ஈரான் மீதான அமெரிக்க போர் ஓய்வுநிலையில் நீடிக்கிறது. அமெரிக்க- – இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதல் ஏறக்குறைய தோல்வி நிலைக்குச் சென்று கொண்டிருக்கின்றது. அதற்கான பதில் ஈரானின் பதிலடியின் உக்கிர பரிமாணமாகவே தெரிகிறது.

அமெரிக்காவினாலும், இஸ்ரேலினாலும் போரை முடித்து வைக்கவும் முடியாது, போரில் வெற்றி பெறவும் முடியாது என்பது தெரிந்து விட்டது. அமெரிக்கா இக்கட்டான நிலையில்தான் உள்ளது.

ஈரானின் இராணுவத் தாக்குதல் தீவிரமாக இருந்த அதேவேளை அந்நாட்டின் இராஜதந்திரப் போரும் பலமாகவே உள்ளது.

போரினால் அடைய முடியாதவற்றை சமாதான உரையாடலில் அடைவது இராஜதந்திரத்தின் முதல் இலக்கணம். ஆனால் ஈரானைப் பொறுத்தவரை போரிலும் சமாதானத்திலும் அந்நாடு சமவலுவோடு பங்களித்திருக்கின்றது என்று தெரிகின்றது.

ஈரானிய வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவுக்கு மேற்கொண்ட இராஜதந்திர விஜயம் உலக அரசியலின் அதிக முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. ஐரோப்பிய சர்வதேச உறவுப் பரிமாணத்திற்கு மத்தியில் ஈரானின் வெளிவிவகார இராஜதந்திரம் தனித்துவமான பங்கை வகிக்க ஆரம்பித்திருக்கிறது.

ரஷ்ய ஜனாதிபதி புட்டினை ஈரானிய வெளிவிவகார அமைச்சர் சந்தித்த போது இருவரும் வெளிப்படுத்திய உடல்மொழி இரு நாட்டுக்குமான இராஜதந்திர செய்முறைகளிலும் தனித்துவமானதாக அடையாளப்படுத்தப்படுகிறது.

உலக வல்லரசுகளில் இரண்டாவது நிலையில் இராணுவ ரீதியாக அளவிடப்படும் நாடு ரஷ்யா ஆகும். குறிப்பாக அணு ஆயுதத்தை அதிகம் கொண்டிருக்கும் நாடும் அதுதான். ரஷ்யாவுடனான ஈரானின் உறவானது புவிசார் அரசியல் ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை உக்ரைன் போரிலும், ஈரான் மீதான அமெரிக்கப் போரிலும் கண்டுகொள்ள முடிந்தது.

வெளிப்படையாக அவதானித்தால் ஈரானிய இருப்பை அமெரிக்காவின் இருப்புக்கு சமநிலைப்படுத்தும் கூட்டுக்களோடு ஈரான் இராஜதந்திர பரிபாசையையே நிகழ்த்தி வருகிறது. இதில் சீனாவுக்கும் ஒரு பங்கு உண்டு.

சீனா, வடகொரியா, ரஷ்யா போன்ற நாடுகள் பலமான ஈரானிய ஒத்துழைப்பை வெளிப்படுத்துகிற போது, அமெரிக்க இராணுவ சமநிலை இராஜதந்திர ரீதியில் சமப்படுத்தப்படுவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமன்றி, எதிர்காலத்தில் ரஷ்யா இப்போரில் வகிக்கப்போகும் இராஜதந்திர வகிபாகத்தையும் ஈரானிய வெளியுறவு அமைச்சர் மொஸ்கோவில் தெரிவித்திருந்தார்.

இராஜதந்திரத் தீர்வுக்கான ஒரு சாத்தியக்கூறும், மோதலுக்கான மற்றொரு சாத்தியக்கூறும் எங்களிடம் உள்ளது என்று அவர் கூறினார். இந்த இரண்டு விடயங்களிலும் ரஷ்யா ஒரு முக்கிய பங்கை வகிக்கப் போகிறது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

அடுத்ததாக, ஈரானிய வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவுடனான உறவை பலப்படுத்தியதோடு, அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டின் இலக்கான அணு ஆயுதம் பற்றிய உரையாடலை போர் அரங்கில் இருந்து, இராஜதந்திர அரங்கில் இருந்து முற்றாகவே விளக்கியுள்ளார்.

அத்தகைய சூழல் ஈரானின் அணு ஆயுத உற்பத்தியை சாத்தியப்படுத்த வழிவகுத்து இருக்கின்றது என்பது தெரிகிறது.

ஈரானிய நாடு அணு ஆயுத வல்லரசுகளுடன் ஒத்துழைப்பை அதிகப்படுத்தி இருப்பது அதன் அணு ஆயுதத்திறனை வலுப்படுத்துகின்ற அணுகுமுறையாகவே தென்படுகிறது.

