இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் என்பது உலகின் 80% கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தையும், மூன்றில் ஒரு பங்கு சரக்குப் போக்குவரத்தையும் தாங்கி நிற்கும் உலக பொருளாதாரத்தின் ஒரு உயிர்நாடியாகும்.

இந்தப் பிராந்தியத்தின் மீது மேலாதிக்கத்தைச் செலுத்துவது என்பது உலகப் பொருளாதாரத்தின் சாவியைத் தன் வசம் வைத்திருப்பதற்குச் சமமாகும்.

இதனை உணர்ந்த சீனா, தனது ‘ஒரே பட்டி ஒரே பாதை’ (Belt and Road Initiative) திட்டத்தின் ஒரு பகுதியாக, பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை வடிவமைத்துள்ளது. இது வெறும் பொருளாதார முதலீடு மட்டுமல்ல, ஆசியாவின் புவியரசியல் வரைபடத்தை மாற்றியமைக்கும் ஒரு நுணுக்கமான சதுரங்க நகர்வாகும்.

குவாதர்: மூலோபாய முக்கியத்துவமும் பொருளாதாரப் பின்னணியும்

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள குவாதர், ஒரு இயற்கை ஆழ்கடல் துறைமுகமாகும். இதன் முக்கியத்துவத்தை பல முக்கியக் கோணங்களில் பார்க்கலாம்:

சீனாவின் எரிசக்தி தேவையில் பெரும் பகுதி இந்தோனேசியா-மலேசியா இடையே உள்ள ‘மலாக்கா நீர்சந்தி’ வழியாகவே கடந்து செல்கிறது.

அமெரிக்கா அல்லது அதன் நட்பு நாடுகளுடன் மோதல் ஏற்படும் பட்சத்தில், இந்த குறுகிய பாதை முடக்கப்படலாம். இதற்கு மாற்றாக, குவாதர் துறைமுகத்திலிருந்து நேரடியாக சீனாவின் சின்ஜியாங் மாகாணத்திற்கு செல்லக் கூடிய 3,000 கி.மீ நீளமான ஒரு தரைவழிப் பாதையை (CPEC) சீனா அமைத்து வருகிறது.

தற்போது மத்திய கிழக்கிலிருந்து சீனாவுக்குச் சரக்குகள் செல்ல 45 நாட்கள் ஆகின்றன. குவாதர் – காஷ்கர் தரைவழிப் பாதை பயன்பாட்டுக்கு வந்தால், இது 10 நாட்களாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவின் வர்த்தகப் போட்டித் திறனை உலகளவில் உயர்த்தும்.

பாரசீக வளைகுடாவிற்கும் ஹார்முஸ் நீரிணைக்கும் மிக அருகில் இது அமைந்துள்ளதால், உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் மீது சீனாவின் கண்காணிப்பு மற்றும் பிடி வலுவடைகிறது.

முத்துச்சரம் என்ற (String of Pearls) சீனாவின் சுற்றிவளைப்பு:

சீனாவின் ‘முத்துச்சரக் கொள்கை’ என்பது இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் ஆதிக்கத்தைக் குறைப்பதற்கும், சீனக் கடற்படையின் நடமாட்டத்தை உறுதிப்படுத்துவதற்கும் இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் துறைமுகங்கள் மற்றும் இராணுவத் தளங்களை உருவாக்கும் ஒரு மூலோபாயமாகும். இந்த திட்டத்தில் குவாதர் ஒரு ‘விலைமதிப்பற்ற சொத்தாக’ சீனாவினால் கருதப்படுகிறது.

மியன்மாரின் கியுக்பியு (Kyaukpyu), இலங்கையின் ஹம்பாந்தோட்டை (Hambantota), மாலைதீவின் சில தீவுகள் மற்றும் ஜிபூட்டி (Djibouti) ஆகிய இடங்களில் சீனா தனது கால்தடத்தைப் பதித்துள்ளது. இந்த வரிசையில் மேற்கில் குவாதர் இணைந்தால், இந்தியாவிற்கு ஒரு ‘முழுமையான சுற்றி வளைப்பு’ (Encirclement) ஏற்படுகிறது.

சீனா இத்துறைமுகங்களை வணிக ரீதியானது என்று கூறினாலும், அவற்றின் கட்டுமானம் கனரகப் போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் வந்து செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. குவாதரில் சீனாவின் கடற்படைத் தளம் அமைந்தால், அது அரபிக்கடலில் இந்தியக் கடற்படையின் சுதந்திரமான நகர்விற்குப் பெரும் சவாலாக மாறும் என்று இந்தியா கருதுகிறது.

