அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஏற்பட்டுள்ள கடும் குளிர்கால பனிப்புயலினால் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை நியூயோர்க் நகரில் சுமார் 4 அடி உயரத்துக்கு பனி பொழிந்துள்ளது.
வெள்ளிக்கிழமை இரவு முதல் இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தாமதமாகியுள்ளதாகவும் விமான கண்காணிப்பு நிறுவனம் ஃப்ளைட் அவேர் (FlightAware) தெரிவித்துள்ளது.
ஜோன் எப். கென்னடி, நியூவர்க் லிபர்டி, லாகார்டியா விமான நிலையங்கள் சமூக ஊடகங்களில் பனி எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டு, மேலும் விமான சேவை பாதிப்புகள் ஏற்படலாம் என எச்சரித்துள்ளன.
நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நியூயோர்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், எக்ஸ் தளத்தில்,
“நியூயோர்க் நகரமே, அந்த வெள்ளை பனி வருகிறது! எவ்வளவு பொழிந்தாலும் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என பதிவிட்டுள்ளார்.
நகர விதிகளில் உப்பு தெளிப்பான் வாகனங்கள் மற்றும் பனி அகற்றும் இயந்திரங்கள் முழு வீச்சில் செயல்படும் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
2022-ம் ஆண்டு நியூயோர்க் நகரில் கடைசியாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. அப்போது சென்ட்ரல் பார்க் பகுதியில் 8 அடி உயரத்துக்கு பனி பொழிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த கடும் குளிர் அலை அமெரிக்கா முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென் பிரான்சிஸ்கோ மற்றும் ஆர்லாண்டோ நகரங்களிலும் போக்குவரத்து தாமதமடைந்துள்ளன. வெள்ளிக்கிழமை நியூவர்க் விமான நிலையத்தில் பனி பொழிய ஆரம்பித்தது.
என்பிசி நியூஸ் தகவலின்படி, ஃப்ளோரிடா மாநில விமான நிலையங்களிலும் நூற்றுக்கணக்கான விமானங்கள் தாமதம் அடைந்துள்ளன.
இதற்கிடையே, யோசமைட்டி தேசிய பூங்கா அருகே உள்ள மாமத் மவுண்டன் பனிச்சறுக்கு ஓய்வு விடுதி பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில், இரண்டு பனிச்சறுக்கு பாதுகாப்பு பணியாளர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை முதல் 5 அடி-க்கும் அதிகமான பனி பொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரீனோ நகரத்திற்கு அருகிலுள்ள மவுண்ட் ரோஸ் ஸ்கீ ரிசார்ட் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் புதையுண்ட ஒரு பின்நாட்டு பனிச்சறுக்கு வீரரை உள்ளூர் அதிகாரிகள் உயிருடன் மீட்டுள்ளனர்.

