ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனது ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்துள்ளது. 2022 இல் நாட்டில் எழுந்த பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து எழுந்த எதிர்ப்பு உணர்வுகளின் அலையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது.

சுதந்திரத்திற்குப் பின்னர் ஆட்சியில் இருந்த இரண்டு பிரதான அரசியல் சக்திகளை நிராகரித்து மக்கள் தேசிய மக்கள் சக்தியை ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பரந்த பொருளாதார சீர்திருத்தங்கள், சமூக நீதி மற்றும் தூய்மையான அரசியல் என்பனவற்றை உறுதியளித்ததால் மக்கள் அவரது கட்சியை பதவியில் இருத்தினர். இருப்பினும் அவரது நிர்வாகம் இப்போது தவிர்க்க முடியாதபடி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சவால்களை எதிர் கொள்கிறது.

எந்தவொரு அரசாங்கமும் அதன் அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்ற ஒரு வருட காலம் குறுகிய காலமாகும். இருப்பினும் அரசாங்கம் எந்தத் திசையில் செல்கிறது என்பதைக் கணிக்க இது போதுமான காலமாகும். அந்த வகையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முக்கிய வாக்குறுதிகள், அவற்றை நிறைவேற்றிய நிலை என்பனவற்றை ‘டெயிலி மிரர்’ பத்திரிகை ஆராய்ந்து பார்த்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் நிகழ்ச்சி நிரல்:

2024 செப்ரெம்பர் 21ஆம் திகதி நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாக தேர்தல் மேடைகளில் பேசிய தேசிய மக்கள் சக்தி தலைவர்கள், தாம் ஆட்சிக்கு வந்ததும் சர்வதேச நாணய நிதியம் மக்கள் மேல் சுமத்தியுள்ள சுமைகளைக் குறைப்பதற்கு அதனுடன் மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என்று கூறினர்.

ஆனால், புதிய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைப்படி ஏற்கெனவே எடுக்கப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகளை திருத்த முயன்றால், அது பொருளாதார ஸ்திரத்தன்மையை தடம் புரளச் செய்யும் எனக் கருதுவதால், திட்டத்தை அப்படியே முன்னெடுத்து வருகின்றது.

திட்டப்படி அரசாங்கம் 5 சதவீதத்துக்கும் அதிகமான பொருளாதார வளர்ச்சியைத் தக்க வைக்க வேண்டும். ஆனால், வளர்ச்சி வீதம் அதைவிடக் குறைவாகவே உள்ளது.

ஊழல் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தம்:

ஊழலை முடிவுக்குக் கொண்டு வருதல், திருடப்பட்ட சொத்துகளை மீட்டெடுப்பது மற்றும் தவறு செய்பவர்களைத் தண்டித்தல் ஆகியவற்றுக்கான உறுதிப்பாட்டை தேசிய மக்கள் சக்தி பெருமெடுப்பில் பிரச்சாரம் செய்தது.

திருடப்பட்ட சொத்துகளை மீட்டெடுப்பதற்கு ஒரு புதிய சட்டம் இப்போது நடைமுறையில் உள்ளது. ஆனால், திருடப்பட்ட சொத்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறியவும், அப்படி இருந்தால் அவற்றை மீட்டெடுக்கவும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

உகண்டாவில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இத்தகைய திருடப்பட்ட சொத்துகளை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவது குறித்து தேர்தல் காலங்களில் பேசிய தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் நிலந்தி கோட்டஹாச்சி இப்போது ஒரு நகைப்புக்குரிய பொருளாக மாறிவிட்டார்.

பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இரண்டு முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னான்டோ ஆகியோர் இப்போது சிறையில் உள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் உறுப்பினர்களின் சலுகைகளைக் குறைத்தல்:

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகளைக் குறைப்பதாக தேசிய மக்கள் சக்தி தலைவர்கள் சபதம் செய்தனர்.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளான வீடுகள், வாகனங்கள் மற்றும் செயலகப் படிகள் என்பனவற்றை இல்லாதொழிக்கும் ஒரு சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது.

வரி அற்ற சலுகைகளின் கீழ் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருந்த சலுகையும் நீக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் எரிபொருள் நிர்ணயம்:

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தான் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும், மின்சாரக் கட்டணங்களை மூன்றிலொரு பங்கால் குறைப்பதாக உறுதியளித்திருந்தார். அதேபோல, எரிபொருள் விலை விடயத்திலும் செய்வதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால், மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதுடன், மேலும் அதிகரிக்கப்படவுள்ளது. எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான விலைகளை சர்வதேச நாணய நிதியமே தீர்மானிக்கின்றது.

அமைச்சரவை:

தாம் ஆட்சிக்கு வந்தால் 25 பேர் கொண்ட அமைச்சரவையே இருக்கும் என தேசிய மக்கள் சக்தி வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அது சொன்னதற்கும் குறைவாக 21 அமைச்சர்களும், 29 துணை அமைச்சர்களுமே பதவியில் உள்ளனர்.
எரிசக்தி துறை:

எரிசக்தி துறையில் 70 சத வீதம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அடைவதை அரசாங்கம் இலக்கு வைத்திருந்தது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆராய்ச்சி மற்றும் முன்னுரிமைக்காக சில திட்டமிடல் மற்றும் அறிவிப்புகள் நடைமுறையில் இருப்பதாகத் தெரிகிறது. அரசாங்கம் சமீபத்தில் மொனராகலையில் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்தை தொடங்கியுள்ளது.

சட்ட சீர்திருத்தங்கள்:

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. புதியதொரு பயங்கரவாத தடைச் சட்டத்தால் பழைய சட்டம் பிரதியீடு செய்யப்படும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நிறுவுவது என்பது தேசிய மக்கள் சக்தியின் இன்னொரு தேர்தல் வாக்குறுதியாகும். ஆனால் இது இன்னமும் ஒரு உறுதியான வடிவத்தில் உருவாகவில்லை.

மாகாண சபைத் தேர்தல்:

மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்துவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. இருப்பினும், பலமுறை உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், இதுவரை தேர்தலை நடத்துவதற்கான எந்த உறுதியான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குற்றங்களை ஒழித்தல்:

போதைப்பொருள் அச்சுறத்தல் மற்றும் பிற வகையான ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை முடிவுக்கு கொண்டு வருவதாக அரசாங்கம் உறுதியளித்திருந்தது. அது சம்பந்தமான நடவடிக்கைகள் ஓரளவு எடுக்கப்பட்டு வருகின்றன.

பத்திர மோசடி தொடர்பான விசாரணை:

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடந்த மத்திய வங்கி பிணைமுறி மோசடி குறித்து விசாரணைகளை தொடங்குவதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உறுதியளித்திருந்தார். அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூனா மகேந்திரனை சிங்கப்பூரிலிருந்து அழைத்துவர நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி உறுதியளித்திருந்தார்.

இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திரு.மகேந்திரன் தொடர்ந்தும் தலைமறைவாகவே இருந்து வருகிறார்.

Share.
Leave A Reply