குவாதரில் சீனா நிறுவும் கண்காணிப்பு ரேடார்கள் மற்றும் மின்னணு உபகரணங்கள், இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள கடற்படைத் தளங்கள் மற்றும் விண்வெளி ஆராய்ச்சி மையங்களின் (ISRO) நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் அபாயம் உள்ளது.

 

உள்ளூர் மக்களின் எதிர்ப்பு மற்றும் சமூக-அரசியல் சவால்கள்

எந்தவொரு திட்டமும் அந்த மண்ணின் மைந்தர்களின் ஆதரவு இன்றி ஒருபோதும் வெற்றி பெறாது. குவாதர் இதற்கு சிறந்த உதாரணமாக உள்ளது:

‘பாகிஸ்தானின் சிங்கப்பூர்’ என்று குவாதர் வர்ணிக்கப்பட்டாலும், அங்குள்ள மக்களுக்கு அடிப்படைத் தேவையான குடிநீர் மற்றும் மின்சாரம் கூட இன்னும் சீராகக் கிடைக்கவில்லை. சீனா கொண்டு வரும் பல பில்லியன் டொலர் முதலீடுகள் பலூசிஸ்தான் மக்களைச் சென்றடையவில்லை என்ற கோபம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனப் பெரும் கப்பல்கள் (Trawlers) பலூசிஸ்தான் கடற்பரப்பில் மீன்பிடிப்பதால், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் பறிபோயுள்ளது. “குவாதர் மக்களுக்கு உரிமை கொடு” (Haq Do Tehreek) என்ற போராட்டம் பல காலமாக அந்தப் பகுதியை ஆட்கொண்டுள்ளது.

பலூசிஸ்தான் விடுதலை இராணுவம் (BLA) போன்ற குழுக்கள் இத்திட்டத்தைச் “சீனாவின் ஏகாதிபத்தியம்” என்று கூறி தாக்குதல்கள் தொடுத்து வருகின்றன. இதனால், இந்த திட்டத்தைப் பாதுகாக்கப் பாகிஸ்தான் அரசு பெரும் நிதியை இராணுவத்திற்குச் செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

புவியரசியல் தாக்கம்: இந்தியாவின் எதிர்வினை

சீனாவின் இந்த முத்துச்சரக் கொள்கையை எதிர்கொள்ள இந்தியா “கழுத்தணி வைரங்கள்” (Necklace of Diamonds) என்ற வியூகத்தைக் கையாள்கிறது.

குவாதருக்குப் போட்டியாக ஈரான் நாட்டில் இந்தியா உருவாக்கி வரும் சபாஹார் துறைமுகம், பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டு ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குச் செல்வதற்கான இந்தியாவின் நுழைவு வாயிலாக உள்ளது.

ஓமான், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இந்தியா தனது கடற்படை வசதிகளைப் பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்துள்ளது. இது சீனாவின் முற்றுகையை உடைக்கும் ஒரு முயற்சியாகும்.

குவாதர் துறைமுகம் என்பது வெறும் சிமெந்து மற்றும் இரும்பினால் ஆன கட்டுமானம் மட்டுமல்ல; அது சீனாவின் உலகளாவிய வல்லரசு கனவின் பிரதிபலிப்பாகும்.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் நிலைத்தன்மை என்பது ஏதேனும் ஒரு தனிநாட்டின் மேலாதிக்கப் பிடியில் சிக்காமல், சர்வதேச விதிகளுக்கு உட்பட்ட சுதந்திரமான மற்றும் திறந்தநிலை கடல்வழிப் பாதையாக (Free and Open Indo-Pacific) பேணப்படுவதிலேயே தங்கியுள்ளது.

சீனாவின் ‘முத்துச்சரக் கொள்கை’ எனும் ஆதிக்க வியூகத்தை, இந்தியா தனது நுணுக்கமான வெளியுறவுக் கொள்கை (Diplomacy) மற்றும் நவீனமயமாக்கப்பட்ட கடற்படை வலிமை மூலம் எந்தளவுக்கு முறியடிக்கிறது என்பதே தெற்காசியாவின் எதிர்காலப் பாதுகாப்பைத் தீர்மானிக்கும் காரணியாகும்.

இந்தப் புவியரசியல் சதுரங்கத்தில் இந்தியா எடுக்கும் தற்காப்பு நகர்வுகள் இப்பிராந்தியத்தின் இறையாண்மையையும்,பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும்

Share.
Leave A Reply