இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசமுறைப் பயணமாக இஸ்ரேல் நாட்டுக்குச் சென்றிருந்தமை அதிக பரபரப்பைத் தந்துள்ளது.

கடந்த 25,- 26ஆம் திகதிகளில் இஸ்ரேலுக்குச் சென்றிருந்த இந்தியப் பிரதமர் இரு நாட்டுக்கும் இடையிலான பாதுகாப்பு, பொருளாதாரம், வர்த்தகம் போன்ற விடயங்களில் பல உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளார்.

இரு தலைவர்களும் நெருக்கமான உறவை வெளிப்படுத்தினர். இந்திய – இஸ்ரேலிய இராஜதந்திர உறவானது சர்வதேச ரீதியில் கூர்ந்து நோக்கப்படுகின்றது.

ஈரான் மீது போர் நிகழ்த்துவதற்கு காரணமாகவும், அமெரிக்காவுடன் கூட்டாகவும் செயல்படும் இஸ்ரேலுடன் இந்தியா வைத்துள்ள நட்பு அதிக விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கும் இஸ்ரேலுக்குமான உறவு நீண்டது. 1950 ஆம் ஆண்டு இஸ்ரேலை இந்தியா அங்கீகரித்தது முதல் இரு நாட்டுக்குமான உறவு படிப்படியாக வளர்ச்சி பெற்றது.

ஆரம்பகால இந்திய ஆட்சியாளர்களை விட பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் இந்திய – இஸ்ரேலிய நட்புறவு பலமானதாக மாறியது.

1990 இக்குப் பின்னர் இரு அரசுகளும் விரிவான பொருளாதார இராணுவ மற்றும் அரசியல் உறவை பலப்படுத்திக் கொண்டன. 1947 ஆம் ஆண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இந்தியா செயல்பட்டாலும், 1950 களில் இஸ்ரேலை அங்கீகரித்ததுடன் இரு நாட்டுக்குமான சுமுக உறவு முக்கிய அம்சமாக மாறியது.

1953 ஆம் ஆண்டு மும்பாய் நகரில் இஸ்ரேலிய உறவை பலப்படுத்தும் நகர்வாக தூதரகம் நிறுவப்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் மோதல் நிகழ்ந்த போதெல்லாம் இஸ்ரேல் இந்தியா பக்கம் இருந்ததோடு ஆயுத தளவாடங்களையும் மருத்துவ உதவிகளையும் உளவுத்துறை ஆலோசனைகளையும் இந்தியாவுக்கு வழங்கியது.

இதனை அடுத்து 1992 ஆம் ஆண்டு இந்தியா டெல்அவிவில் தூதரகத்தை நிறுவியதுடன், இரு நாட்டுக்குமான இராஜதந்திர உறவு பலமானதாக மாறியது. இதனை அடுத்து புதுடில்லியில் அமைக்கப்பட்ட இஸ்ரேலிய தூதரகம் இராஜதந்திர ரீதியான நட்புறவை மேலும் பலப்படுத்தியது.

2019 களில் இந்தியா இஸ்ரேலின் மூன்றாவது பெரிய ஆசிய வர்த்தக கூட்டாளியாகவும் வர்த்தக பங்காளியாகவும் விளங்கியதோடு, உலகளாவிய ரீதியில் பத்தாவது பெரிய வர்த்தக கூட்டாண்மை நாடாக இஸ்ரேல் விளங்கியது.

இராணுவ ரீதியில் ஆயுததளவாடங்களை கொள்வனவு செய்யும் நாடாக இந்தியா விளங்குவதுடன், இருதரப்பு வர்த்தகத்தில் 6.3 பில்லியன் அமெரிக்க டொலர் வர்த்தக உறவு காணப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

2015 ஆம் ஆண்டு புள்ளிவிபரத்தின்படி இரு நாடுகளும் தகவல் தொழில்நுட்பத்திலும் உயிரியல் தொழில்நுட்பத்திலும் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் பரஸ்பரம் விரிவான இருதரப்பு உடன்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றன. தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஒரு வலுவான நட்புறவை சாத்தியப்படுத்தியது.

