1980, பிப்ரவரி 18. தமிழகத்தில் எம்.ஜி.ஆர் ஆட்சியை அதிரடியாகக் கலைத்தது மத்திய அரசு.
தன் நண்பர்களுடன் தொலைக்காட்சியில் திரைப்படம் பார்த்துக்கொண்டிருந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆட்சிக் கலைப்பு செய்தியை அறிந்து அதிர்ந்துபோனார்.
உடனிருந்த தன் நண்பர்களிடம், ‘`அண்ணாவின் ஆட்சியைக் கலைச்சுட்டாங்க. மீண்டும் அண்ணாவின் ஆட்சியை நிச்சயம் அமைப்போம்’’ என்று அவர் உணர்ச்சிவயப்பட்டார்!
ஆட்சிக் கலைப்பு தொடர்பாக அறிக்கை ஒன்றையும் எம்.ஜி.ஆர் வெளியிட்டார். அதில், ‘கழகக் கண்மணிகளே… என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே… அண்ணாவின் ஆட்சியைக் கலைத்துவிட்டார்கள்.
தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் கட்டிக்காத்த தமிழ்ச் சமுதாயத்துக்குப் பெரும் சோதனை வந்திருக்கிறது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்’ என்று குறிப்பிட்டிருந்தார் எம்.ஜி.ஆர்.
‘தமிழக சட்டமன்றத் தேர்தல் மே 28-ம் தேதி நடைபெறும்’ என அறிவிப்பு வெளியானது. கூட்டணிச் சேர்க்கையில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டின. மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்து, தி.மு.க – காங்கிரஸ் கூட்டணி மீண்டும் உறுதியானது.
தி.மு.க 112 இடங்களிலும், இந்திரா காங்கிரஸ் 114 இடங்களிலும் போட்டியிடுவது என முடிவானது. எஞ்சிய தொகுதிகள் அப்துல் சமது தலைமையிலான முஸ்லிம் லீக், தேசிய ஃபார்வர்டு பிளாக், பசும்பொன் ஃபார்வர்டு பிளாக், உழைப்பாளர் முன்னேற்றக் கட்சி, இந்திய குடியரசுக் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.
அ.தி.மு.க 177 தொகுதிகளில் போட்டியிட முடிவுசெய்தது. எஞ்சிய இடங்களை சி.பி.எம்., சி.பி.ஐ., ஃபார்வர்டு பிளாக், குடியரசுக் கட்சி (கவாய்), குமரி அனந்தன் தலைமையிலான கா.கா.தே.கா., பழ.நெடுமாறன் தலைமையிலான தமிழ்நாடு காமராஜர் காங்கிரஸ், தமிழ்நாடு முஸ்லிம் லீக் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அ.தி.மு.க ஒதுக்கியது.
ஜனதா கட்சி 95 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டது. 1980, மே 28-31 தேதிகளில் தேர்தல் நடைபெற்று,
ஜூன் 1-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. அ.தி.மு.க 129 இடங்களை வென்று ஆட்சியைக் கைப்பற்றியது.
தி.மு.க 37 இடங்களையும், இந்திரா காங்கிரஸ் 31 இடங்களையும் பிடித்தன. மதுரை மேற்குத் தொகுதியில் வெற்றிபெற்ற எம்.ஜி.ஆர்., இரண்டாவது முறையாக ஜூன் 9-ம் தேதி முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார்.
வேட்டையாடப்பட்ட நக்சலைட்டுகள்!
வேலூர், கடலூர், தருமபுரி ஆகிய பகுதிகளில் நக்சலைட் செயல்பாடுகள் அதிகரித்திருந்தன. ‘சாதி ஒழிப்பு’, ‘வர்க்க விடுதலை’ என்ற முழக்கங்களுடன், ‘அழித்தொழிப்பு’ வேலைகளில் நக்சலைட்டுகள் ஈடுபட்டுவந்தனர்.
பெரும் நிலவுடைமையாளர்களின் வயல்களில் விளைந்த பயிர்களை அதிரடியாக அறுவடை செய்து பொதுமக்களுக்கு விநியோகிப்பது,
கந்துவட்டிக்காரர்களைக் கொன்றொழிப்பது போன்ற செயல்களில் அவர்கள் ஈடுபட்டுவந்தனர்.
‘பாட்டாளி மக்களின் விடுதலைக்காக’ என்று சொல்லி அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைத்தும் சட்டவிரோதமானவை.
ஆகவே, அவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் காவல்துறை மேற்கொண்டது. 1980, ஆகஸ்ட் மாதம், ஏலகிரி மலையடிவாரத்தில் பதுங்கியிருந்த நக்சலைட்டுகள் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்களை ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது, மறைத்துவைத்திருந்த வெடிகுண்டை நக்சலைட்டுகள் வெடிக்கச் செய்தனர்.
