைதி முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்ட போதிலும், இந்தப் பயணத்தை இரத்து செய்ததால் ஈரானுடனான போர் தானாகவே மீண்டும் தொடங்கும் என்பது அர்த்தமல்ல. நாங்கள் இன்னும் அதைப் பற்றி சிந்திக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது முன்னெடுத்த யுத்தம், பாகிஸ்தான் மத்தியஸ்தத்துடன் இருவார கால யுத்த நிறுத்தத்திற்கு கொண்டு வரப்பட்டு நடைமுறையில் இருந்த சூழலில் முதலில் கடந்த 11 ஆம் திகதி இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
அதன் விளைவாக கடந்த 13ஆம் திகதி ஹொர்முஸ் நீரிணை முற்றுகையை அமெரிக்க கடற்படை ஆரம்பித்தது. அந்த முற்றுகையை நீக்காத வரையில் பேச்சுக்கு வர மாட்டோம் என்றது ஈரான்.
என்றாலும் பாகிஸ்தான் தொடர்ந்து முன்னெடுத்த முயற்சிகளின் பயனாக இருவார கால யுத்த நிறுத்தம் முடிவுறுவதற்கு முன்னர் 18 ஆம் திகதி இரண்டாம் சுற்றுப் பேச்சு இஸ்லாமாபாத்தில் இடம்பெறுவதற்கான சாதகமான சூழல் உருவானது.
அதற்கான ஏற்பாடுகளை பாகிஸ்தான் விரிவான அடிப்படையில் மேற்கொண்டது. அத்தகைய சூழலில் ட்ரம்ப், ‘ஈரானுடன் ஒரு உடன்படிக்கை எட்டப்பட்டு அமுல்படுத்தப்படும் வரை முற்றுகை நடைமுறையில் இருக்கும்’ எனவும் தமது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். அதனை அடிக்கடி கூறவும் செய்தார்.
ஆனால் கடல் முற்றுகை நீக்கப்படாத வரை பேச்சு கிடையாது என்று ஈரான் மீண்டும் கூறியது. அதனால் 18ஆம் திகதி முதல் இப்பேச்சுவார்த்தை தொடர்ந்தும் பின்னடைவுக்கு உள்ளாகி வருகிறது. கடந்த 24ஆம் திகதி ஈரான் பேச்சுவார்த்தைக்கு திரும்பும் என்ற பலமான எதிர்பார்ப்பு அமெரிக்க தரப்பில் இருந்தது.
இருவார கால யுத்த நிறுத்தம் கடந்த 22 ஆம் திகதி முடிவுறவிருந்த சில மணித்தியாலயங்களில் அதனை மேலும் 48 மணித்தியாலயங்களுக்கு ட்ரம்ப் நீடித்ததோடு வௌ்ளிக்கிழமை 24ஆம் திகதி பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஆனால் அமெரிக்காவும், ஈரானும் தங்கள் தங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்ற பின்புலத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை தொடர்ந்தும் முட்டுக்கட்டை நிலைக்குத் தள்ளியுள்ளது.
இத்தகைய சூழலில் இஸ்லாமாபாத்துக்கு விஜயம் செய்தும், அமெரிக்க பிரதிநிதிகளுடனான பேச்சில் பங்குபற்றுவதை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அராக்ஷி உள்ளிட்ட குழுவினர் தவிர்த்து தங்கள் ஒமான் பயணத்தை மேற்கொண்டனர். ஆனாலும் ட்ரம்ப், போர் நிறுத்தம் தொடரும் என்று சனியன்று அறிவித்தாக பி.பி.சி குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்காவையும் ஈரானையும் பேச்சுவார்த்தை மேசைக்கு மீண்டும் கொண்டு வரும் முயற்சிகளில் ஈடுபட்டுவரும் பாகிஸ்தானின், பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், ஈரான் ஜனாதிபதி மசூட் பெசஸ்கியானுடன் தொலைபேசியில் சனியன்று இரவு உரையாடியுள்ளார். அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரானுக்கு எதிராகத் தங்கள் போரைத் தொடங்கிய பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையிலான ஐந்தாவது உரையாடல் இதுவாகும்.
இச்சமயம் ஈரானிய ஜனாதிபதி, ‘அழுத்தம், அச்சுறுத்தல்கள் அல்லது முற்றுகையின் கீழ் ஈரான் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தாது.