வடகொரியா, பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகள் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்கின்றபோது, அணு ஆயுத வல்லரசுகளுடன் ஈரான் கூட்டுச் சேருவது அந்நாட்டுக்கு பாதுகாப்பைத் தரும் என்பது உண்மை.

எனவே அத்தகைய சூழலை நோக்கியே ஈரான் நகரத் தொடங்கி இருக்கின்றது. அதற்கான இராஜதந்திர செய்முறைகளை கட்டமைத்து வருகிறது.

மேலும் ஈரானை சூழவும், ஹமூர்ஸ் நீரிணையை மையப்படுத்தியும் அமெரிக்க இராணுவ முற்றுகை கட்டமைக்கப்பட்டிருந்தது. அதனை உடைத்தெறிவதற்கான நகர்வுகளை ஈரானிய அரசு சீனா போன்ற நாடுகளின் கப்பல்களை தமது பிராந்தியத்துக்குள் நுழைய அனுமதித்ததன் மூலம் வெற்றிகரமான மேற்கொண்டிருக்கின்றது சாத்தியப்படுத்தியுள்ளது.

அமெரிக்க கடற்படையின் பலத்துக்கு முன்பாக ஈரானிய கடற்படை பலவீனமானது என்பது யாவரும் அறிந்ததே. ஆனால் ஈரான் தனது நட்பு நாடுகளை முன்னிறுத்தி இலகுவாகவே அமெரிக்காவின் கடற்படையுடன் தனது வலுவை சமப்படுத்தி உள்ளது. இது இராஜதந்திரத்தின் முக்கியமான பரிமாணமாகவே தெரிகின்றது.

ஈரான் நாகரிகங்களின் சர்வதேச உறவுக்கான பரிமாணமாக நோக்கப்பட வேண்டும். இதனை ரஷ்ய ஜனாதிபதி வெளிப்படுத்தும் போது “ஈரானிய மக்கள் தங்கள் சுதந்திரம் மற்றும் இறையாண்மைக்காக எவ்வளவு துணிச்சலுடனும் வீரத்துடனும் போராடுகிறார்கள் என்பதை நாம் காண்கிறோம்” என்று புட்டின் கூறினார்.

“அவர்கள் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்துவிடுவார்கள்” என்றும் அமைதி நிலவும் என்று நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். இது மட்டுமல்லாது, ஈரானிய நலன்களுக்கும் பிராந்திய மக்கள் அனைவரின் நலன்களுக்கும் உகந்த அனைத்தையும் ரஷ்யா மேற்கொள்ளும் என்றும் புட்டின் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுடன் ஈரான் மேற்கொண்ட உடன்படிக்கைகள் ஆளில்லாத விமானம், ஆளில்லாத கடல் கலங்கள், ஏவுகணை தொழில்நுட்பம், வான் பாதுகாப்பு தொழில்நுட்பம் போன்றவற்றின் பங்களிப்பை அதிகம் முதன்மைப்படுத்தியிருந்தது. அத்துடன் பொருளாதார ரீதியான ஒத்துழைப்பை பலப்படுத்தும் விதத்தில் வெளியுறவு அமைச்சரின் ரஷ்ய விஜயம் அமைந்திருந்தது.

ஏற்கனவே இஸ்ரேலிய, அமெரிக்க போர் விமானங்களும் உலங்குவானூர்திகளும் சுட்டு வீழ்த்தப்படும் நிலையில், வான் பாதுகாப்பு பலப்படுத்தப்படுமாக இருந்தால் ஏறக்குறைய அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டு போரில் இருந்து ஈரான் தன்னை தற்காத்துக் கொள்வதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டிருக்க முடியும்.

ஈரானின் ரஷ்யாவுடனான உறவானது ஈரானிய இராணுவ இருப்பை பலப்படுத்துவதாக விளங்குகிறது.

எனவே ஈரானின் ரஷ்யாவுடனான உறவு அதன் இராணுவ உத்திகளைப் போன்றே இராஜதந்திர ரீதியிலும் முதன்மையானதாக உள்ளது. அமெரிக்காவுக்கான ஆலோசகர்கள் அமெரிக்காவை ஈரானுடன் நடைபெறும் போரிலிருந்து விலகுமாறு நிர்பந்திக்கின்றனர்.

மறுபுறத்தில் போரில் வெற்றிகளை எட்ட முடியாத ட்ரம்ப் நிர்வாகம் உள்நாட்டிலும் சர்வதேச அரசியலிலும் மேற்குலக சர்வதேச வல்லரசு பரிமாணத்தை இழந்து வருகிறது. ஈரானியர்களின் இராஜதந்திர உத்திகள் வியக்கத்தக்கனவாகவே உள்ளன.

Share.
Leave A Reply