அதில், ஜோலார்பேட்டை ஆய்வாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் உயிரிழந்தனர். ஆய்வாளர் பழனிச்சாமியின் இறுதி ஊர்வலம் காட்பாடியில் நடைபெற்றது. அதில், முதல்வர் எம்.ஜி.ஆர் கலந்துகொண்டார்.
நக்சலைட்டுகளை நசுக்குவதற்கு அரசு தயாரானது. அதற்கான சிறப்புக் காவல் படையை அமைக்க எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார்.
நக்சலைட்டுகளுக்கு எதிராக ‘ஆபரேஷன் அஜந்தா’ என்ற வேட்டை தொடங்கியது. ஆய்வாளர் பழனிச்சாமி மகளின் பெயர் அஜந்தா.
அந்த ஆபரேஷனுக்குத் தலைமை வகித்தவர் டி.ஐ.ஜி வால்டர் தேவாரம்.
நக்சலைட்டுகளை விரட்டி விரட்டி வேட்டையாடியது காவல்துறை. அதில் பலர் கொல்லப்பட்டனர். பலர் காணாமல்போன பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
மனித உரிமை மீறலில் காவல்துறை ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதைப் பொருட்படுத்தாமல் காவல்துறையின் வேட்டை தொடர்ந்தது. சில நாள்களில், நக்சலைட்டுகளின் கதை முடிந்ததாகத் தமிழக அரசு அறிவித்தது.
காவிரி தந்த கலைச்செல்வி
அதன் பிறகு, எம்.ஜி.ஆரின் கவனம் உலகத் தமிழ் மாநாட்டை நோக்கித் திரும்பியது. 1981, ஜனவரி 4-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை மதுரையில் உலகத் தமிழ் மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பு வெளியானது.
மாநாட்டு ஏற்பாடுகளை கவனிக்கும் பொறுப்பை செய்தித்துறை அமைச்சர் ஆர்.எம்.வீரப்பனிடம் எம்.ஜி.ஆர் ஒப்படைத்தார்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டது. ஆடல், பாடல், நாடகம், பட்டிமன்றம் என்று பல்வேறு நிகழ்ச்சிகள் பட்டியலிடப்பட்டன.
அதில் முத்தாய்ப்பாக இடம்பெற்றது ‘காவிரி தந்த கலைச்செல்வி’ என்ற நாட்டிய நாடகம். அதை நடத்தவிருந்தவர் செல்வி ஜெயலலிதா.
அதுவரை ஆர்.எம்.வீரப்பனுக்கும் ஜெயலலிதாவுக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்தது. அதன் பின்னணியில் எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக நடிப்பதில் இருந்து நீண்ட தூரம் விலகிச் சென்றிருந்தார் ஜெயலலிதா.
உலகத் தமிழ் மாநாடு மூலம் எம்.ஜி.ஆருடன் மீண்டும் நெருங்கினார் டெல்லிக்குப் பறந்து சென்று, `உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்க வாருங்கள்’ என்று பிரதமர் இந்திரா காந்திக்கு முதல்வர் எம்.ஜி.ஆர் அழைப்பு விடுத்தார்.
ஆனால், சென்னையில் இருந்த எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதியை அவர் நேரில் அழைக்கவில்லை. அவருக்கு மாநாட்டு அழைப்பிதழை அனுப்பிவைத்தார்கள். மாநாட்டைப் புறக்கணித்தார் கருணாநிதி.
‘உலகத் தமிழ் மாநாட்டின் செலவுகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.10 கோடியில், ரூ.2 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றிருக்கிறது’ என்று `பகீர்’ குற்றச்சாட்டைக் கருணாநிதி கிளப்பினார்.
அதையெல்லாம் கண்டுகொள்ளாமல், மாநாட்டைப் பிரமாண்டமாக நடத்தி முடித்தார் எம்.ஜி.ஆர். உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பிரதமர் இந்திரா காந்தி வந்ததன் மூலமாக, காங்கிரஸுடன் இருந்த பிணக்கு தீர்ந்தது என்பதில் எம்.ஜி.ஆருக்குப் பெரும் மகிழ்ச்சி.
‘கொடை வள்ளல்’ எம்.ஜி.ஆர்
சத்துணவுத் திட்டம் தொடங்குவதில் எம்.ஜி.ஆர் ஆர்வமாக இருந்தார். அதிகாரிகளோ, `இந்தத் திட்டம் நீண்டகாலம் நிலைக்காது… கஜானா காலியாகிவிடும்’ என்று நினைத்தனர்.