இஸ்லாமியக் குடியரசுக்கு எதிரான தனது விரோத நடவடிக்கைகளை அமெரிக்கா நிறுத்தாத வரை, நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதும் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் காண்பதும் கடினமாகவே இருக்கும்.
கடற்படை முற்றுகையும் மற்ற அமெரிக்க அழுத்தத் தந்திரங்களும் பரஸ்பர நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் இராஜதந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் பெரும் தடைகளாக இருக்கும். அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்களுக்குப் பதிலாக, பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் நம்பிக்கையை வளர்க்கும் அணுகுமுறையை மறுதரப்பு கடைப்பிடித்தால் மட்டுமே பேச்சுவார்த்தைகள் பலனளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இச்சமயம் பாகிஸ்தான் பிரதமர், தற்போதைய தருணம் மிகவும் கால அவகாசம் வாய்ந்தது. அமைதியை உறுதிப்படுத்தவும், பதற்றங்களுக்கு மீண்டும் திரும்புவதைத் தடுக்கவும், ஈரான் வழக்கமான விவேகத்துடனும் ஞானத்துடனும் இவ்வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும்.
ஈரான் போரை நாடவில்லை, மாறாக நியாயம், சமத்துவம் மற்றும் அழுத்தமற்ற அமைதியையே நாடுகிறது என்று பாகிஸ்தான் நம்புவதாகக் குறிப்பிட்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
இதுஇவ்வாறிருக்க, இஸ்லாமாபாத்துக்கான பயணத்தை நிறைவு செய்து கொண்டு ஒமான் பயணித்த ஈரானிய வெளிவிவகார அமைச்சர் எக்ஸ் தளத்தில், ‘போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு நடைமுறைக்கு உகந்த கட்டமைப்பு குறித்த ஈரானின் நிலைப்பாட்டை நான் பகிர்ந்து கொண்டுள்ளேன்’ என்றும், ஆனால் ‘இராஜதந்திரத்தில் அமெரிக்கா உண்மையிலேயே தீவிரமாக உள்ளதா என்பது தௌிவாக இல்லை’ என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் ஒமானில் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட ஈரானிய குழுவினர், ரஷ்யா பயணமாவதற்கு முன்னர் மீண்டும் ஈரான் திரும்பியுள்ளதாக ஈரானிய உத்தியோகபூர்வ செய்தி நிறுவனமான இர்னா நேற்று தெரிவித்தது.
ஈரான் – அமெரிக்க போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பான பிரச்சினைகள் குறித்த வழிகாட்டுதல் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை வெளியுறவு அமைச்சரின் தூதுக்குழு மேற்கொண்டது. அதனால் அப்பேச்சுவார்த்தையில் மீண்டும் பங்குபற்றும் வகையில் இக்குழு ரஷ்ய பயணத்திற்கு முன் தெஹ்ரான் திரும்பியுள்ளது என்றும் அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருக்கின்றது.
ஈரானிய துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை அமெரிக்கா கைவிடும் வரை அந்த நீரிணையை மீண்டும் திறக்கப் போவதில்லை என்று ஈரான் கூற, ஒரு அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான பின்னரே முற்றுகை முடிவுக்கு வரும் என வெள்ளை மாளிகை கூறிவருகிறது. இந்நிலையில் ஈரானிய இஸ்லாமிய புரட்சி காவலர் படையின் மத்திய கட்டளைத் தலைமையகப் பேச்சாளர், வொஷிங்டன் நிச்சயமாக ஒரு பதிலடியை எதிர்கொள்ளும்’ என்று கூறியுள்ளார்.
ஹொர்முஸ் நீரிணை விவகாரத்திலும், ஈரானின் அணுசக்தித் திட்டங்கள் தொடர்பிலும் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் உடன்பாடற்ற சூழல் ஒரு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியுள்ளது. இந்த இழுபறி நிலையானது அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளை முடக்கியுள்ளதோடு, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் பெரும் தட்டுப்பாட்டையும் உருவாக்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய புவிசார் அரசியல் நெருக்கடிகள் உலகப் பொருளாதாரத்தை ஒரு மந்தநிலைக்குள் தள்ளிவிடக்கூடும் என்பதால், இரு தரப்பினரும் பொறுப்புடன் செயல்பட்டு தீர்வுகாண வேண்டும் என்பதே சர்வதேச ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.
-மர்லின் மரிக்கார்–

