கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன், இன்று (29.04.2026) மல்லாகம் நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் நிலவி வரும் காணி பிணக்கு தொடர்பாக, கடந்த 25-ஆம் திகதி ஏற்பட்ட மோதலின் போது அவர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இது தொடர்பாக இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட அவருக்கு, இன்று 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் காசுப் பிணை வழங்கப்பட்டது. அதேவேளை, எதிர் தரப்பினருடன் எவ்வித தொடர்புகளையும் வைத்துக்கொள்ளக் கூடாது என்ற கடுமையான நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதே சம்பவத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணும் இன்றைய தினம் நீதிமன்றினால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தரப்பு நியாயங்களையும் பரிசீலித்த மன்று, விசாரணைகள் முடியும் வரை நிபந்தனைகளுடன் கூடிய பிணையை வழங்கியுள்ளது.