2022 ஆம் ஆண்டு இராணுவ ஆயுத தளவாடங்களை இஸ்ரேலிடமிருந்து பெறுகின்ற மிகப்பெரிய வாடிக்கையாளராக இந்தியா காணப்பட்டது. இந்தியாவின் இரண்டாவது பெரிய இராணுவ பொருட்களுக்கான கொள்வனவு நாடாக இஸ்ரேல் மாறியுள்ளது. ஏறக்குறைய இஸ்ரேலிய மொத்த ஆயுத ஏற்றுமதியில் 42.1 சதவீதம் இந்தியா இறக்குமதி செய்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு இரு நாட்டுக்குமான நட்புறவு வலுவானதாக காணப்படுகின்றது. ஆனால் ஈரான் மீதான அமெரிக்க போர் சூழல் நிகழ்கின்ற போது இந்திய பிரதமரது இஸ்ரேலிய பயணம் அதிகமான சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.

அவற்றை எல்லாவற்றையும் கடந்து இந்திய பிரதமர் இஸ்ரேலுக்கு மேற்கொண்ட விஜயம் இரு நாடுகளதும் தேசிய நலனை முன்னிறுத்திக் கொண்டதோடு, இந்தியா இஸ்ரேலுடன் இராணுவ ரீதியில் வைத்திருக்கும் நட்புறவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகத் தெரிகின்றது.

இந்திய பிரதமர் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகிற போது தெரிவித்த கருத்துக்கள் அதிக சர்ச்சைமிக்கதாகவே தெரிகின்றது.

குறிப்பாக ஹமாஸ் பயங்கரவாத நடவடிக்கையை மும்பைத் தாக்குதலோடு ஒப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, இஸ்ரேலின் பாலஸ்தீனம் மீதான தாக்குதல்கள் எதனையும் கண்டிக்கவில்லை.

பயங்கரவாதத் தாக்குதல்களை எந்த வகையிலும் சமரசம் செய்ய முடியாது என தெரிவித்த நரேந்திர மோடி, இஸ்ரேலிய தாக்குதலால் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களுக்கு துயரம் தெரிவிக்கவில்லையென்றும், யூதர்களுக்கு மட்டுமே அஞ்சலி செலுத்தியதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஹமாஸ் தாக்குதல் எந்த அளவுக்கு மோசமானதோ, அதே அளவுக்கு மோசமான தாக்குதலாகவே இஸ்ரேலிய தாக்குதலும் அமைந்துள்ளதென்பதை மறுப்பதற்கில்லை.

மோடியின் உரையையடுத்து பதிலுக்கு இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு உரையாற்றும் போது, இந்தியா மட்டுமல்ல இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நண்பனுக்கு அப்பாற்பட்ட சகோதரர் என்று தெரிவித்தார்.

அத்துடன் Speech of Knesset விருதும் வழங்கி பிரதமர் நரேந்திர மோடி கௌரவிக்கப்பட்டார். ஈரான் மீதான போரை முதன்மைப்படுத்தும் இஸ்ரேலின் நடவடிக்கையை தடுத்து நிறுத்துவதற்கு முயற்சிக்கவில்லையென்று இந்திய பிரதமரின் விஜயம் சர்வதேச ரீதியில் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் கூட்டுச் சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுகின்ற போது அதனை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய பிரதமர் முயற்சிக்கவில்லையென்பதே இன்றைய கண்டனங்களுக்குக் காரணமாகும்.

இந்தியப் பிரதமரது இஸ்ரேலிய பயணம் இந்தியாவின் வெளியுறவில் கொள்கையில் அதிக நெருக்கடி மிக்க தருணமாகும்

.ஆனால் இந்தியாவின் இருப்பு என்பது அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளில் தங்கியிருக்கின்றது என்ற அடிப்படையில் இந்த விஜயம் நோக்கப்படுகின்றது. ஆனால் இந்திய நலன்களை வைத்து நோக்குகின்ற போது இஸ்ரேலுடனான இந்திய நட்புறவு அதிக விமர்சனங்களை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாததாகும்.

Share.
Leave A Reply