ஆனாலும், எம்.ஜி.ஆர் அதில் உறுதியாக இருந்தார். 1982, ஜூலை 1-ம் தேதி சத்துணவுத் திட்டம் தொடங்கப்பட்டது.
காமராஜர் கொண்டுவந்த மதிய உணவுத் திட்டம்தான், ‘சத்துணவுத் திட்டம்’ என்ற புதிய வடிவம் பெற்றது.
அதற்கு, பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. பருப்பு, காய்கறிகள் எனத் தரமான உணவு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
காலணி, பற்பொடி போன்றவையும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டத்தை, சென்னைக்கு வந்திருந்த பிரதமர் இந்திரா காந்தி பாராட்டினார்.
இந்தத் திட்டத்தால், பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தது. `அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி’ என்ற நிலையை அடைவதற்கு அந்தத் திட்டம் பயன்பட்டது.
அந்தத் திட்டம் காரணமாக, இரண்டு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது அந்தத் திட்டத்தை விரிவுபடுத்துவதில் இருந்த ஆர்வத்தைக் காட்டிலும், அதை விளம்பரம் செய்வதில்தான் எம்.ஜி.ஆர் அதிக ஆர்வம் காட்டினார்.
குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர் உணவு அளிப்பதைப் போன்ற படங்களுடன் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
திரையரங்குகளிலும் சத்துணவு விளம்பரப் படங்கள் திரையிடப்பட்டன. ஏதோ எம்.ஜி.ஆர்., தனது சட்டைப்பையிலிருந்து எடுத்துக் கொடுத்து திட்டத்தை நிறைவேற்றுவதைப்போல, ‘கொடை வள்ளல்’ பிம்பம் அவருக்கு ஏற்படுத்தப்பட்டது.
அதன் மூலம் நல்ல அரசியல் அறுவடை செய்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் நிழலாக ஜெ.!
உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பிறகு, சத்துணவுத் திட்டத்தைக் கண்காணிப்பதற்கான உயர்மட்டக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட ஜெயலலிதா, தமிழகம் முழுவதும் சென்று சத்துணவின் பெருமைகளைப் பேசிவந்தார்.
அந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் நிழலாக அவர் மாறியிருந்தார். மேடைகளில் அ.தி.மு.க-வின் கறுப்பு, வெள்ளை, சிவப்பு நிறச் சேலை அணிந்து எம்.ஜி.ஆருடன் காட்சியளித்தார்
ஜெயலலிதா. தன்னிடம் ஆட்டோகிராப் கேட்பவர்களிடம், `புரட்சித்தலைவர் புகழ் என்றென்றும் வாழ்க’ என்று எழுதிக் கையெழுத்திட்டார் ஜெயலலிதா.
அவருக்குக் கிடைத்த ஆதரவைக் கண்டு சீனியர்கள் கொந்தளித்தனர். ஆனால், அவரை நேரில் கண்டால் பவ்யமாக எழுந்து நின்றனர்.
அந்த நேரத்தில் ஜெயலலிதா தொடங்கிய சூறாவளிச் சுற்றுப்பயணம், கட்சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தியது.
அ.தி.மு.க-வில் சேர்ந்்த ஏழே மாதங்களில் 1983, ஜனவரியில் அ.தி.மு.க-வின் `கொ.ப.செ’ (கொள்கை பரப்புச் செயலாளர்) என்ற பதவியை ஜெயலலிதாவுக்குப் பரிசாக அளித்தார் எம்.ஜி.ஆர்.
அவர் வரும்போதெல்லாம் அ.தி.மு.க தலைமை அலுவலகம் திருவிழாக்கோலம் பூண்டது. ஜெயலலிதாவைச் சந்திக்கவும், கூட்டங்களுக்கு அவரிடம் தேதி வாங்கவும் அ.தி.மு.க-வினர் முண்டியடித்தனர்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, உலகத் தமிழ் மாநாட்டுக்குப் பிரதமர் இந்திரா காந்தி வருகை தந்ததால் மனம் குளிர்ந்திருந்த எம்.ஜி.ஆர்., இப்போது மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்த வீதிக்கு வந்தார்.
1983, பிப்ரவரி 9-ம் தேதி காலை 10 மணியளவில், அண்ணா சமாதிக்குச் சென்று உண்ணாவிரதப் போராட்டத்தை எம்.ஜி.ஆர் தொடங்கினார். ஒட்டுமொத்தத் தமிழகமும் பரபரப்பானது. டெல்லி அதிர்ந்தது
(இன்னும் அறிவோம்)
ஆ.பழனியப்பன்

