நீண்டகாலமாக மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தடுக்க, சீனா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் ஈரானுடன் இரகசியமாக கைகோர்த்து Axis of Evasion என்ற கூட்டணியை அமைத்துச் செயற்படுவதாக சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வருகிறது.

ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி தாக்குதல் தொடங்கியதிலிருந்து சீனாவும் ரஷ்யாவும் மாறி மாறி கண்டனம் தெரிவித்து வருகிறது.

எனினும், அந்த நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக களத்தில் இறங்கவில்லை என்பதை வெவ்வேறு தரப்புகள் அவதானித்து வந்தன.

ஈரானுக்கு பல வழிகளில் ஒத்துழைப்பு வழங்கக்கூடிய சீனா, ரஷ்யா போர் நடவடிக்கையில் உதவிக்கு வராதது குறித்து பல்வேறு தளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டன.

போர்க்காலச் சூழலில் ஈரான் விடயத்தில் சீனாவும் ரஷ்யாவும் ஒதுங்கியிருப்பது போல் வெளியே காட்டிக்கொண்டாலும், பல்வேறு உதவிகளையும் ஒத்துழைப்புகளையும் மறைமுகமாக இரு நாடுகளும் ஈரானுக்கு வழங்கி வருவது தெரியவந்துள்ளது.

Axis of Evasion கூட்டணியின் மறைமுக செயற்பாடுகள்

எண்ணெய் வர்த்தகம் : ஈரான் மற்றும் ரஷ்யாவின் தடையில் உள்ள மசகு எண்ணெயை சீனா இறக்குமதி செய்கிறது.

நிழல் கப்பற்படை : தடைகளை மீறி எண்ணெயைக் கடத்த இரகசியக் கப்பல் போக்குவரத்துகள் பயன்படுத்தப்படுகின்றன.

மாற்றுப் பணப்பரிவர்த்தனை: மேற்கத்திய நிதி அமைப்புகளுக்கு வெளியே, பண்டமாற்று முறை மற்றும் பிற இரகசிய பணப்பரிமாற்ற வழிகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இரட்டைப் பயன்பாட்டுத் தொழில்நுட்பம் : சிவில் மற்றும் இராணுவத் தேவைகள் என இரண்டுக்கும் பயன்படக்கூடிய தொழில்நுட்பங்களைச் சீனா ஈரானுக்கு வழங்குகிறது.

போருக்கு பின்னால் ஈரான் – சீனா – ரஷ்யா  கூட்டு 

ஈரான் மீது அமெரிக்கா தடை உத்தரவு பிறப்பித்திருந்தாலும், அதையும் மீறி, ஈரானிடமிருந்து மசகு எண்ணெய்யை சீனா இறக்குமதி செய்து வருகிறது. அதற்கு பதிலாக, நவீன தொழில்நுட்பங்கள், மின்னணு உதிரிப்பாகங்களை ஈரானுக்கு சீனா ஏற்றுமதி செய்கிறது.

மேற்கத்திய நாடுகளில் தயாரிக்கப்படும் சிவிலியன் பயன்பாட்டு உதிரிப்பாகங்கள், சீன விநியோகத்தர்கள் வழியாக ஈரான் இராணுவத் தொழிற்சாலைகளுக்குச் செல்கின்றன.

அதேபோன்று ரஷ்யாவானது ஈரானின் ஷாஹெத் ரக ட்ரோன்களை உக்ரைனுடனான போருக்கு பயன்படுத்தி வருகிறது.

ஈரான் தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் தொழிற்சாலைகள் ரஷ்யாவில் இயங்கி வருகின்றன.

ரஷ்யாவின் Garpiya-3 போன்ற நவீன ட்ரொன்களை உருவாக்க சீன நிபுணர்கள் உதவி செய்து வருகின்றனர்.

ஈரான் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன் தாக்கதல்களை நடத்துகிறபோதெல்லாம் அந்த ஏவுகணைகள், ட்ரோன்கள் அவற்றின் இலக்கை எட்ட, சீனாவின் BeiDou செயற்கைக்கோள் அமைப்பு வழிகாட்டுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஈரானிய ஏவுகணைகளுக்கான திட எரிபொருள், வெடிமருந்துகள் தயாரிப்பதற்கு தேவைப்படும் வேதிப்பொருட்கள் கூட சீனாவிலருந்தே ஈரானுக்கு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இந்தத் தாக்குதலுக்கு ஈரான் நாடானது ரஷ்யா தயாரித்த ட்ரோன்களையே பயன்படுத்துவதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.

ஆக, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் நடத்தும் தாக்குதல்களுக்கு சீன – ரஷ்ய கூட்டணியான Axis of Evasion மறைமுகமாக பெரிதும் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது.

 

Share.
Leave A Reply